‘மிஸியே’, ‘மதாம்’, பீரோ, ஒப்பித்தால், ‘சொல்தா’ ‘ருய் ரொமென் ரொலான்’, ‘ஹோட்டெல் தெ வீல்’, அல்லியான்ஸ் பிரான்ஸேஸ், லிஸ்ஸே பிரான்ஸே இதுபோன்ற சொற்களும், காவல் துறையின் ‘சிவப்பு கெப்பி, ‘ஆயி மண்டபம்’ போன்ற குறியீடுகளும், அன்னை எனப்படும் அரவிந்தரின் ஆன்மீகத் தோழியான மீரா அல்·பான்ஸாவும் என்றென்றும் புதுச்சேரியை பிரான்சு நாட்டோடு இணைத்து நினைவூட்டுபவர்கள். ஆனால் பிரெஞ்சு தமிழர்கள் என்கிறபோது அவர்கள் புதுச்சேரி மக்கள் மட்டுமல்ல. பிரெஞ்சு மண்ணோடு, மொழியோடு, கலாச்சாரத்தோடு ஏதோவொருவகையில் தொடர்புடைய தமிழர்களெல்லாம் பிரெஞ்சுத் தமிழர்களெனில், மொரீஷியஸ் தமிழர்களும், இலங்கைத் தமிழர்களுங்கூட பிரெஞ்சுத் தமிழர்களாகிறார்கள். ஏறக்குறைய ஒன்றரை இலட்சம் தமிழர்கள் பிரான்சில் இன்றைக்கு வசிக்கிறார்களெனில் அவர்கள் இந்தியா (புதுச்சேரி), இலங்கை, மொரீஷியஸ் நாடுகளிலிலிருந்து அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணங்களை முன்னிட்டு இங்கு குடியேறிவர்கள். இம்மூன்று பிரிவினரும் எண்ணிக்கை அளவில் ஏறக்குறைய சமமாகவே இருக்கிறார்கள்.
காலனிய ஆதிக்கத்தின் விளைவாக புதுச்சேரி மற்றும் காரைக்காலைச் சேர்ந்த இந்தியத் தமிழர்களும், மொரீஷியஸ் தமிழர்களும் பிரான்சுக்குக் குடியேறியவர்கள். இந்து மாக்கடலைச்சேர்ந்த பிரெஞ்சு தீவுகளில் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் 17ம் நூற்றாண்டிலேயே கப்பலில் கொண்டுவரப்பட்டு குடி அமர்த்தப்பட்டனர். தொடக்கத்தில் அடிமைகளாகவும், பின்னர் தோட்டத் தொழிலாளர்களாகவும் உதாரணமாக பெனுவா துய்மா என்பவர் கவர்னராக இருந்த காலத்தில் பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காப்பித்தோட்டத்தில் பணிபுரியவென்று 300 புதுச்சேரி தமிழர்கள் அழைத்துவரப்பட்டு ரெயூனியன் என்ற தீவில் குடியமர்த்தப்பட்டார்கள். நாளடைவில் அவர்கள் மர்த்த்தினிக், குவாதுலுப், பிரெஞ்சு கயானா தீவுகளென்று பரவி வசித்தனர். பின்னர் அவர்களில் பலர் ஐரோப்பிய எல்லைக்குள்ளிருந்த பிரெஞ்சு பிரதேசத்துக்கு குடிவந்தனர். இவ்வரலாறு மொரீஷியஸ¤க்கும் ஓரளவு பொருந்தும். 1940களில் இரண்டாம் உலகபோரின் போது பிரான்சு பிறகாலனிகளிலிருந்து எப்படி யுத்தத்திற்கு ஆள் சேர்த்ததோ அவ்வாறே தமதுவசமிருந்த இந்திய காலனிப்பகுதிகளிலிருந்தும் வீரர்களைக் கொண்டுவந்தது. புதுச்சேரி அடித்தட்டு மக்கள் பலரும் இவ்வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு பிரெஞ்சு ராணுவத்தில் சேர்ந்தனர். பிரான்சு நாட்டில் இன்றுள்ள புதுச்சேரி மற்றும் காரைக்காலைச் சேர்ந்த இந்தியத் தமிழர்களில் பெரும்பாலோர் பிரெஞ்சு ராணுவத்தில் பணிபுரிந்தவர்களாகவோ அல்லது அவர்கள் சந்ததியினரின் இரத்த உறவுகொண்டவர்களாகவோ இருப்பார்கள். இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றதை அடுத்து, புதுச்சேரி மாநிலம் 1954, நவம்பர் 1 முதல் விடுதலை பெற்று இந்தியாவுடன்’இணைப்புத் தீர்மான ஒப்பந்தத்தின்'(De-facto settlement’) அடிப்படையில் இணைந்தது. இதனால் எழுந்த சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ள 1956இல் இந்தியாவுக்கும் பிரான்சுக்குமிடையில் மீண்டுமொரு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. தொடர்ந்து 1962, ஆகஸ்ட் 16இல் ‘நடைமுறை அதிகார மாற்ற ஒப்பந்தத்தில்’ (De-jure transfer) இந்தியப் பிரதமர் நேருவும் பிரஞ்சுத் தூதுவரும் கையொப்பமிட்டனர். இவ்வொப்பந்தம் புதுச்சேரி மக்களுக்கு இந்தியா அல்லது பிரான்சுநாட்டு குடியுரிமைகளூள் இரண்டிலொன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வாய்ப்பினை நல்கி, அவ்வாய்ப்பினை மேலும் ஆறுமாதகாலம் நீட்டிக்கவும் செய்தார்கள். அதன் பலனாக கணிசமான அளவில் புதுச்சேரி, காரைக்கால் வாசிகள் மீண்டும் பிரான்சுக்கு வரநேர்ந்தது. இது புதுச்சேரி தமிழர்கள் பிரான்சுக்கு வரநேர்ந்த வரலாறு. இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை சென்ற நூற்றாண்டில் எண்பதுகளில் நடந்த இனக் கலவரத்திற்குப் பிறகு பிரான்சுக்குக் குடிவந்தவர்களென்பது அண்மைக்காலங்களில் திரும்பத் திரும்ப நாம் வாசித்தறிந்த வரலாறு.
பிரெஞ்சுத் தமிழர்களின் இன்றையை சமூக கூறுகள், பண்பாடுகளென்ன? என்பது சிக்கலானதொரு கேள்வி. நாமிருக்கும் உலகம் பொருள்முதல் வாதத்தை மட்டுமே பிரதானமாகக்கொண்டது. மனித இனமும் விற்பனையை மட்டுமே அல்லது விலைபோவதை மட்டுமே கருத்திற்கொண்டு இயங்கும் சரக்காகிப்போனதொரு நிலையில்: பண்பு, தொன்மம், அறம் இவைகளெல்லாம்கூட -விற்பனையின் கிடைக்கும் இலாபத்தின் அடிப்படையில் அவ்வப்போது உருமாற்றம் பெற்று ஆயுளை நகர்த்தும் நிர்ப்பந்தத்தில் உள்ளன. பிரெஞ்சுத் தமிழர்களின் சமூகக்கூறுகள் தமிழ்நாட்டைப்போலவே பல கூட்டு வடிவங்களை முன்னிறுத்துகின்றன. பொதுவாகப் பிரெஞ்சுத் தமிழர்கள், பண்பாட்டு அடையாளமென்று முன்னிறுத்துவது அவரவர் ‘இருத்தலை(Existence) உயர்த்திப்பிடிக்கும் குணமேயன்றி தமிழரின் அரிதானப் பெருமையை உண்மையில் மீளப்பெறும் முயற்சிகளில்லை.
பிரெஞ்சுத் தமிழர்களை ஒரு வசதிக்காகவும், மானுடவியல் தெளிவுறுத்தும் உண்மைகள் அடிப்படையிலும் மூன்றுவிதமாக அடையாளப்படுத்தலாம். தமிழை மறந்தவர்கள், மறந்து கொண்டிருப்பவர்கள், மறக்க இருப்பவர்கள். தமிழை மறந்தவர்களென்று பிரெஞ்சு மண்ணுக்கு பதினேழு, பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் வந்துசேர்ந்த தமிழர்களின் இன்றைய சந்ததியினரைச் சொல்லலாம். இவர்கள் மேலே குறிப்பிட்ட ரெயூனியன், குவாதுலுப், பிரெஞ்சு கயானாவை சேர்ந்தவர்கள், அடுத்து புதுச்சேரி காரைக்கால் மக்களின் சந்ததியினராக ஹனாய், சைகோனிலிருந்து இவர்களுடன் இணைந்துகொண்டவர்கள், மூன்றாவதாக மொரீஷியஸிலிருந்து குடிபெயர்ந்து பிரான்சு நாட்டில் வசிப்பவர்கள். மொரீஷியஸ் தமிழர்களுள் ஒரு பிரிவினர் மட்டுமே தங்களைத் ‘தமுல்'(Tamul) அதாவது தமிழர்கள் எனக் கூறிக்கொள்வார்கள். கிறிஸ்துவர்களும், இஸ்லாமியர்களும் அவர்கள் தமிழர்களாக இருந்தாலுங்கூட இவர்களுக்கு ‘இல்லை’. காரணம் இவர்கள் தீ மிதிக்கிறார்கள், காவடி எடுக்கிறார்கள், கோவிந்தனுக்குப் பூசை வைக்கிறார்கள், மாரியம்மனுக்கு கஞ்சி ஊற்றுகிறார்கள். திருவாசகத்தையும், ஒன்றிரண்டு திருப்புகழையும் பிரெஞ்சில் அப்படியே எழுதிவைத்துக்கொண்டு கதிரசனும் (கதிரேசனும்) பொக்கிலியும்(பொற்கலையும்) வாசிப்பவர்கள். ஆக இவர்களைத் தமிழர்களாக அடையாளப்படுத்துவது தமிழ்த்தாயோ தமிழன்னையோ அல்ல முருகனும், மாரியம்மனும். இதுபோன்ற நாட்களைத் தவிர்த்து மற்ற நாட்களில் இவர்கள் முழுக்க முழுக்க மேற்கத்திய வாழ்க்கைநெறியைப் பின்பற்றுவர்கள். பிரெஞ்சுத் தமிழர்களில் இரண்டாவது வகையினருக்கு: இருபதாம் நூற்றாண்டில் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலிருந்து குடியேறியவர்களையும், திருமணம் மற்றும் வேறு காரணங்களை முன்னிட்டு (இந்த வேறுகாரணங்களில் அறுபதுவயது பெண்மணியைப் பிரெஞ்சு குடியுரிமைக்காக மணப்பதும் அடக்கம்) பிரான்சுக்குப் புலம்பெயர்கிறவர்களையும் உதாரணமாகக் கொள்ளலாம். மொரீஷியர்கள் தங்களை ‘தமுல்'(Tamoul) என்று சொல்லிக்கொள்ளத் தயங்குவதில்லை. தமிழ்ச் சங்கங்கள் வைத்து பொங்கல், தீபாவளி, பாரதி, கம்பன், அண்ணா என்று கொண்டாடினாலும் புதுச்சேரிமக்கள் அண்மைக்காலம்வரை தங்களை தமிழரென வெளிப்படையாக அறிவித்துக்கொள்வது குறைவு அல்லது அதனைத் தவிர்க்க நினப்பவர்கள். பிரான்சு நாட்டில் குடியிருக்கும் ஒரு புதுச்சேரிவாசியை நீங்கள் யாரென்று கேட்டீர்களெனில் அவர் சட்டென்று சொல்வது, ‘Je suis Pondicherien'( புதுச்சேரியைச் சேர்ந்தவன்). பிரெஞ்சு வரலாறும் அவர்களை புதுச்சேரியைச் சேர்ந்த பிரெஞ்சுக்காரர்களென்றே (Franco-Pondicherians) கருதிவந்திருக்கிறதே தவிர ‘பிரெஞ்சுத் தமிழர்கள்’ என்ற சொல்லாட்சியின் கீழல்ல. நாற்பதுகள், ஐம்பதுகள் அறுபதுகளில் பிரான்சுக்கு வந்தவர்கள் பெரும்பாலும் பிரெஞ்சு ராணுவத்திற்குச் சேவகம் செய்யவென்று வந்தவர்கள், அவர்கள் தமிழை மறக்காமலிருக்க நீங்கள் நினைப்பதுபோல கம்பனோ திருவள்ளுவனோ காரணமல்ல சிவாஜிகணேசனும் எம்ஜிஆரும். இக்காலங்களில் நன்கு படித்த இரண்டிலிருந்து ஐந்து சதவீத புதுச்சேரி தமிழர்களும் பிரான்சுக்கு வந்திருக்கிறார்கள், அவர்கள் பல்கலைகழகங்களிலோ உயர் பணிகளிலோ இருப்பவர்கள். தமிழால் எனக்கென்ன லாபம்? என்று வலம் வருபவர்கள். எண்பதுகளில் வந்த புதுச்சேரிகாரர்கள் அதிக எண்ணிக்கையில் தமிழ்ச்சங்கங்களை நிறுவி வருடத்தில் ஒன்றிரண்டு நாட்கள் பட்டிமன்றம், கவிதையென்று அமர்க்களப்படுத்துகிறார்கள். இப்போக்கிற்கு இதேகாலங்களில் பிரான்சுக்கு வரநேர்ந்த இலங்கைத் தமிழர்கள் காரணமாக இருக்கலாம். தமிழ், தமிழ் மக்கள் என்ற சொல்லைப் பிரெஞ்சுக்காரர்கள் அறியப்படநேர்ந்ததே எண்பதுகளில் இலங்கைத் தமிழர்களின் வருகைக்குப் பின்பென்றுதான் சொல்லவேண்டும், காரணம் இலங்கைத் சகோதரர்கள் தமிழர்களென்ற குலக்குறியுடன் பிரான்சுக்கு வந்தவர்கள் அகதித் தகுதி பெறுவதில் ஆரம்பித்து, பண்பாட்டிலும் பிறவற்றிலும் தமிழ்த் தேசிய அரசியலை முன்வைத்து தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளவேண்டிய நெருக்கடி அவர்களுக்கு இருந்தது. இதே இலங்கையிலிருந்து எண்பதுகளுக்கு முன்பு ஐரோப்பாவிற்குப் புலம்பெயர்ந்தவர்கள் இந்த அளவிற்குத் தமிழுணர்வைக் கொண்டவர்களல்லவென்பதையும் நினைவு கூர்தல் வேண்டும்.
தமிழ்த்தேசிய உணர்வுடன் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் தமிழையும் கொண்டுவந்தார்கள். தமிழ் சங்கங்கள் ஊடாக தமிழைப் போதிப்பதோடு உயர் நிலைப் பள்ளி இறுதிவகுப்புத் தேர்விலும் தமிழை ஒரு பாடமாக எடுக்க முடிகிறதென்றால் அது இலங்கைத் தமிழர்களின் முயற்சி, அதற்கு உறுதுணையாகவிருந்த புதுச்சேரிகாரரான பாரீஸ் சொர்போன் பல்கலைக்கழகத்தின் l’Institut National des Langues et Civilisations Orientales தமிழ் பேராசிரியர் நண்பர் முடியப்பநாதனையும் இங்கே குறிப்பிடவேண்டும். எண்பதுகளுக்குப் பிறகு பாரீஸ் நகரில் Gare du Nord என்ற பகுதி தமிழர் பகுதியாக மாறி இருக்கிறது. இங்கு பெயர்ப்பலகைகளெல்லாம் தமிழில் வைக்கப்படவேண்டுமென்று சட்டங்கள் ஏதுமில்லை, இருந்தபோதிலும் பெயர்ப்பலகைகளைத் தூய தமிழில் பார்க்க முடியும். தமிழர்களுக்கே உரிய குணத்துடன் கோவில்களை நிறுவி, வழிபாடு, பூசைகள், சடங்குகள் எப்போதும்போல தொடருகின்றன. இந்து கோவில்கள் மட்டுமல்ல கிறிஸ்துவ தேவாலயங்களிலும் தமிழில் பூசைகள் நடக்கின்றன. இங்கு எமது நிறத்தையும் முகத்தையும் பார்த்து தமிழரல்லாத ஒருவர் பிரான்சு நாட்டில் ‘வணக்கம்’ என்று கூறினால் அப்பெருமை இலங்கைத் தமிழர்களைச் சார்ந்தது.
இந்தியத் தமிழரோ இலங்கைத் தமிழரோ தமிழ் அடையாளத்தை தக்கவைத்துக்கொண்டிருப்பவர்கள் எவரென்று பார்த்தால் அவர் தங்கள் ஆயுளில் ஒரு பகுதியை இந்தியாவிலோ இலங்கையிலோ செலவிட்டவராக இருப்பார். மொழிமீதான காதல் எங்கும் அரும்பும், ஆனால் மொழிஉணர்வினை பிறந்த மண்ணில் பெற்றால்தான் உண்டு.
———-
நன்றி: அமுதசுரபி பொங்கல் மலர்
உண்மை தான் இங்கு யார கேட்டாலும் வெள்ளைகார தொரை மாதிரி பதில் சொல்லுறாங்க தமிழர் கிட்ட பிரஞ்சிலை பேசினா மதிப்பாங்க ஒரு மாயா வித்தை காட்டுறாங்க. மத்த நாட்டுகாரங்க அவங்க மொழியில்தான் பேசுறாங்க.ஆனா நாம மட்டும் இந்த விஷியத்தா புரிந்துகொள்ள மறுக்குறம் . என்ன ஒரு ஆனந்தம் நம்ம மக்க கிட்ட நம்ம மொழியில் பேசுறதுன்ன. இத சொன்ன நம்மள வேற மாதிரியெல்லாம் பாக்குறாங்க.நாம எந்த வழியில் வந்தோம் என்பதே மறந்திட்டு ரொம்பபேர் அலையிராங்க.
உங்களை எழுத்தாளர் திரு ராமகிருஸ்ணனின் தளத்தின் மூலம் தெரிய வந்தது உங்களுடைய மார்த்த ஹரி நாவலை பத்தி கேள்வி பட்டேன் இந்தியாவில் வேறு சில புத்தகங்களுடன் இதனை ஆர்டர் கொடுத்து வர சொல்லி இருக்கிறேன்.படித்து விட்டு சொல்கிறேன்……
என்னுடைய மெயில் id anbou110@gmail.com
இனிய நண்பரே தங்கள் பின்னூட்டலுக்கு நன்றி
நா.கிருஷ்ணா