வாசிப்பு என்பது வேறு வாசிப்பு அனுபவம் வேறு. எதைசெய்தாலும் சூழ்நிலைகளின் நிர்ப்பந்தகளின்றி ஈடுபாடுகொள்கிறபோதுதான் அக்காரியத்திற்கும் கருப்பொருளுக்கும் பெருமை கர்த்தாவுக்கும் மகிழ்ச்சி. வாசிப்புக்கும் இது பொருந்தும். பள்ளி கல்லூரி நாட்களில் தேர்வுக்காக ஒன்றை பாடத்திட்டங்களில் இருந்து தொலைக்கிறதேயென்று வாசிக்கவேண்டிய நிர்ப்பந்தமுண்டு. அதை விடுத்து வெளியில் வருகிறபோது அதாவது வளர்ந்து பெரியவர்களாகிறபோதும் அவற்றை வாசிக்க நமக்கு ஆர்வம் இருக்கிறதா என்ற கேள்வி முக்கியம். பொதுவில் பலருக்கும் மீண்டும் அவற்றை வாசிப்பதென்பது நிகழ்வதில்லை. சங்க இலக்கியங்களாயினும் சரி காப்பியங்களாக இருந்தாலும் சரி, நவீன படைப்புகளாக இருந்தாலும் சரி, ஏனைய பிறவாக இருந்தாலும் சரி அவ்விலக்கியங்கள் ஓர் ஈர்ப்பினை கொண்டிருந்தாலன்றி மறுவாசிப்புக்கு உட்படுவதில்லை. தமிழில் இவ்வளவு இலக்கியங்கள் குவிந்துள்ளபோதும் ஏன் ஒரு சிலவற்றை திரும்பத் திரும்ப ஆராதிக்கிறோம் என்ற கேள்வி எழுகிறது. கம்ப இராமயணமும், திருக்குறளும், சிலப்பதிகாரமும் பிறவற்றிடமிருந்து எவ்வாறு வேறுபடுகிறது? திருவெம்பாவையைக் காட்டிலும் திருப்பாவையை போற்றுவதேன்? யோசிக்க வேண்டியிருக்கிறது.
வாசிப்பனுவம் என்பது வேறு: வழக்கறிஞர்கள் சட்டப்புத்தகங்களை பிரித்து பார்ப்பதுடனோ, அறிவியலறிஞர்கள் துறைசார்ந்த இதழ்களைப் புரட்டிப்பார்ப்பதுடனோ; பேராசிரியர்கள் வகுப்பில் பாடமெடுப்பதற்காகவென்றே கல்விக்கூட நூலகத்திற்குள் நுழைவதுடனோ அதனை ஒப்பிடமுடியாது. இவைகளெல்லாம் ஏற்கனவே கூறியதைப்போன்று, பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தேர்வுக்காக வாசிக்கும் மனநிலைக்கு உரியவை. தளைகளின்றி வாசிக்க வேண்டும். நிர்ப்பந்தகளின்றி பக்கங்களை புரட்டவேண்டும். புத்தகத்தை கையிலெடுத்தேன் வாசித்து முடித்தேன் என்ற உந்துதலுடன் வாசிப்பு நிகழ்த்தப்படவேண்டும். உலகில் இன்று ஓகோவென்று கொண்டாடப்படும் இலக்கியங்கள் இச்சூத்திரத்திற்குள் ஒடுங்குபவைதான்.
வாசிப்பனுவமென்பது வாசகன், வாசிக்கப்படும் படைப்பென்ற இருவர் கூட்டணியால் உருவாவாது. அவர் சொன்னாரென்றோ, நல்ல விமர்சகர் எழுதினாரென்றோ, விற்பனையில் சாதனை படைத்தது என்பதற்காகவும் ஒரு நூலை உடனடியாக வாங்கிவிடலாம், எடுத்து ஒரு நாள் படிக்கவும் தொடங்கலாம் ஆனால் அதனை முடிப்பதென்கிற மன உந்துதலுக்கு இவை மட்டுமே காரணிகளாகிவிடமுடியாது. கையிலெடுத்த நூலை தொடர்ந்து வாசிப்பதற்கான விருப்பத்தை ஏற்படுத்தித் தரவேண்டிய பொறுப்பு படைப்புக்கு உண்டு.
என்னிடத்திலும் வாசிக்க ஆரம்பித்து முடிக்காத புனைவுகள் பல இருக்கின்றன. இக்காரணங்கள் உங்களுக்குப் பொருந்துமாவென்று தெரியாது. என்னை தொடர்ந்து வாசிக்கத் தூண்ட ஒருபடைப்பிற்கு கீழ்க்கண்ட குணங்கள் இருக்கவேண்டுமென நினைக்கிறேன். அல்லாதவற்றை நிராகரித்திருக்கிறேன், அல்லது அதற்கான மனநிலை வருகிறபோது வாசிக்கலாமென தள்ளிப்போடுகிறேன்:
1. சொல்லப்படும் கதையில் உயிர்ப்பு ஒருக்கவேண்டும். அது இறப்பை பற்றியதாக இருந்தாலுங்கூட.
2. சொல்லப்படும் நடை புதியதாக அதாவது பிரத்தியேகமாக இருக்கவேண்டும்.
3. தேவைக்கதிகமாக அல்லது தேவையின்றி சிலவற்ற சிலாகித்து எழுதிக்கொண்டிருப்பது. உதாரணம் மலத்தைக்குறித்து பக்கம் பக்கமாக பேசுவது.
—-
4. படைப்பில் அரும் அத்தனை பாத்திரங்களிலும் ஆசிரியர் கூடுபாய்வது தப்பில்லை. ஆனால் அவ்வளவுபேரின் பேச்சிலும் புத்திஜீவியென்கிற ஆசிரியனின் நினைப்பும் உடன் கூடுபாய்ந்திருக்குமானால் ஆபத்து.
5. நூலாசிரியர் தமது முடிவுகளையும் நம்பிக்கைகளையும் ஒற்றைக்குரலில் வாசகர்களிடம் திணிப்பது. காந்தியத்தின் மீது நம்பிக்கை இல்லை, கம்யூனிஸத்தின் மீது நம்பிக்கை இல்லை. தாராளமாக அவர் கட்டுரைகள் எழுதட்டும். பத்தி எழுதட்டும். ஆனால் ஒரு புனைவில் பக்கங்கள் தோறும் எழுதிக்கொண்டிருந்தால் தூக்கிப்போட்டுவிட்டு எழுந்திடுவேன்.
——