காந்தி மட்டுமல்ல காந்தியை கொன்ற கோட்சேவும் வரலாறில் இடம் பெறுகிறான். பேசப்படுகிறான். சர்வாதிகாரிகளும் வரலாற்றில் வருகிறார்கள் ஜனநாயகவாதிகளும் வரலாற்றில் பேசப்படுகிறார்கள். திருடர்களும் பேசப்படுகிறார்கள் உத்தமர்களும் பேசப்படுகிறார்கள். யுகங்கள் தோறும் புழுக்கள்போல பூச்சிகள்போல விலங்குகள்போல பறவைகள் போல கண்டங்கள் தோறும் மனிதர்கள் பிறக்கிறார்கள் இறக்கிறார்கள். நூறு குடும்பங்கள் இருக்கிற கிராமத்தில் ஒன்றிரண்டு குடும்பங்களைச் சுற்றி அக் குடும்பங்களைச் சேர்ந்த ஒன்றிரண்டு ஆண்களைச்சுற்றி அவர்கள் வீட்டுப் பெண்களைச்சுற்றிய பேச்சாக கிராமத்து வாழ்க்கை ஒருகாலத்தில் இருந்தது: நல்லதும் கெட்டதும், அடிதடியும் பஞ்சாயத்தும், திருவிழாவும் தேரும் அப்பெரிய குடுபத்தின் பேச்சை- மறுபேச்சைக்கொண்டே இயங்கும். குடிப்பிள்ளைகளோடு மிராசுகள் வலம் வந்தார்கள். அக்கிராமத்தை பொறுத்தவரை மிராசுதான் நாயகன். ஊர்மக்களின் தினசரியில் அவர்களதுபேச்சில் அப்பெரிய மனிதரின் (அவர் நல்லவரென்ற பொருளுக்கு அக்காலத்திலும் உத்தரவாதமில்லை) இருப்பை விலக்கி அவர்கள் உரையாடமுடியாது.
கிராமத்தைக்கடந்த நகரத்திற்கும், நகரத்தை முன்வைத்து இயங்கிய அரசாங்கத்திற்கும் மைய உரையாடலாக முடியாட்சியில் மன்னர்கள் இருந்தார்கள். முடியாட்சியில் மனித குலத்தின் இயக்கம் இயற்கையைக் காட்டிலும் மன்னர்களைச் சார்ந்ததென்று கற்பிதம் செய்யப்பட்டதால் அரசர்களின் வரலாறே நமது அரசியல் வரலாறாகவும் மாறிற்று. அவர்களின் கமறலும் தும்மலுங்கூட இலக்கியங்களாயின. பரிசிலுக்காக எழுதப்பட்ட இலக்கியங்கள் வரலாறுகளாக திரிக்கப்பட்டன, மன்னர்கள் வரலாறானார்கள். காலம் மாறியது மக்களாட்சி என்றார்கள், தொழிலாளர் புரட்சி என்றார்கள். உலகில் பெரும்பாலான நாடுகளில் மன்னர் ஆட்சிமுறை இன்றில்லை. ஜனநாயகம் பிறந்தது. நீங்களும் நானும் நாளை கிரீடம் சூட்டிக்கொள்ளளாம் ஜனநாயகம் அப்படித்தான் சொல்கிறது. பரம்பரை வரலாற்றை எழுதிய மன்னர்களையும் சக்கரவர்த்திகளையும் ஜமீன்களையும், பிரபுக்களையும் குடியரசு அமைப்புமுறை புரட்டிபோட்டது. இங்கேயும் பேச்சுதான் தலைப்பொருள்: முடியாட்சியின் வரலாறு மன்னரைப் பற்றிய மற்றவர்கள் பேச்சால் தீர்மானிக்கப்பட்டதெனில் ஜனநாயகத்தின் வரலாறு ஆளுகின்றவனின் பேச்சால் தீர்மானிக்கப்படுகிறது. எவன் ஒருவன் பெரும் திரளான கூட்டத்தை தன்பக்கம் திருப்பும் வல்லமை பெற்றிருக்கிறானோ அவன் தலமை ஏற்கிறான். பிறகாரணிகளைக்காட்டிலும் இப்பேச்சு அவன் வரலாற்றையும் அரசியல் வரலாற்றையும் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுக்கிறது. இன்று ஜனநாயகத்திற்கும் சவால் விடும்வகையில் தகவல் தொழில் நுட்பங்கள் என்றதொரு சக்தி வரலாற்றில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. பேச்சினை தொடங்கிவைக்கவும் மறுபேச்சுக்கு வாய்ப்பளித்தும் முடிவற்ற உரையாடலை நடத்தியும் மனித குலத்தை வழிநடத்திகொண்டு இருக்கின்றன. நீங்களும் நானுங்கூட உலக நாயகனென்றோ சூப்பர் ஸ்டார் என்றோ, உலகத்தமிழர்களின் ஒரே தலைவனென்றோ நமது பேச்சை கொட்டாம் பட்டியிலிருந்தபடியும் பதிவு செய்யலாம், ஹ¥ஸ்டனிலிருந்தும் பதிவுசெய்யலாம். அது பற்றிய விவாதத்தைத் தொடங்கலாம் அல்லது தொடங்காமல் விடலாம். ஒரு கணப்பொழுதில் நீங்களும் நானுங்கூட மீடியாக்கள் மனது வைத்தால் வரலாற்றில் சில பக்கங்களை நிரப்பலாம் என்பதுதான் இன்றைய வரலாற்றில் ஏற்பட்டுள்ள திருப்பம்.
இச்சம்பவம் நடந்து ஒரு நூற்றாண்டு முடிந்திருக்கிறது. அச்சம்பவதைப்பற்றிய மறுபேச்சில் மும்முரமாக பிரெஞ்சு தினசரிகள் இறங்கியிருக்கின்றன. ஒரு சராசரி மனிதனின் அசாதாரண செயலை எப்படி வரலாறாக செய்திகள் கட்டமைக்கின்றன என்பதற்கு இதோர் நல்ல உதாரணம்.
1911ம் ஆண்டு ஆகஸ்டுமாதம் 21ந்தேதி. ஒரு திங்கட்கிழமை காலை 7 மணி. மோனாலிஸா பாரீஸ் லூவ்ரு அருங்காட்சியகத்தில் திருடுபோனது. அதாவது கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு. Vincenzo Perruggia பிறப்பால் இத்தாலி நாட்டைச்சேர்ந்தவன். வயது 30. பிரான்சு நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் ஒரு தொழிலாளி. சுவருக்கு வெள்ளை அடிப்பது தொழில். லூவ்ரு அருங்காட்சியகத்திற்குள் நுழைகிறான். அவன் தேர்ந்தெடுத்த வாயில் பார்வையாளர்கள் நுழைவாயிலல்ல, சேன் நதி பக்கம் சுமைவாகனங்களின் உபயோகத்திற்கென்றிருந்த வாயில். அவனுக்கு அவ்விடம் புதியதல்ல. எப்படி போகவேண்டும் எங்கே போகவேண்டும் என்று நன்குதெரியும். சம்பவம் நடப்பதற்கு முந்தைய வருடம் அப்புகழ்பெற்ற ஓவியத்திற்கு வெகு அண்மையில் அவன் வேலைசெய்யவேண்டியிருந்தது. அப்போதே ஓவியந்த்திற்காக வாய்பிளந்து நிற்கும் கூட்டத்தைக் கண்டு பிரம்மித்திருந்தான்.
‘Une Femme disparaît’ (ஒரு பெண்மணி காணாமற்போகிறாள்) என்ற நூலாசிரியரும் பிரெஞ்சு பத்திரிகையுலகத்தைச் சேர்ந்தவருமான ஜெரோம் குவாஞ்ஞார், “Perruggia ஓவியம் சுவரில் எவ்வாறு பொறுத்தப்பட்டுள்ளதென்பதை நன்றாகவே அறிவான்”, என்கிறார். ஆம்.. ஒரு சில நொடிகளில் அந்த ஓவியம் திருடப்பட்டது. நான்காண்டுகாலத்தை அதற்குத்தந்து (1502-1506) டாவின்சியென்ற இத்தாலியரால் எழுதப்பட்ட அப்புகழ்பெற்ற ஓவியத்தை திருடியவன், இறங்கும்போது படிகட்டுகளின் கீழ் ஒரு மறைவிடத்தைக் கண்டான். அங்கேயே ஓவியத்தை சுற்றியிருந்த சட்டங்களை கவனமாக அகற்றினான். பின்னர் அதனைச் சுருட்டி தனது மேலங்கியில் மறைத்து அதிகம் அலட்டிக்கொள்ளாமல் வெளியிற் கொண்டு வந்தான்.
மறுநாள்காலை இரண்டு ஓவியர்கள் அருங்காட்சியகத்திற்கு திருடுபோன ஓவியத்தைப் பார்த்து வரைவதற்கென வந்திருக்கிறார்கள். ஓவியமிருந்த இடத்தில் இருந்தற்கான சுவடுகள் மட்டுமே இருந்தன, நிர்வாகிகள் எதற்கேனும் கொண்டுபோயிருப்பார்களோ? என நினைத்தார்கள். காத்திருந்தார்கள். நேரங்கூடக் கூட பொறுமை இழந்தார்கள். நிர்வாகிகளிடம் முறையிட்டார்கள், இதற்கிடையில் ஓவியத்தின் சட்டங்களை கண்டெடுத்ததாக செய்தி. இப்போது நிர்வாகத்திற்கு பிரச்சினையின் விஸ்வரூபம் தெளிவாயிற்று. பாரீஸ் காவல்துறையின் தலமை அதிகாரி பிரச்சினையை நேரிடையாகக் கையாண்டார். உடனடியாக அருங்காட்சியகத்தின் வாயில்கள் அடைக்கப்பட்டு பார்வையாளர்கள் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பிரெஞ்சு பத்திரிகை உலகிற்கு மெல்லுவதற்கு அவல் கிடைத்திருந்தது. அருங்காட்சியகத்தின் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுந்தன. பாராளுமன்றத்தில் கேள்வி- சம்பந்தப்பட்ட அமைச்சரின் வழக்கமான பதில். முடிவில் அருங்காட்சியகத்தின் இயக்குனரை பதவியிலிருந்து நீக்கினார்கள். இத்தனைக்கும் அவர் ஒரு வருடத்திற்கு முன்பே அருங்காட்சியகத்தின் பாதுகாப்பை நவீனப்படுத்தவேண்டும், காவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும் என்றெல்லாம் தமது துறைக்கு எழுதியிருந்தார். எல்லா நாட்டிலும் சிதம்பரங்கள் உண்டு. பிரான்சிலும் அன்றைக்கு ஒருவர் இருந்திருக்கிறார். அருங்காட்சியகத்தின் இயக்குனரை தண்டித்த கையோடு பாதுகாப்பு கோரிக்கையை தூசுதட்டி பரிசீலித்தார்கள்.
உலகின் முதல் தடவியல் துறை சோதனைக்கூடத்தை உருவாக்கிய அல்போன்ஸ் பெர்த்திய்யோன் என்பவரிடம் புலன்விசாரணை பொறுப்பை ஒப்படைத்தார்கள் அவர் ஓவியத்தின் சட்டத்திலிருந்து குற்றவாளியின் இடதுகை பெருவிரலை எடுத்திருந்தார். அப் பெருவிரல் ரேகையை அருங்காட்சியகத்திலிருந்த பதிவேடுகளில் ஒப்பிட்டுப்பார்க்க தவறினார். அங்கு வேலைசெய்யவரும் தொழி¡ளர்களின் கைவிரல்ரேகையையும் பதிவு செய்வது வழக்கம். இது வெளி ஆட்கள் வேலையாக இருக்கலாமென்ற கணிப்பில் அதனைச் செய்யத் தவறிவிட்டார். காவல் துறை ஓவியத்தை திருடினவன் தனியொருவனல்லவென்றும் பன்னாட்டு திருட்டுக்கூட்டமொன்று பின்னணியில் இருக்ககூடுமென்றும் நம்பியது.
இதில் வேடிக்கை என்னவெனில் புகழ் பெற்ற பிரெஞ்சுக்கவிஞரான கியோம் அப்போலினேரை அவ்வழக்கில் சந்தேகித்தார்கள். அதற்குக் காரணமுமிருந்தது. இத்திருட்டு நடப்பதற்கு இரண்டுவருடங்களுக்கு (1907) முன்பு அவருடைய பெல்ஜிய கூட்டாளியொருவன் லூவ்ரிலிருந்து சிலைகளைத் திருடிக்கொண்டுபோய் பிக்காஸோவிடம் கொடுத்திருக்கிறான், அவற்றினை ஆதாரமாக வைத்து சில ஓவியங்களையும் பிக்காஸோ வரைந்திருக்கிறார். போலீஸ் பிடி அப்போது இறுகவே, அப்போலினேர் பிக்காஸோவிடம், சிலைகளைத் திருப்பி கொடுத்தால் தண்னடனையிலிருந்து தாம் மீளமுடியுமென வற்புறுத்த பிக்காஸோ சிலைகளிரண்டையும் அப்போது பாரீஸில் புகழ்பெற்றிருந்த Le Petit journal என்ற தினசரியின் அலுவலகத்தில் ரகசியமாக ஒப்படைக்க பின்னர் காவல்துறை கைப்பற்றி அருங்காட்சியகத்திடம் கொடுத்ததென்பது பழைய செய்தி. இதுபற்றிய தகவலை அப்போது தினசரி ரகசியமாக வைத்திருந்ததாம். எனவே மோனாலிசா திருட்டின்போதும் அப்போலினேர் கைது செய்யப்பட்டார். எட்டு நாட்கள் சிறையில் வைத்திருந்து பின்னர் விடுதலை செய்தனர்.
இரண்டு ஆண்டுகள் ஓவியத்தை Peruggia பாரீஸிலுள்ள தமது குடியிருப்பில் மறைத்து வைத்திருந்தான், அதன் பின்னர் இத்தாலி நாட்டிலுள்ள அரும்பொருள் வியாபாரிகளுக்கு எழுதிய கடிதத்தில் ‘தம்மிடம் இத்தாலி நாட்டிற்குச் சொந்தமான தேசிய மதிப்புவாய்ந்த பொருளொன்று இருப்பதாகவும், தகுந்த விலைக்கு விற்க தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கிறான்.
1913ம் ஆண்டு டிசம்பர்மாதம், அல்பிரெடோ கெரி என்கிற இத்தாலிய வியாபாரி Peruggia வை ஓவியத்துடன் பிளாரன்ஸ¤க்கு வரும்படி கேட்டுக்கொள்கிறார் வரும்போதே வியாபாரி இத்தாலி நாட்டு அருங்கலைத்துறை இயக்குனரையும் உடன் அழைத்து போகிறார். திருடப்பட்ட ஓவியத்தைப் பார்த்ததும் அவர்கள் நம்பிக்கை வீண்போகவில்லை பாரீஸில் திருடுபோன ஓவியமென்று புரிந்தது. Peruggia கைது செய்யப்படுகிறான். இத்தாலி நாட்டில் விசாரணை நடக்கிறது. தேசப்பற்றுகாரணமாக திருடினேன் என அவன் கூறியிருந்தான். அதாவது இத்தாலி நாட்டுக்குச் சொந்தமான பொருளை பிரான்சுநாட்டின் அருங்காட்சியகத்தில் பார்க்க அவனுக்கு விருப்பமில்லை. விசாரணையின் முடிவில் குற்றவாளிக்கு ஓர் ஆண்டு பதினைந்து நாட்கள் சிறை விதித்து தீர்ப்பாகிறது பின்னர் அதுவும் ஏழுமாத சிறைதண்டனையாகக்குறைந்தது. ஆகத் தேசப்பற்றுடன் திருடலாம். குற்றவாளியை விசாரித்த உளவியல் அறிஞர்கள் அவனிடம் சராசரி மனிதனுக்குள்ள குணங்களே இருந்தன முரண்களில்லை என்றார்கள். இப்பிரச்சினையை அடிப்படையாகக்கொண்டு புலன் விசாரணை செய்து எழுதப்பட்ட நூல் சம்பவத்தின் பின்புலத்தில் அப்போது ஜெர்மன் இருந்ததாகக் குற்றம் சாட்டுகிறது.
மோனாலிஸா இத்தாலி நாட்டுக்குச் சொந்தமான ஓவியமென்றாலும். மறுமலர்ச்சி காலத்தில் முதலாம் பிரான்சுவா என்கிற பிரெஞ்சு மன்னனிடம் அதை வரைந்த டாவின்சி விற்றிருந்தார். எனவே மீண்டும் ஓவியம் உடையவர்களிடம் சேர்ப்பிக்கப்பட்டது.
—-