தமிழ் பண்பாட்டில் (அப்படியொன்று இருக்கிறதா என்ன?) ‘காதல்’ என்ற சொல் பெண்ணை மையப்படுத்தியே வலம் வரும் சொல். நமது இலக்கியங்களும், திரைப்படங்களுங்கூட அந்த அறத்தை இதுகாறும் போற்றிவந்திருக்கின்றன. ஒருவனுக்கு ஒருத்தியை அதிகம் வற்புறுத்தாத நமது சமூகம் பெண்களுக்கென விதிகளை கறாராக (ஒருத்திக்கு ஒருவன்) வைத்திருக்கிறது. பிரான்சுக்கு முதன்முறைவந்திருந்து இந்தியாவுக்குத் திரும்ப ஆறாண்டுகள் பிடித்திருந்தது. ஆறாண்டு இடைவெளிக்குப் பிறகு சந்திக்க நேர்ந்த என் புதுச்சேரி நண்பர் இம்முறை மனைவியோடு துணைவியொன்றை சிறையெடுத்திருந்தார். அப்பெண் வெளிநாட்டிலிருந்து தமது பூர்வீக நிலங்களை விற்பதற்காக புதுச்சேரிக்கு வந்திருக்கிறார். கொஞ்சம்கூட கூச்சமின்றி அறிமுகப்படுத்தினார். அவருக்குத் தமது தாலி கட்டிய மனைவியைக்காட்டிலும் துணைவி கூடுதலாக படித்திருக்கிறதென்கிற பெருமை வேறு. என்ன இப்படி பண்ணிவிட்டாயே என்றேன். நீ இந்தியாவிலிருக்கும்போது எனது வீட்டைப்பார்த்தாய் இல்லையா? இப்போது எப்படி இருக்கிறது, என்றார். அதற்கென்ன இடித்து நன்றாகத்தான் கட்டியிருக்கிறாய் என்றேன். நன்றாக மட்டுமில்லை, பெரிதாகவும் கட்டியிருக்கிறேன் என்றார். அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரிந்தது. அவரது இலக்கணப்படி அவ்வீட்டின் பரப்புக்கு இன்னும் நான்கு ஐந்தையாவது சேர்த்துக்கொண்டிருக்கவேண்டும், சேர்த்துக்கொண்டாரா இல்லையா என்று தெரியாது.
திரு அவ்வை நடராசன் ஒரு நல்ல சுவைஞர். மனம் திறந்து பாராட்டுவார். அவரைச் சந்திக்கவென்று வருகிறவர்களிடமெல்லாம் நம்மை அறிமுகம் செய்வார், நாம் எழுதிய ஏதாவதொரு பகுதியை வரி பிசகாமல் நினைவு கூர்வார். அவருடைய அண்ணா நகர் வீட்டிற்குச் ஒருமுறை சென்றிருந்தபோது எனது கவிதைத் தொகுப்பிலிருந்த கவிதையொன்றிர்க்கு காதல்கள் என்று பெயரிட்டிருந்ததைப்பார்த்துவிட்டு, காதல்கள் என்று பன்மையில் சொல்லக்கூடாதென்றார், அது காதல் என்று இருக்கவேண்டுமென்றார். நான் எனது தரப்பு விளக்கத்தைக் கொடுத்ததும் ஏற்றுக்கொண்டார், முதலும் கடைசியுமான அந்த கவிதைத் தொகுப்பிற்கு முன்னுரையும் எழுதித்தந்தார். ஆக அவ்வை நடராசன் காதல் என்ற சொல்லுக்கு பன்மையைத் தவிர்க்க நினைத்த தமிழ் பண்பாடு சென்னையிலிருந்து 125கி.மீ தள்ளியிருந்த நண்பரின் புதுச்சேரி இல்லத்தில் வேறுபடிமத்தை அடைந்திருந்தது.
எங்கள் உறவினர் வீட்டு பாட்டியும் அவருடைய கணவரான தாத்தாவும் நேரிட்டுக்பேசி பார்த்ததில்லை. அவர் ஏன் எங்க இருக்கிற? வெத்திலை செல்லத்தை எடுத்துவா என்பார்? பாட்டி தெருக்கதவின் பின்புறத்தில் ஒளிந்தபடி கையை மட்டும் நீட்டும். என் வாழ் நாளில் நான் மட்டுமல்ல எங்கள் உறவினர்களும் அவர்கள் எப்போதும் அப்படித்தான் என்பார்கள். ஆனால் அந்தத் தம்பதியினருக்கு பதினோரு பிள்ளைகள். பிறகுதான் வயது ஆக ஆக எங்கள் கிராமத்துக்கு ஒரு பண்பாடு, புதுச்சேரிக்கு ஒரு பண்பாடு, அங்கிருந்து சென்னைக்கு வந்தால் அங்கே ஒரு பண்பாடு என்றிருக்கக்கண்டேன். சென்னையிலிருந்து பிரான்சுக்கு வந்ததும் பாரீஸ¤க்கென்று ஒரு பண்பாடு இருக்கக்கண்டேன்.
இந்தப் பண்பாட்டுப் பிரக்ஞையின் – உணர்வின் – வரலாறு யாது? இன்று நாம் தமிழ்ப் பண்பாடென்று முன்வைக்கப்படுபவைகளையே நமது முன்னோர்களும் கொண்டிருந்தார்களா?. ஒரு புதுச்சேரி நண்பர் ஒருவர் எங்கேயோ ஒரு ரெஸ்டாரெண்டுக்குபோனவர் பிரியாணி நல்லா இல்லைஎன குறைபட்டுக்கொண்டார். நம்ம சாப்படை அவங்கள்ளாம் செய்ய ஆரப்பிச்சுட்டாங்க நம்ம பண்பாட்டை கெடுக்கறாங்க என்றார். கறிச்சோறெல்லாம் நம்ம இலக்கியத்திலே வருகிறதுதான் அதற்காக பிரியாணியை தமிழ்ப் பண்பாடுண்ணு பேச ஆரம்பிச்சா எப்படி? பிறகு அந்த நண்பருக்கு பிரியாணி என்ற சொல் இஸ்லாமியர்களிடமிருந்து கற்றுக்கொண்டது. என்றேன், தொடர்ந்து நம்ம பண்பாட்டை ஆம்பூர் பிரியாணி, முனியாண்டி விலாஸ் பிரியாணி என்ற அடிப்படையில் பார்க்க ஆறம்பிச்சுடாதீங்க என்றேன். செப்பனிடப்பட்ட மரபு அல்லது சீர்மைக்குளான மரபு பண்பாடாகிறது. இந்த மரபும் பண்பாடும் பிரிக்கமுடியாதவை, பண்பாடென்பதே மரபின் வழிபட்டதுதான். பண்பாடு என்பதற்கு அவரவரவர் அளவில் பொருள் இருக்கிறது.
காதலின்றி வாழ்க்கையில்லை அல்லது உயிர்வாழ்க்கையே காதலிப்பதில் தான் இருக்கிறது. ஒவ்வொரு தினமும் காதலில் ஆரம்பித்து காதலில் முடிகிறது இதுதான் Les bien aimés – The Beloved என்ற பிரெஞ்சு சினிமாவின் ஒற்றைவரி திரைக்கதை பாரீஸில் ஆரம்பித்து பிராகு, லண்டன், மோரியால் (கனடா) பின்னர் திரும்பவும் பிரான்சு என்று சுற்றிவரும் மதெலின் அவள் மகள் வேரா இரு பெண்களின் – காதலை அல்ல – காதல்களை கொண்டாட்டம், குதூகலம், ஆட்டம் பாட்டம், அழுகை, இழப்பு மீண்டும் கொண்டாட்டம் குதூகலம் ஆட்டம் பாட்டம் அழுகையென ஒரு முடிவற்ற தொடக்கத்தை நிகழ்த்திக்கொண்டு – உயிர் வாழ்க்கையை நகர்த்துகிறது திரைக்கதை. தாய் மகள் இருவருக்கும் காதல்தான் வாழ்க்கை, அவர்கள் தினசரிகளில் உணவுபோல, உடைபோல, நடப்பதுபோல, பேருந்து பிடிப்பதுபோல கைவீசுவதுபோல காதல் வந்து போகிறது. காதலித்தல் என்ற வினைச்சொல்லின் கால வர்த்தமானங்களை மட்டுமல்ல அதன் பூகோள படிமத்தையும் சேர்த்தே குதறியிருக்கிறார் கதை திரைக்கதை இயக்குனர் பொறுபேற்றுள்ள கிறிஸ்தோ·ப் ஒனோரே. 1960ல் ஆரம்பித்து இன்றையதினம் வரை வழகக்கமான துள்ளலுடனும் பொய்யுடனும் உறுதிமொழியுடனும் காத்திருப்படனும் ஏமாற்றத்துடனும் பயணிக்கிறது காதல்கள். அம்மாவும் பெண்ணும் எளிதாகக் காதல் வயப்படுகிறார்கள், மனைவியாக துணைவியாக, வைப்பாட்டியாக, கள்ளக்காதலிகளாக எல்லாவித அவதாரங்களும் எடுக்கிறார்கள். மேற்கத்திய உலகின் பண்பாடென்றதொரு சுவருக்குள் அக்காதல்களை அடைத்து விடமுடியாது இன்றைய உலகில் எல்லா பெருநகரங்களிலும் சன்னலைத் திறந்து காற்றுவாங்குவதைப்போல காதலைத் தேடும் இதுபோன்ற மதெலின்களும் வேராக்களும் இருக்கவே செய்கிறார்கள். ஒரு ஜோடி உயர்ந்த ரக பாதணிக்காக சோரம்போகிற மதெலினை சந்திக்கிறோம். முதலில் ஒரு ஸ்லாவ் (செக்கோஸ்லோவாக்யா) டாக்டரிடம் காதல், பிறகு போலந்து நாட்டைச்சேர்ந்த ஓர் அழகான இளைஞனைச் சந்திக்க நேர்ந்ததும் அவனுடன் காதல் ஆகக் காதல் வைரஸில் அவதிப்படும் இளநங்கை. அவள் மங்கை மடந்தை அரிவை தெரிவையானபின்பும் உயிர்க்கொல்லியாக உடன் பயணிக்கிறது. அவளது மகளுக்கு வேறுமாதிரியான அனுபவங்கள், அவளுள்ளும் உந்து சக்தியாக இருந்து அவள் உயிர் வாழ்க்கையை முன் நகர்த்துவது காதல்களே. இருவரும் காதலிக்கிறார்கள் காதலிக்கப்படுகிறார்கள், எளிதாக காதல் வயப்படுகிறார்கள், காதல் தருணங்களுக்காக ஏங்குகிறார்கள். திணவெடுத்த சரீரத்தின் தேவையோடு அவர்கள் காதல்களை ஒப்பிட்டளவில் நிறுத்துவதுகூட நியாயமானதொரு பார்வை ஆகாது. வேறெங்கோ காரணங்களும் அதற்கான நியாயங்களும் இருக்கின்றன. நாம் அவற்றை உய்த்துணரமுடியாதவரை நமது சமூக யாப்பிலக்கணப்படி அப்பெண்கள் சவலைப்பாக்கள்.
Chiara Mastroianni மகளாகவும் Catherine Deneuve தாயாகவும் நடித்திருக்கிறார்கள். காத்தெரின் தெனேவ் பற்றிச் சொல்லத் தேவையில்லை மிக நன்றாகவே நடித்திருக்கிறார். மகளாக நடித்திருக்கும் சியாராவும் நன்றாகவே செய்திருக்கிறார். Les Bien aimés திரைப்படம் கடந்த வருடம் கான் திரைப்படவிழாவில் சிறப்புகாட்சியில் திரையிட அனுமதிக்கப்பட்ட படம். ஆகையால் பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது. படத்தின் இயக்குனர் கிறிஸ்தோப் ஒனொரே(Christophe Honoré)நம்ம ஊர் பாசத்திற்குரிய பாரதிராஜா ரகம். இதுவரை அவர் எடுத்துள்ள படங்கள் அனைத்துமே காதலை அதிகமாக முன்நிறுத்துபவை. ஆனால் நம்முடைய தமிழ் சினிமா ரகத்தில் உருக உருக காதலைத் தெரிவிக்காது அதன் பன்முகத் தன்மையைப் பற்றி பேசுபவை.
கிறிஸ்டோப் ஒனோரே பிரெஞ்சு பாரதிராஜாவெனில் படத்திற்கு இசை அமைத்துள்ள அலெக்ஸ் போப்பென் (Alexs Beaupain) பிரெஞ்சு இளைய ராஜா. கடந்த இருபது ஆண்டுகளாக நாடகம் மற்று இசைத் துரையில் அரும்பணியாற்றிவரும் La Compagnie du Ressort அமைப்புடன் இணைந்து எண்ணற்ற இசை நிகழ்ச்சிகளை மேடையேற்றிருக்கிறார். பாடலாசிரியர், இசைகோர்ப்பவர். இவருக்கும் இயக்குனர் கிறிஸ்தோ·ப் ஹொனொரேவுக்குமான நட்பு 2000 ஆண்டிலேயே தொடங்கிவிட்டது சேர்ந்து பணியாற்றிய திரைப்படங்கள் இவர்கள் கூட்டணியின் வெற்றியைத் தெரிவிக்கின்றன:
Je peux vivre sans tois, tu sais/Le seul problème mon amour c’est/Que je ne peux pas vivre sans t’aimer
நீயின்றியும் உயிர் வாழ்வேன்-அதை/ நீயும் அறிவாய்-ஆனால்/உன்னைக் காதலித்தாலன்றி/உயிர்வாழமுடியாதென்பது/எனக்குள்ள பிரச்சினை.
எனபது இப்படத்தில் வரும் பாடல். படத்தின் கதையும் அதுதான்.
——–
இவ்வளவு அழகாகவும் எளிமையாகவும் யாரால் உணர்த்த முடியும்?