கடிதப் பரிமாற்றங்கள் முக்கியம். உரையாடலைக்காட்டிலும் எழுத்துருவம் பெறுகிற சொற்களுக்கு வலிமை அதிகம். எழுத்தில் ஒன்றை சொல்கிறபோது, தார்மீகமாக அவ்வெழுத்துக்கு எழுதுகின்றவன் நேர்மையாக இருக்கவேண்டியிருக்கிறது, உண்மையை பேசவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது அல்லது எழுதிய பொய்யை இதுதான் உண்மை என்று சாதிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. வாசகன் அங்கே எஜமான், எழுதுகின்றவன் அடிமை. எழுதப்பட்டது அடிமைசாசனம். இரட்டை நாக்கு இருக்கலாம், இரட்டை எழுத்தாணி இருக்கமுடியாது. எழுத்தாளன்-எழுத்து- வாசகன் என்ற மூவர்கூட்டணியில் இயங்குதளம் இலக்கியமெனில், கடிதங்கள் கூட இலக்கியமாகின்றன. இங்கேயும் எழுதியது யார்? எழுதப்பட்டதென்ன- எப்படி சொல்லப்பட்டிருக்கிறது? யாருக்கு எழுதியது? என்ற கேள்விகளுண்டான பதில்கள் முக்கியம். இலக்கியத்தின் வடிவமைப்புக்கு, பொய்களும் கற்பனைகளும் பிரதானமாக இருக்கிறபோது, கடிதமென்பது எழுதுபவனின் மனக்கண்ணாடியாக வாசகனோடு நெருங்கிய ஒட்டுதலைக்கொண்டதாக இருக்கிறது.
இலக்கியங்களிற் கூட புனைவை உண்மையெனச் சாதிப்பவன் -எழுத்தூடாக- வெற்றிபெறுகிறான். இன்றுள்ள தொழில் நுட்பங்கள் கடிதப் பரிமாற்றங்களை வெகுவாகக் குறைத்துவிட்டன. கைவலிக்க மனம் திறந்து உண்மைகளைப் பதிவு செய்யும் மடல்கள் இன்றில்லை. கடந்த காலத்தில் நண்பருக்கு, மகளுக்கு, காதலிக்கு, அன்னைக்கு என ஒற்றைவாசகர் அல்லது வாசகியை மனதிற்கொண்டு எழுதப்பட்ட பல கடிதங்கள் இன்றைக்கு இலக்கிய மதிப்பீட்டினைப் பெற்று பிறவாசகர்களைப் பெறுவதற்கு அதிலுள்ள சத்தியங்கள் மட்டும் காரணமல்ல ஆரம்பத்திற் கூறியதுபோன்று எழுதியது யார்? எழுதப்பட்டதென்ன? எப்படி சொல்லப்பட்டிருக்கிறது? யாருக்கு எழுதப்பட்டதென்கிற கேள்விகளுக்குண்டான பதில்களே காரணம்.
“நிழலில் ஒளியின்மையைத் தேடுவதுபோல தீயவற்றில் நல்லவை அல்லாதவற்றை தேடுபவர்கள் கலகக்காரர்கள்” என்ற ஆந்தரே ழித் 1947ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபெல் பரிசுபெற்ற பிரெஞ்சு நாவலாசிரியர், சிந்தனையாளர். ழித்தின் படைப்புவெளி நாவல்கள், தத்துவ விசாரங்கள், கட்டுரைகள், கற்பனை நாட்குறிப்புகள், கடித இலக்கியங்களென விரிவானதொரு எல்லைப்பரப்பினைக் கொண்டது. கடித இலக்கியத்தினூடாக தனிமனிதனை கட்டமைக்க அயர்வின்றி நீண்ட விவாதங்களை நடத்தியிருக்கிறார். இவரது வழிகாட்டுதலில் இலக்கிய அன்பர்கள் ஒரு சிலரால் தொடங்கி நடத்தப்பட்ட 1909 La Nouvelle Revue francaise (NRF) ஒரு தீவிர இலக்கிய இதழ். ஜெர்மன் ஆதிக்கத்திலிருந்து பிரான்சு விடுதலை பெற்றநேரத்தில் இவ்விதழுக்கு விதித்திருந்த தடையை, ஆந்த்தே ழித் மரணத்திற்குப் பின்னர் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் விலக்கிக்கொண்டனர், மீண்டும் வெளிவந்தது. ஓர் இலக்கிய இதழ் நூறாண்டுகாலம் மக்கள் ஆதரவினை பெற்று நிலைத்திருக்கமுடியுமென்பதற்கு NRF சாட்சியம்.
ஜாய்ஸ் 1921ம் ஆண்டு பாரீஸ்வந்திருந்தபோது, பல பிரெஞ்சு எழுத்தாளர்களை கடுமையாக விமர்சித்திருந்தார், தப்பித்தவர் ஆந்தரே ழித் மட்டுமே. ஓரின புணர்ச்சியை சிலாகித்து ழித் எழுதியிருந்த கொரிடோன் (Corydon) என்ற பெயரில் வந்த கட்டுரையை அவ்வளவாக ரசிக்கவில்லை என்றபோதும் ழித்தின் நாவல்களில் குறிப்பாக Les Caves du Vatican மற்றும் La Symphonie Pastorale என்ற இரண்டு நாவல்களையும் பாராட்டி ஜாய்ஸ் பேசுகிறார்.
‘இந்திய தேசத்தின் கீழைப் பண்பு என்னைப் பெரிதாக வசீகரிக்கவில்லை’ என்றது மாத்திரமல்ல, ‘இந்தியா என்ற சொல் எதிராளி என்ற மனநிலையிலேயே என்னை வைத்திருந்தது, அம்மந்திரச்சொல் பலருக்கும் கிளர்ச்சியூட்டியிருக்கலாம் ஆனல் என்னளவில் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தத் தவறிவிட்டது’ என்பதான ஆந்தரே ழித்தின் மனப்பாங்கை பிரெஞ்சு படைப்பாளியான மால்ரோவும் தமது எழுத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்திய நாடும், ஆன்மீக சிந்தனையும் மேற்கத்திய கல்விமான்கள் பலரிடத்திலும் அளவற்ற காதலை தொடர்ந்து ஏற்படுத்தி வந்திருக்கிறது. கடந்த காலத்தில் துய்மால், ரொமென் ரொலான் என்றறிந்த பிரெஞ்சு படைப்பாளிகளைப்போலவே இன்றைக்கு பஸ்க்கால் கிஞ்ஞார், கிளேஸியோ போன்ற பிரெஞ்சு எழுத்தாளர்களூம் தங்கள் படைப்பியங்கு தளத்தில் அவ்வப்போது இந்திய தேசம், ஆன்மீகமென்று தேடி அலைவதுண்டு. ஆந்தரே ழித் அவர்களில் ஒருவரல்ல, “நான் தனித்தவன், பிறருடன் என்னை ஒப்பிடமுடியாது”, என தம்மைச் சுய மதிப்பீடு செய்திருந்தது அதற்குக் காரணமாக இருக்கலாம்.
‘இந்தியாவின் கீழைதேச முகத்திற்கோ, புரிந்துணர முடியாத அதன் ஆன்மீக சிந்தனைகளுக்கோ’ வசப்படாத அம்மனிதரை தாகூரின் இலக்கிய மொழி கவர்ந்தது. ஆந்தரே ழித் தேர்ந்த மொழிபெயர்ப்பாளர். ஜெர்மன், ஆங்கிலம் இத்தாலி ஆகிய மொழிகளை நன்கறிந்தவர், குறிப்பாக ஆங்கிலத்திலும் ஜெர்மன் மொழியிலும் அவருக்கு சிறந்த புலமை உண்டு. ஜெர்மன் மொழியினின்றும் ஆங்கிலத்திலிருந்தும் பல நூல்களை பிரெஞ்சுமொழிக்கு கொண்டுபோயிருக்கிறார். 1913ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபெல் பரிசு இரவீந்திர நாத் தாகூரின் கீதாஞ்சலிக்குக் வழங்கப்பட்டிருந்த நேரம். மொழிபெயர்ப்பு பணியும் இன்றியமையாத இலக்கியபணியென நம்பும் ஆந்தரே அந்நேரத்தில் ஆங்கிலத்திலிருந்து பல முக்கிய படைப்புகளின் மொழிபெயர்ப்பில் ஆர்வத்துடன் ஈடுபட்டிருந்தார். தாகூரின் கவிதைகளை இந்திய தேசத்துக்கேயுரிய புராண இதிகாச சிந்தனைகளிலிருந்து விடுவித்துக்கொண்டதும் மந்திரச் சொற்களால் வடிக்கப்பட்டதுமான கவிதைகள்’, என கருதிய ழித் கீதாஞ்சலியின் கண்ணோட்டத்தில் பார்த்த இந்தியா வேறு. கீதாஞ்சலியை மாத்திரமல்ல கீதாஞ்சலியை எழுதிய கவிஞரையும் 1921ம் ஆண்டு பிரான்சுக்கு அழைத்து, இலக்கிய சந்திப்பொன்றிர்க்கு ஏற்பாடும் செய்தார். நேருவின் மகளும் ஆந்தரே ஜித்தின் மகளும் சுவிஸ்நாட்டில் இருந்தபொழுது நெருங்கிய சினேகிதிகளாக இருந்திருக்கிறார்கள். அவ்வகையில் நேரு இந்தியாவின் பிரதமராக பதவியேற்ற பின்பு, ழித் அவரைச் சந்தித்திருக்கிறார்.
ஆந்தரே ழித்தின் எழுத்துக்கள் வரம்பற்ற சுதந்திரத்தை ஆதரித்தவை, ஆதிக்கத்தின் எத்தகைய வடிவத்தையும் முற்றாக நிராகரித்தவை. மரபு, அறநெறிகள் என்ற விலங்குகள் சிரத்தையின்றி போகிறபோக்கிலே உடைத்தெறியப்படுகின்றன. “நமக்கென வாய்த்தவையும், நமதென வரித்துக்கொண்டவையும், பிறர் எவரிடத்தும் காணக்கிடைக்காததென்று மனிதப் பண்பினை தனிமைப் படுத்துகிறார்.’ ‘உன்னைக்காட்டிலும் ஒன்றை பிறரால் சிறப்பாக செய்யவியலுமெனில் அந்த ஒன்றை நீ செய்யாமலிருப்பது மேல்’, என்று அவர் கூறும் யோசனை, மனிதர்களின் அத்தனை செயல்பாடுகளுக்கும் பொருந்தும். தமது சிந்தனையை ‘தனி மனிதனின் விசித்திரமான குணம்(Idiosyncrasie)’ என வகைமைக்குள் அடக்குகிறார்: அவரது சிந்தனை உலகில் ஐரோப்பா ஒரு பக்கம் ஆப்ரிக்கா மறுபக்கம்; அல்ஜீரியா இடப்பக்கமெனில் சுவிஸ் நாடு வலப்பக்கம். பிஸ்காரா(அல்ஜீரியா)வைப் பேசுகிற ழித், பெரேவின்(சுவிஸ்) குறித்தும் எழுதுகிறார். ஊசியிலை மரங்களை கொண்டாடுகிறபோதும், பேரீச்சை மரங்களை சிலாகிக்க தவறுவதில்லை.
மரபுகளைத் தளர்த்திக்கொள்ளாமை, நெறிமுறைகளில் பிடிவாதம், சமூகப் பண்புகளிடத்தில் மரியாதை என்ற கருத்தியங்களால் உருப்பெற்றிருந்த ழித் பின்னாட்களில் உரையாடல், விவாதம், எதிர்வினை, முரண்பாடுகளென்று கலகக் குரலுடன் திரிந்தவர். நண்பர்களைக்கூட எதிரணியில் நிறுத்தி விவாதிப்பதில் ஆர்வம், விவாதத்திற்கு துணை வேண்டியதில்லை. நண்பர்களை அருகில் அமர்த்தி விவாதத்தைத் துவங்கும் வழக்கமுமில்லை. “சர்ச்சை, சண்டைபிடித்தல், மனம் நெகிழ்தல், தொடர்ந்து விவாதத்துக்குரிய பொருளுக்கு வளம் சேர்த்தலென்பது எழுத்தாளருக்கு நோக்கமாக இருந்திருக்கின்றன என்கிறார், வலேரி (ழித்துக்கு வலேரி எழுதிய கடிதம் -28 ஜூன் 1906). ழித்தின் பரம ரசிகரும், பேராசிரியருமான குளோது மர்த்தான் என்பவரின் கடுமையான உழைப்பில் ஆந்தரே ழித்தின் கடிதங்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. சொந்தங்கள், நண்பர்கள், பிறருடள் ழித் உரையாட கடித மொழியும், அதன் வடிவும் பெரிதும் துணைபுரிந்திருக்கின்றன.
பத்து வயதில் பெற்றோர்களுக்கு ழித் எழுதியதுதான் அவருடைய முதல் கடிதம். விவாதத்தின்போதே எதிராளியாக தாமும், தம்மிடத்தை எதிராளிக்கும் அளித்து விவாதத்தை புணரமைக்கும் திறனும் அவருக்கு கைவந்திருக்கிறது. ‘அவன் என்று குறிப்பிடுகிறேன், ஆனால் அந்த அவன் வேறுயாருமல்ல நானே’ என்று கூறி வியப்பில் ஆழ்த்துகிறார். ஒரு கட்டத்தில் எனது எழுத்துக்களில் நான் ‘X’என்று குறிப்பிடும் முகம்தெரியாத நபர் நீங்கள் நினைப்பதுபோல வேறுயாரோ அல்ல அதுவும் நானே’ என்ற ரகசியத்தையும் ஒளிக்காமல் கூறுகிறார். கடித பரிமாற்றங்கள் அவரது Journal என்கிற அகவயது பதிவுகளைக் காட்டினும் தீட்சண்யமிக்கவை. கடிதமொழிகளூடாக நாம் சந்திக்கிற ழித் தம்மை தாமாவாகவே காட்டிக்கொள்கிறார்: எளிமை, பொய்முகமின்மை, இயல்பாய் வெளிப்படும் உரையாடல், செப்பனிடப்படாத தரிசனம், கபடமற்ற குரல் என அவற்றை பதிவு செய்யலாம். பொதுவாகவே ஆந்தரே ழித்தின் படைப்புகள் அவரது சொந்த வாழ்க்கையின் உண்மை பதிவுகள்.
ழித்துடன் கடிதப் பரிமாற்றங்கள் செய்துக்கொள்பவர்களுள் அவ்வப்போது தலைகாட்டும் புதுமனிதர்களைத் தவிர, Happy Few என்கிற வட்டத்தைச் சேர்ந்த அவருக்கு நெருங்கிய நண்பர்களுமுண்டு. ழித்-ஜேம்ஸ்; ழித்-குளோதல்; ழித்-புரூஸ்ட்; ழித்-வலேரி; ழித்-மர்த்தென் துய்க்கார்; ழித்-மொரியாக்… என பட்டியலை கைவலிக்க எழுதிக்கொண்டிருக்கலாம். ஆந்த்ரே ழித்தின் படைப்புகளை குறிப்பாக அவரது கடித பரிமாற்றங்களை வாசிக்கிற எவரும் தம்முள் பலராக அவர் வாழ்ந்துள்ளமையை உணரக்கூடும். ஒன்றிரண்டல்ல இரண்டாயிரம் நபர்களுக்கு 25000 கடிதங்கள் அவர் எழுதியிருக்கிறாரென குளோது மர்த்தென் கணக்கு வைத்திருக்கிறார். பிறருக்கு எழுதுவதும், பிறரோடு உரையாடுவதும், பிறருடன் விவாதிப்பதும் தம்மை மதிப்பீடு செய்ய உதவியதாக ழித் நம்புகிறார். ஆந்தரே ழித்தின் கடித பரிமாற்றங்களுள் ழித்திற்கும்-போல்வலேரிக்குமான கடிதப்போக்குவரத்துகள் குறிப்பிடவேண்டியவை. Correspondance -Gide-Valery என்ற பெயரில் பல பதிப்புகளை கண்டுள்ள இந்நூல் உலக இலக்கியங்களுக்கு பிரெஞ்சு படைப்புலகம் வழங்கியுள்ள கொடை என்கிறவர்கள் உண்டு. இந்நூலில் ழித்தும்- கவிஞர் போல் வலேரியும் 1890க்கும் 1942க்கும் இடையில் எழுதிக்கொண்ட கடிதங்கள் உள்ளன. இருவருமே சமகாலத்தவர், சிந்தனைக்கு இலக்கியவடிவம் கொடுப்பதில் தேர்ந்தவர்கள். முதற்பதிப்பின்போது 500 கடிதங்கள் கிடைத்தனவென்றும் மறு பதிப்பின்போது நூறு கடிதங்களை கூடுதலாகக் கிடைத்து பதிப்பித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
ஆந்தரே ழித்தின் படைப்புகளில் சுயசரிதைகள் வடிவில் எழுதப்பட்ட புனைவுகளும் முக்கியமானவை. இப்புனைவுகளை வாசிக்கிறபோது எதிர்கால இலக்கிய உலகில் நிகழவிருக்கும் மாற்றங்களுக்கு பிரெஞ்சு வாசகர்களைத் தயார்படுத்தும் அக்கறையை எழுத்தாளரிடத்திற் காண்கிறோம். கற்பனா வாத இலக்கியத்திற்கும், சுயகதை இலக்கியத்திற்கும் உரிய ‘தான்’, ‘தனது’ சொற்களின் பல வடிவங்கள் அவர் படைப்பில் நமக்கு அறிமுகமாகின்றன. எனினும் முழுமையாகத் தம்மை கற்பனாவதத்திடம் ழித் ஒப்படைப்பதில்லை. அதனிடம் (கற்பனா வாதத்திடம்) கையளிக்காமலேயே பிறர் தம்மை எளிதில் அடையாளப்படுத்துவதற்கு உதவும் தந்திரமாக சுயகதை புனைவு வடிவத்தை இலக்கியத்திற்கு அவர் தேர்வுசெய்திருக்கவேண்டுமென கருத வேண்டியுள்ளது. அவரது தந்திரங்களையும் சந்தேகிக்கவே செய்கிறோம். அவ்வாறான மன நிலையை வாசகர்களிடத்திலும் விமர்சகர்களிடத்திலும் ஏற்படுத்தும் சூட்சமத்திலேயே அவரது திறன் அடங்கியுள்ளதென வியப்பவர்களுமுண்டு. தமது அந்தரங்க நகர்வுகளை, அசைவுகளை, மெல்லிய சலனங்களை எழுதுவதன் முதல் நோக்கம் தனக்குள் இருக்கும் வாசகனுக்கு. தம்மிடமுள்ள ‘தான்’ மட்டுமல்ல அடுத்துள்ள பிறரிடத்திலும் தமது அந்தரங்கம் பகிர்ந்துகொள்ளப்படமேண்டுமென்பது அவரது உப நோக்கம். வாசகர்களான நாம் படிக்கிறபோது நமது மனநிலையை அவரும் வாசிக்கிறார்.
ழித்தின் சுயபுனைவு அணுக்கத்தை மூவகையாகக் பிரிக்கலாம். தம்மை நிழலினினின்று வெளிச்சத்திற்கு கொண்டுவருவதென்பது முதற்படி. ஒளித் திட்டுக்குள் நிறுத்திவைப்பட்ட தனக்குத் தானே ஈவிரக்கமற்று தீர்ப்பு வழங்குவதென்பது இரண்டாம் படி. தாம்வழங்கிய தீர்ப்பிற்கு வாசகனிடம் மேல் முறையீடு செய்வதும் நீதிகேட்பதும் மூன்றாம் படி. அவரிடம் தண்டனைக்குள்ளாகிற தனிமனிதன் நமக்குள்ளும் இருக்கிறான் என்கிறபோது தண்டனைக்குரியவன் நீதிபதியா குற்றவாளியா என்ற கேள்விகளைத் தவிர்க்க முடிவதில்லை. ஆந்தரே ழித்தின் சுய சரிதைகளை வாசிக்கிறபோது எதிர்காலத்தை நிகழ்காலமாகப் பாவித்துக்கொண்டு பாம்புபோல ஆரவாரமின்றி சருகுகள், புதர்கள், முட்செடிகள், ஈரமணல், சரளைக்கற்களென்று ஊர்ந்து செல்லும் அனுபவம் நமக்கு வாய்க்கிறது.
சுயசரிதை புனைவுகள் வரிசையில் நான்கு நூல்கள் Paludes, As if it die, The Counterfeiters ஆங்கில மொழியாக்கத்தில் கிடைக்கின்றன. நவீன இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர்கள் கட்டாயம் படிக்கவேண்டியவை இவை. நாவல்கள், கட்டுரைகள், புனைவுகள், பயணக்கட்டுரைகள், காத்திரமான விமர்சனங்களென்று அவரது படைப்புகளின் எண்ணிக்கை நூற்றுக்கு குறையாமல் இருக்கின்றன. குடும்பவாழ்க்கை சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ஆந்தரே ழித் தன்னினப்புணர்ச்சியில் ஆர்வங்கொண்டவர். இதை சுயபுனைவுகளில் சொல்லவும் தவறியதில்லை. __________________________________________________________