அண்மையில் கு. சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது -2011 அறிவிப்பில் சிறப்பு பரிசினை வென்றுள்ள பத்து வெளிநாட்டினரில் மாத்தா ஹரி நாவலுக்காக எனது பெயரையும் அறிவித்திருக்கிறார்கள்.
இலங்கையைச் சேர்ந்த டென்மார்க்கில் தற்போது வசித்துவரும் திரு. ஜீவகுமாரன் இதே வரிசையில் பரிசினைப்பெற்றிருக்கும் மற்றொரு எழுத்தாளர். அவர் இத்தகவலை 26 ஜுலை 2011 அன்று முதன்முதலாக எனக்கு எழுதியிருந்தார். ஒருவாரத்திற்கு முன்பு எனது மரியாதைக்குக்கும் அன்பிற்குமுரிய நண்பர் இந்திரனும் உங்களுக்குப் பரிசு கிடைக்க வாய்ய்ப்பிருக்கிறதென்று தெரிவித்திருந்தார். எனினும் இப்பரிசுத்தகவலை எனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களைத் தவிர ஒருவருக்கும் (விதிவிலக்காக நெருங்கிய நண்பர் பசுபதி அறிவார்) நான் சொல்லவில்லை. இங்கே வலைத் தலத்தில்கூட இடவில்லை. காரணம் இதுதான்:
நீலக்கடல் நாவல் தமிழ் நாடு அரசின் வெளிவாட்டினருக்கான பரிசினை வென்றிருக்கும் செய்தியை 2007ல் திடீரென்று அறியவந்தபோது பெரும் மகிழ்ச்சியை அளித்தது, உண்மையில் குதூகலப்பட்டேன். இரண்டாவது நாவல் மாத்தா ஹரிக்கும் ஏதாவதொரு பரிசு கிடைக்குமென எதிர்பார்த்தேன், எனக்கு மாத்தா ஹரி பிடித்தமான நாவல். எதுவுமில்லையென்றானதில் மிகுந்த ஏமாற்றம். அப்போதுதான் நண்பர் ஒருவர், அன்பிற்குரிய மூத்த எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் 2008ல் வெளிவந்த நூல்களுள் தமக்கு விருப்பமான முதல் பத்து நூல்களைத் தேர்வு செய்து தமது வலைத்தலத்தில் குறிப்பிட்டிருப்பதாகவும் அதில் ஐந்தாவது இடத்தை மாத்தா ஹரிக்கு அவர் கொடுத்திருப்பதாகவும் எழுதியிருந்தார். இங்கே வரிசை எண் முக்கியமல்ல, ஒரு மூத்த எழுத்தாளர் மனமுவந்து தேர்வு செய்தததை அந்த நாவலுக்குக்கிடைத்த பரிசாகவே கருதினேன். இன்றைக்கும் அந்த சந்தோஷம் நிலைத்திருக்கிறது, தவிர மாத்தா ஹரிக்கு திருவாளர்கள் கி.அ. சச்சிதானந்தமும், வே.சபாநாயகமும் எழுதியுள்ள விமர்சனமும் ஒருவகையில் எனக்கு நிறைவைத் தந்திருந்தது.
இந்நிலையில் கு. சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது அறிவிப்பு வந்தபோது மிக அமைதியாகவே ஏற்றுக்கொண்டேன். தவிர இவ்விடயத்தில் நண்பர் இந்திரன் தலையீடு இல்லையெனில் எனக்குக் கிடைத்திருக்குமா என்ற சந்தேகம். அவர்தான் இரண்டுமாதங்களுக்கு முன்பு சின்னப்ப பாரதி அறக்கட்டளை விருதுக்கு உங்கள் நூல் வேண்டும் அனுப்ப முடியுமாவென்று கேட்டிருந்தார். சராசரி எழுத்தாளனுக்குள்ள ஆசையில் அனுப்பியும் விட்டேன். அவர் சம்பந்தப்பட்டவர்களுக்கு நூலையும் அனுப்பியிருப்பதாக பின்னர் தெரிவித்தார். இடையில் திடீரென்று சிபாரிசு காரணமாகத்தான் அதற்குப் பரிசு என்ற நிலை வந்துவிடுமோ என்றெனக்கு அச்சம். நண்பர் இந்திரனிடம் எனது மன நிலையைச் சொன்னேன். ‘நாகி” ஏன் இப்படி குழப்பிக்கொள்கிறீர்கள், புத்தகத்தை அனுப்பியதோடு எனது வேலை முடிந்தது, நன்றாக இருந்தால் கொடுப்பார்கள் இல்லையெனில் இல்லையென்றார். இதில் எனது பங்கு எதுவுமில்லை என ஒதுங்கிக்கொண்டாலும் மனதிற்குச் சங்கடமாக இருந்தது. மாத்தா ஹரி நூலை போட்டியிலிருந்து விலக்கிக்கொள்ள சொல்லலாமா என்று நினைத்து. வீட்டில் கலந்தாலோசித்த அன்று, முடிவினை அறிவித்திருந்த மின்னஞ்சல் ஆரம்பத்தில் தெரிவித்திருந்ததுபோல இலங்கை ஜீவகுமாரன் மூலம் வந்திருந்தது. நண்பர் இந்திரனும் தகவலை உறுதிசெய்தார். தொடர்ந்து குழப்பமாக இருந்தது. என்னைப்போன்ற எழுத்தாளனுக்கு இதுபோன்ற டானிக்குகள் தேவைதான் என்பது இன்றைய மனநிலை.
மனதில் இன்னமும் நெருடல்கள் இருப்பினும் மாத்தா ஹரியை தேர்வு செய்த கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை குழுமத்திற்கும் குறிப்பாக மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய திரு. கு சின்னப்ப பாரதி அவர்கட்கும், என்மீது அக்கறைகொண்டு எனி இந்தியன் பதிப்பகத்தின் பணி முடங்கியிருக்கிற சூழ்நிலையில் மாத்தா ஹரி நூலை அறக்கட்டளைக்கு உரிய காலத்தில் அனுப்பிவைத்து பரிசு பெற உதவிய அன்பிற்குரிய நண்பர் இந்திரனுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
மாத்தா ஹரிக்கு பரிசெனில் வழக்கம்போல திண்ணைக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன், குறிப்பாக நண்பர் கோ. ராஜாராம் அவர்கட்கு. நீலக்கடல் நாவல் போலவே மாத்தாஹரி நாவலும் திண்ணையில் வெளிவந்தது. அவர்கள் தொடங்கிய எனி இந்திய பதிப்பகமே பின்னர் புத்தகமாகவும் அதனைக் கொண்டுவந்தாரகள். எனி இந்தியன் பதிப்பகம் வெளியிட்ட சிமொன் தெ பொவ்வார் கட்டுரைதொகுதியும் மிகசிறப்பானதொரு நூல், உரிய வகையில் அடையாளம் பெறுமென நம்புகிறேன். ஏற்கனவே கவிஞர் தமிழ்நதி அவருடைய பத்து விருப்ப நூல்களுள் ஒன்றாக அதனை தேர்வு செய்திருக்கிறார், என்ன நடக்கிறதென பார்ப்போம்.
நா.கிருஷ்ணா