மனுநீதிச் சோழனும் மரண தண்டனையும்

சிரமறுத்தல் வேந்தருக்கு பொழுதுபோக்கு மற்றவர்க்கோ உயிரின் வாதை” என்பது பாரதிதாசனின் வரி. இன்றைக்கு வேந்தர்களில்லை, அவர்களிடத்தில் தலிபான்கள், பேட்டை ரவுடிகள் அவர்களின் புரவலர்களான அரசியல்வாதிகள் போக சிந்தனையிலும் பண்பாட்டிலும் வளர்ந்துள்ளதாக நம்பப்படும் நவீன உலகில் சில அரசாங்கங்களையும் சேர்த்துக்கொள்ளலாம். கொலைக்களத்திற்கு அழைத்துபோகப்படுபவர்கள் அனைவருமே குற்றவாளிகள் அல்ல. தவிர தண்டனையென்பது குற்றவாளிக்கான நீதிசார்ந்தது அல்ல தண்டனை வழங்குபவருக்கான நீதிசார்ந்தது. பல நேரங்களில் செய்த குற்றத்தைவிட செய்தவன் யார் என்ற அடிப்படையில் நீதி வழங்கப்படுகிறது. வாள்பிடித்தவன் நீதிபதி, எதிராளி ஆடு. நான்காண்டுகளுக்கொரு முறை மரண தண்டனை எதிர்ப்பாளர்கள் மாநாடு கூட்டப்படுகின்றது. முதல் மாநாடு 2001ல் பிரான்சு நாட்டில் ஸ்ட்றாஸ்பூர் நகரில் கூடியது. அடுத்த மாநாட்டினை கனடாவில் மோரியால் நகரில் கூட்டினர். மூன்றாவது மாநாடு மீண்டும் பிரான்சு நாட்டில் பாரீஸ் நகரில் கூடியது. இப்போது நான்காம் முறையாக இம்மாதம் (பிப்ரவரி 24,25,26) சுவிஸ் நாட்டில் ஜெனிவா நகரில் கூடியுள்ளது. கடந்த முறை பிரான்சு நாட்டின் அப்போதைய அதிபர் சிராக்கின் ஆதரவுடன் கூட்டப்பட்ட மாநாட்டில் உலகெங்குமிருந்து சுமார் ஆயிரம்பேர் அரசு மற்றும் அரசுசாரா அமைப்பு நிறுவனங்கள் சார்பில் கலந்து கொண்டதாகச் சொல்லப்படுகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு நாட்டின் செயல்பாடுகளை, அரசியல்களை தீர்மானிக்கவல்ல சூத்ரதாரிகளை மாநாட்டில் பங்கெடுக்கச் சொல்வதன்மூலம் அந்நாடுகளின் அரசியற் சட்டங்களிலிருந்து மரணதண்டனையை ஒழிக்க இயலுமென சமூக ஆர்வலர்கள் நினைக்கிறார்கள்.

அமெரிக்கா, சீனா, ஈரான் ஆகிய மூன்று நாடுகளுக்குள்ளும் அரசியல்சட்டத்தின் உதவியோடு நடத்தும் சிரமறுத்தலில் ஒற்றுமை இருக்கிறது. உலகில் குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் கீழ் 98 விழுக்காடு மரண தண்டனைகளை இம்மூன்று நாடுகளும் நிறைவேற்றுகின்றன. ஜனநாயகத்தைப் பேணுவதாக நம்பப்படும் அமெரிக்காவில் வெள்ளையரை காட்டிலும் பிறருக்கு(அவர் கறுப்பரோ ஆசியரோ) மரணத் தண்டனை விதிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம். அமெரிக்காவில் குற்றவாளிகளாகக் கருதி தீர்ப்பு வழங்கப்பட்டவர்களில் ஏழு சதவீதத்தினர் மறு விசாரணையில் அப்பாவிகளென தெரியவந்திருக்கிறது. மீதமுள்ள 93 சதவீதத்தினரில் 20 சதவீதத்தினரே மரண தண்டனைக்குறிய குற்றவிதிகளுக்குப் பொருந்துகிறார்கள் எனப்பார்க்கிறபோது இப்பிரச்சினையிலுள்ள விபரீதம் தெரியவரும். மனிதகுல பிரச்சினைகளுக்கு மார்க்ஸியமே தீர்வு என்று நம்பியகாலங்களிலும் சரி இன்றைக்குப் படுத்த படுக்கையிலிருக்கும் மார்க்ஸியத்தைத் தேற்ற, தனியுடமையை ஔடதமாக ஊட்டுகிற நவீன சோஷலிஸ சீனர்களுக்குஞ் சரி சுதந்திரம் என்ற சொல் கொடுங்கனவு. மார்க்ஸிய தோழர்களான சீனர்களின் சிந்தனையில் இன்று சிவப்பில்லை, மாறாக கைகள் என்றும்போல சிவப்பானவை. உயிரைக் குடித்து சிவந்தவை, மரண தண்டனை விதிப்பதில் ஆர்வம் அதிகம். அரசாங்கத் தரப்பில் வருடத்திற்கு ஆயிரமென்று நேர்த்திக்கடன் செலுத்துவதாகத் தெரிகிறது. இணைய தளங்களில் உள்ள தகவல்கள் வருடத்திற்கு 7000மென்று தெரிவிக்கின்றன. சீனர்களை அறிந்தவர்களுக்கு இந்த எண்ணிக்கை வேறுபாட்டில் வியப்புகளில்லை. ஈரான் நாட்டிலும் ஆண்டு தோறும் 300லிருந்தோ 400பேர்கள்வரை  கல்லால் அடித்தோ, தூக்கிலிடப்பட்டோ கொல்லப்படுகிறார்களெனச் சொல்லப்படுகிறது. பத்தொன்பது வயது, பதினாறு வயதென்றுள்ள பெண்கள்கூட பாலியல் குற்றச்சாட்டின்பேரில் கொல்லப்படுகிறார்கள். இங்கும் உத்தியோகபூர்வமாக தெரிவிக்கப்படும் எண்ணிக்கைக்கும் உலக மனிதர் ஆணையம் வெளியிடும் தகவல்களுக்கும் மலைக்கு மடுவுக்குமான பேதங்கள் உள்ளன. சிறுவயதினரின் தவறுகளுக்கு மரணதண்டனையை தீர்ப்பாக வழங்கிய பின்னர் தண்டனையை நிறைவேற்ற பதினெட்டுவயது ஆகவேண்டுமென மரனத்தின் வாசலில் அவர்களை நிறுத்திவைப்பது ஆகக் கொடுமை. அண்மையில் எதிர்கட்சி ஆதரவாளர்கள் பலருக்கு ஈரான அரசாங்கம் தூக்குத் தண்டனை வழங்கியது. பொதுவாக மரணதண்டனைக்கான குற்றச்சாட்டுகளில் நியாயமிருப்பதுபோல தோற்றம் உருவாக்கப்பட்டிருப்பினும், கணிசமான வழக்குகளில் உண்மைக்கு எவ்வித உத்தரவாதமுமில்லை. அமெரிக்க நாட்டில் மரணதண்டனைக்கான வாய்ப்பு கறுப்பரினத்திற்கு அதிகம் அவ்வாறே ஈரானிலும், சீனாவிலும் ஆட்சியாளர்களை விமர்சிப்பவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் அல்லது விஷ ஊசியால் சாகடிக்கப்படுவார்களென்பதும் உண்மை. ஈரானிலும் சீனாவிலும் குற்றவாளிகள் தங்கள் தரப்பு நியாயங்களைச் சொல்லக்கூட அனுமதிக்கபடுவதில்லை, வழக்கறிஞர்கள் உதவிக¨ளையெல்லாம் அவர்கள் கேட்டு பெறமுடியாது.

கடந்த காலங்களில் பிரெஞ்சுப் புரட்சி அரசியல் எதிரிகளின் தலைகளை கொய்திருக்கிறது. தொடர்கொலைகள் புரிந்தவர்கள் மாத்திரமல்ல குற்றமற்ற அப்பாவிகளையும் கொன்றிருக்கிறார்கள். இதை அடிப்படையாகக்கொண்டு பல நாவல்களும் புனைவுகளும் பிரெஞ்சு மொழியில் வந்திருக்கின்றன. அந்நியன் கதைநாயகன் தமது நண்பனுக்கு உதவப்போய், மரணத்தண்டனை பெறுவான். இன்றைக்குப் பிரான்சு நாட்டின் நிலைமை வேறு, மரண தண்டனையை 1981லிருந்து முற்றாக ஒழித்திருக்கிறார்கள். இந்தியாவில் மரண தண்டனைகள் அதிகம் விதிக்கப்படுவதில்லை மிக அரிதாகத்தான் நிறைவேற்றபடுகின்றன எனக்கூறியபோதிலும் அப்பணியைச் சமூக குற்றவாளிகளும் காவல் துறையினரும் செய்வது பலரும் அறிந்த செய்தி.ஒருமுறை இந்தியாவிற்கு பிரெஞ்சு நண்பர் ஒருவருடன் வந்திருந்தேன். வழக்கறிஞராக இருந்த ஒரு நண்பரைத் தேடி சென்னை உயர் நீதிமன்றத்திற்குச் சென்றோம். அங்கிருந்த மனுநீதிச் சோழன் சிலை குறித்து விசாரிக்க, நீதி விஷயத்தில் சோழனுக்கென்று புனைந்தோதப்பட்ட நேர்மையை விளக்கிக் கூறினேன். நண்பர் சிரித்தார். இருபது ஆண்டுகால நண்பர், நானிருக்கும் நகரில் ஒவ்வொரு மாதமும் கடைசி வியாழக்கிழமைகூடும் தத்துவவாதிகளின் உரையைக் கேட்க அவரும் வருவார், அப்படித்தான் எங்கள் நட்பு வளர்ந்தது. இப்போது மரணதண்டனை எதிர்ப்பாளர்கள் அணியில் தீவிர உறுப்பினர். கன்றிற்காக சோழன் தனது மகனைக் கொன்ற கதையின் தீர்ப்பில் உடன்பாடில்லை என்பதுபோல அல்பெர் கமுய் வார்த்தையில் அதை Absurdism என வர்ணித்தார். எங்கள் தமிழர் வாழ்க்கை இது போன்ற கற்பனை குறியீடுகளால் ஆனதென்ற உண்மையை சொல்ல வெட்கப்பட்டு எனக்கும் சிரித்து மழுப்பவேண்டியிருந்தது.

——————————————————–

மொழிவது சுகம் – கட்டுரை தொகுப்பிலிருந்து

அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் சென்னை -11 பதிப்பில் விரைவில் வெளிவர உள்ளது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s