அன்னா ஹஸாரேவை எனக்கு அறிமுகப்படுத்தியவை இந்திய ஊடகங்கள். சொந்தச்செலவில் பொன்னாடை போர்த்திக்கொண்டு ஊர்முழுக்க தண்டோரா போடும் இந்திய மனப்பான்மைக்கு விலக்காக ஓர் அபூர்வ மனிதர். ஊர் பிரச்சினையைக் கையிலெடுத்துக்கொண்டு உழைக்கின்ற ஒன்றிரண்டு உத்தமர்கள் இந்தியாவில் இன்றைக்கும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்கிறபோது மனதிற்கு நிறைவாக இருக்கிறது. இந்தியா, அரசியல் கொள்ளைகூட்டத்திடமிருந்து விடுபடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது நறிகுறவர் கூட கைத் தொலைபேசி வைத்திருக்கிறார் என்பதிலில்லை. தனிமனித ஒழுக்கத்தைப் போற்றுகின்றவர்களின் எண்ணிக்கையும், சட்டத்தை மதிக்கிறவர்களின் எண்ணிக்கையும், கலையையும் பண்பாட்டையும் வளர்த்தெடுக்கின்றவர்களின் எண்ணிக்கையையும் பொறுத்தது அது. மனித குலத்தில் எந்தக்கும்பலில் இந்த எண்ணிக்கையினர் கணிசமாக இருக்கிறார்களோ, பெருமைகளை பாசாங்கற்ற செயல்பாடுகளால் நேர் நிறுத்துகிறார்களோ அக்கும்பல், அந்த இனம் – அவர்களை சேர்ந்த நாடு வாரலாற்றின் கவனத்தை தனது பக்கம் ஈர்க்கிறது.
இந்திய ஊடகங்களின்றி வேறு வகையிலும் அன்னா ஹசாரேவை படிக்க முடிந்தது. உபயம்: அவரது சகாக்களான கிரண்பேடி, மற்றும் சாந்தி பூஷன்; அவரது குரலுக்கு செவி சாய்க்கும் நடுத்தர வர்க்கம், படித்த மக்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், அரசு அலுவலகர்கள், ஓய்வு பெற்ற முன்னாள் அரசு அலுவலர்கள், முதியோர்கள், இளைஞர்கள், குடும்பப்பெண்மணிகள் என்று அப்பட்டியல் நீளுகின்றது. ஆக மொத்தத்தில் ஒரு சமூகத்தின் அனைத்து தரப்பினரும் அவருக்காக ஊர்வலம் போகிறார்கள், உண்ணாவிரதம் இருக்கிறார்கள், கூட்டம் ஏற்பாடு செய்கிறார்கள். சராசரி இந்தியன் ஒருவனுக்கு பரவலாக நாடெங்கும் ஆதரவு திரண்டதில்லை. ஆக அவரை நம்புகிறேன். இந்த எனது நம்பிக்கைக்கு வலுவூட்டுவதுபோல முன்னாள் நீதிபதி கிருஷ்ணய்யர் போன்றவர்களின் குரல்களும் ஒலிக்கின்றன.
அவரது போராட்டம் வெற்றி பெறவேண்டும் ஊழல் பெருச்சாளிகளிடமிருந்து இந்தியா விடுதலை பெறவேண்டுமென அண்ணல் காந்தியை பிரார்த்திக்கிறேன்.