உலக நாடுகளில் ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக உபயோகத்திலிருக்கிற மொழி பிரெஞ்சு. பிரெஞ்சும் இலத்தீன் மொழியின் பாரம்பர்யத்தில் உதித்ததுதான், அது எட்டியுள்ள இடமும் ஆங்கிலத்திற்கும் சிறிதும் சளைத்ததல்ல. மொழி மாநாடுகளும், ஞானசூன்ய ஆய்வுகட்டுரைகளும், பட்டிமன்றங்களும் தமிழை வளர்த்துவிடும் என நம்பும் திராவிடத்தின் ஆர்ப்பாட்ட அரசியலின்றி மொழி வளர்க்கும் இனம் பிரெஞ்சினம். அவர்கள் மொழிவரலாறும் அரசியல் வரலாறும் வேறுவேறல்ல.
சூது, தந்திரம், வர்த்தகம், காலனி ஆதிக்கம், மதமாற்றம், கலை, பண்பாடு, தொழில்கள், அறிவியல் வளர்ச்சி என அனைத்தும் பிரெஞ்சு மொழியின் வளர்ச்சிக்குப் பங்களித்திருக்கின்றன. ஒன்றை இங்கே சுட்டிக்காட்டவேண்டும் இங்கிலாந்தும் -பிரான்சு நாடும் இருமைப் பண்புகளின் அடிப்படையில் எதிராளிகளாக இருந்தாலும் இருவரும் பரஸ்பரம் தங்களை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள். இங்கிலாந்து அரச குடும்பத்தின் முக்கிய மொழியாகவும், ஆங்கில கனவான்களின் மொழியாகவும், பிரெஞ்சு இருந்துவந்ததென்பது சரித்திரம் தரும் உண்மை. இன்றைக்கும் ஆங்கில மொழி வல்லுனர்கள் அநேகர் பிரெஞ்சு மொழியை சரளமாக பேசவும் எழுதவும் வல்லவர்கள். ஆங்கிலத்தித்தில் எழுதும் படைப்பாளிகளுக்கும் இது பொருந்தும். இத்தகைய மனப்பாங்கை பிரெஞ்சு எழுத்தாளர்களிடம் பார்க்க முடியாது. ஆக ஆங்கிலம் தம்மை நிலைநிறுத்திக்கொண்ட இடத்திலெல்லாம் பிரெஞ்சு ஊடுறவ காரணமாயிற்று. ஆங்கில நாவல்களில் படைப்புகளில் பிரெஞ்சு மொழியை இடைக்கிடை புகுத்துவதென்பது நாகரீகமாயிற்று; விளைவு பிரெஞ்சு ஆங்கிலம் நுழைந்த இடத்திலெல்லாம் இலைமறை காயாக உடன் சென்றது. இதற்கு எதிர்மாறானது ஆங்கிலத்தின் நிலமை. ஆங்கிலம் தெரிந்த பிரெஞ்சு எழுத்தாளரை விரல்விட்டு எண்ணிவிடலாம், அப்படியே தெரிந்தாலும் ஆங்கிலச் சொற்களை பயன்படுத்தவே மாட்டார்கள். அப்படி உபயோகிக்க நேர்ந்தாலும் மிகவும் தவிர்க்கமுடியாத நிர்ப்பந்தங்கள் இருந்தாலொழிய உபயோகிப்பதில்லை.
உலகில் 33நாடுகளில் அரசு மொழியாக பிரெஞ்சு இருக்கிறது. தவிர உலகில் புதிய மொழியைக் கற்பவர்கள் ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக தேர்வுசெய்வது பிரெஞ்சு. 175 மில்லியன் மக்கள் உலகில் பிரெஞ்சு மொழியை நன்கு எழுதவும் பேசவும் தெரிந்தவர்களெனவும் 100 மில்லியன் மக்கள் அன்றாட வாழ்க்கையிலும் அம்மொழியை உபயோகிக்கத் தெரிந்தவர்கள். உலகின் மிக முக்கியமான அரசு சாரா நிறுவனங்கள் அனைத்திலும் பிரெஞ்சு முக்கியமானதொரு மொழியென்ற தகுதியுமுண்டு.
——–