மொழிவது சுகம்: மனிதர் கடமைத் தேர்வென்பது உண்மைசார்ந்ததல்ல

“Aucun pouvoir sur terre ne peut arrêter une idée dont l’heure est venue.”

“காலமும் நேரமும் கைகூடினால், வருவது வழியில் நிற்காதென்று” எங்கள் கிராமத்தில் சொல்லக்கேட்டிருக்கிறேன். கைய்யறு நிலையில் மனிதர்க்கு தெம்பூட்டுவதற்கென்றே இது போன்ற வாசகங்கள் தமிழில் மட்டுமல்ல உலகில் எல்லாம் மொழிகளிலுமுண்டு. மேலேயுள்ள வாசகம் பிரெஞ்சுமொழிக்குச் சொந்தம். பத்தொன்பதாம் நூற்றாண்டு முழுவதும் அரசியல், சமூகம், இலக்கியமென பிரெஞ்சு பிரபஞ்சத்தை சுற்றிவந்த விக்டர் யுகோ என்ற மாமனிதனுக்கு அவ்வரிகள் சொந்தமானவை. இன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கும் இந்தியப் பாராளுமன்றத்தில் அவற்றை உச்சரித்திருக்கிறார்.  தமிழ் வழக்கிற்கும் விக்டர் யுகோவின் கூற்றுக்கு அடிப்படையில் வேறுபாடுண்டு. இங்கே ‘idée’ என்பதற்கு ‘திட்டம்’ அல்லது கருதுகோள் என்று பொருள். ஒரு திட்டத்தை செயல்படுத்துவதற்கான நேரமும் காலமும் பொருந்திவந்தால் அதனைத் தடுப்பதென்பது எப்பேர்பட்ட அதிகாரத்திற்கும் இயலாது’ என்றப் பொருளில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தமது உரையில் குறிப்பட்டிருந்தார். காரணம் ரூபாயின் மதிப்பை குறைப்பது, அந்நிய முதலீட்டை கட்டுப்பாடுகளின்றி வரவேற்பதென்ற தீவிர பொருளாதார சீர்திருத்தங்களை நாட்டில் அறிமுகப்படுத்தினாலொழிய இந்தியா தலையெடுக்க முடியாதென்ற உண்மையின் அடிப்படையில் ஆற்றிய உரை.

மன்மோகன் சிங் அப்போது பிரதமரல்ல, இந்தியாவின் நிதி அமைச்சராக பொறுப்பேற்றிருந்த காலம். புது டில்லி பாராளுமன்றத்தில் நிதி அமைச்சராக பொறுப்பேற்ற உடன் 1991ம் ஆண்டு ஜூலை மாதம் நிகழ்த்திய உரை.. அதற்கு முன்பு என்ன நடந்தது என்பதை நாம் அறிவோம். இந்தியா வாங்கியக் கடனை வட்டியுடன் திருப்பி அடைக்குமா என்ற நிலையில் உலக வங்கிக்கு முன்னீட்டு வைப்பாக தமது கையிறுப்பு தங்கங்களை -அதாவது 67 டன் தங்கத்தை உலக வங்கிக்கு அனுப்பிவைத்து கடனைப் புதுப்பிக்கவேண்டிய நிர்ப்பந்தம். இத்தகைய நெருக்கடியான நேரத்தில்தான் நிதி அமைச்சராக மன்மோகன் சிங் பொறுப்பேற்றார். அதன்பின்னர் மளமளவென்று அப்போதைய இந்திய நிதிஅமைச்சகம் மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக, அறுவடை செய்துகொண்டிருக்கிற பலன்களுக்கு இன்றைய இந்தியா சாட்சி. இப்போது மன்மோகன் சிங் நிதி அமைச்சரல்ல நாட்டின் பிரதமர் அதாவது பெயரளவில். அவர் ஆளவில்லை பெரிய முதலாளிகள் ஆளுகிறார்கள். அமெரிக்காவிலும் மேற்கத்திய நாடுகளிலும் அரசாங்கங்கள் பெருமுதலாளிகளுக்காக வளைந்துகொடுக்கிறார்களெனில் இங்கே இந்தியாவில் அரசாங்கம் அவர்கள் காலடியில் கிடக்கிறது. ஆக அன்று மன்மோகன் சிங் மடைதிறந்த வெள்ளம் இன்று புற்களுக்குப் பாயந்ததுபோக பயிர்களை நனைக்கிறது.

உடடியாக பெரிய மாற்றங்கள் எதையும் அன்னா ஹஸாரே போராட்டம் விளைவிக்கப் போவதில்லை. அன்னா ஹசாரேவும், அவரது சகாக்களும், பொதுமக்களில் பலரும் இது மந்திரத்தில் மாங்காய் விழவைக்கிற செயல் திட்டமல்ல என்பதை உணர்ந்தே இருப்பார்கள். எனினும் ஊழல் சக்திகளை இப்போராட்டம் யோசிக்க வைக்கும். கையூட்டுக் கொடுக்கின்றவர்களில் ஒரு சிலரையாவது வேறுவகையில் தங்கள் அன்றாடப்பிரச்சினையை சமாளிக்கத் தூண்டும். அரசு ஊழியர்களில் ஒன்றிரண்டு பேராவது இலஞ்சம் கேட்க வெட்கப்படக்கூடும். காவலர்களில் உத்தமர்களை சந்திக்கும் அதிசயங்கள் நிகழலாம். நீதிபதிகள் இனி குற்றவாளிகள் கூண்டில் நிறுத்தப்படும் ஊழல் ஆசாமிகளிடம் துளியும் இரக்கம் காட்டமாட்டார்கள்.

ஜனநாயகம் என்கிற கருத்தியமும் சரி அதன் தொழிற்படுத்தும்விதமுஞ்சரி மக்களின் ஆதரவும் திடமான உறுதியும் இருந்தாலொழிய ஜெயிப்பதில்லை. நேற்றைய இந்தியா, அண்மையில் துனீசியா, எகிப்து,  இன்று லிபியா உதாரணங்கள். மேற்கத்திய நாடுகள் விரும்பின அல்லது அமெரிக்கா விரும்பியது அதனால் மேற்கண்ட நாடுகள் சர்வாதிகாரிகளிடமிருந்து விடுதலைபெற்றார்களென கூறவியலாது. மக்கள் விரும்பினார்கள், வேண்டினார்கள், உறுதியாய் நின்றார்கள் முடிவில் விடுதலையைப் பெற்றார்கள். ஆனால் பெற்ற விடுதலையை பாதுகாப்பதிலும் பராமரிப்பதிலுந்தான் பிரச்சினைகளிருக்கின்றன.  அன்னா ஹசாரேவின் போராட்டத்துக்கு ஆதரவு தருவதால் பிரச்சினைக்குத் தீர்வுகாணமுடியாது. சொந்த வாழ்க்கையில் ஊழலைத் தவிர்க்க என்ன செய்யப்போகிறோம் என்பதைப் பொறுத்தது அது.

நமது மக்கள் உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர்கள். சில வேளைகளில் அன்னா ஹஸாரேவுக்குக் கூடும் கூட்டத்தைப்பார்க்க அரட்டை அரங்கங்களில் நடந்தேறும் காட்சிகள் நினைவுக்கு வருகின்றன. பொதுவாழ்க்கையில் நேர்மையை எதிர்பார்க்கும் நாம், சொந்த வாழ்க்கையில் இலாபத்தை தரும் காரியத்தை மட்டுமே தேர்வு செய்கிறோம். மனிதர் கடமைத் தேர்வென்பது உண்மைசார்ந்ததல்ல அவனது அகவயமான விருப்பத்தை பூர்த்திசெய்வது. மனிதனின் அகவிருப்பம் அடுத்தவர்களின் நலனில் அக்கறைகொண்டதல்ல. மதுபோல, காமம்போல அதுவும் போதை தரக்கூடியது, நம்மை மயக்கத்தில் ஆழ்த்தக்கூடியது. ஆக அன்னா ஹஸாரேயின் போராட்டமென்பது ஓர் ஆரம்பம் அதனை தொடர்ந்து செயல்படுத்துவதென்பது ஒவ்வொரு இந்தியனின் அந்தரங்க நேர்மை சார்ந்தது.

————

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s