எழுத்தும் எழுத்தாளனும் ஓர் கடன் ஒப்பந்தம் செய்துகொள்கிறார்கள், ஒப்பந்ததாரர்கள் இருவரும் ஒருவர் மற்றவர் உயிரைத் தங்கள் சிமிழுக்குள் வைத்திருக்கிறார்கள். இருவருக்கும் எதிராளியின் ஆரோக்கியம் முக்கியம். இவர் அவரையோ அவர் இவரையோ தவிர்த்து உயிர்வாழமுடியாது. தனது வளத்தில் ஒரு பகுதியை எழுத்தாளனுக்கு கடன்கொடுக்க முன் வரும் எழுத்து, எழுத்தாளனின் தேவையையும், திருப்பி அளிக்கும் திறனையும் பொறுத்து கடன்தொகையை தீர்மானிப்பதில்லை. முழுச்சுதந்திரத்தையும் எழுத்தாளனுக்கு அளிக்கிறது, அவனது தேவையையும் திருப்பி அளிக்கும் திறனின் அடிப்படையிலும் கடன் தொகையை அவனே தீர்மானிக்கிறான்.
கைச்சாத்திடப்படாத இந்த ஒப்பந்தம் பரஸ்பரநம்பிக்கையின் அடிப்டையில் நிறைவேற்றப்படுகிறது. அசலுடன் வட்டியுயும் சேர்த்து பெற்று தனது கருவூலத்தை வளப்படுத்திக்கொள்ளும் எழுத்துக்குள்ளசுயநலம் எழுத்தாளனுக்கும் உண்டென்பதால் பரஸ்பர ஒட்டுண்ணிகுணத்தை மறந்து இருவரும் மற்றவர்களுக்கு நேர்மையாக இருக்கக் கடமைப் பட்டவர்கள் என்பதை இக்கடன் ஒப்பந்தத்தின் அடிப்படை சாரமாக கருதவேண்டியது. சார்த்துரு மொழியில் இதனை கடப்பாடு என்று அடையாளப்படுத்தலாம்.
மொழிக்குக் கடப்பாடுவடையானாக இருப்பவன் – கொஞ்சம் யோசித்துபார்த்தோமெனில் -அவனுக்கே அவன் கடப்பாடுடையவனாக இருக்கிறானென்று அச்சூத்திரத்தை தெளிவுபடுத்திகொள்கிறோம். சற்று கூடுதலாக சிந்தித்தால் எழுத்தும் எழுத்தாளனும் வேறுவேறல்ல- என்றாகிறது. வேண்டுமானால் புரிதலுக்காக எழுத்தாளர்களை எழுத்தின் அவதாரங்கள் எனக்கொள்வோம். அந்த அவதாரத்தில் அம்பையுமிருக்கலாம் ரமணிசந்திரனுமிருக்கலாம். எடுக்கின்ற அவதாரத்தின் நோக்கத்தை நிறைவேற்றவேண்டிய கடப்பாடு அவர்களுக்கிருக்கிறது. ஜெயகாந்தனுக்கென்று ஒரு மொழியை கதைசொல்லலை மேற்குறிப்பிட்ட கடன்பத்திரத்தில் ஷரத்தாக சேர்த்திருப்பார்கள், அந்த ஒப்பந்தத்தின் ஷரத்தை நிறைவேற்ற வேண்டிய தார்மீக கடப்பாடு ஜெயகாந்தனென்ற அவதாரத்திற்கு இருக்கிறது. எழுத்தாளனுக்குள்ள சுதந்திரம் என்பது ஒருவகையில் எழுத்திடமுள்ள கடப்பாட்டை புரிந்து நடப்பது.
உம்பர்ட்டோ எக்கோ தனது கறுப்பு நாயை வெள்ளை நாயாக மாற்றப்போகிறேன் என்கிறார். அவரது கறுப்பு நாய் நீங்கள் அறிந்த நாய்தான் பெயர் ‘The name of the Rose’. வெகுசன ரசனைகேற்றவகையில் தமது நாவலை திரும்பவும் எழுதப்போகிறாராம், பரவலான வாசகர்களை அவரது படைப்பு எட்டவேண்டுமாம்..
உம்பர்ட்டோவின் நல்லெண்ணத்தை சந்தேகிக்கமுடியாது. கூடுதலாக ஒன்றிரண்டு மில்லியன் டா¡லரை சம்பாதிக்கவேண்டுமென்ற என்ணம் அவரது பதிப்பாளருக்கு இருக்கக்கூடும். உம்பர்ட்டோவுக்கு இருக்கமுடியாது. அண்மையில் வெளிவந்த The Cemetery of Prague, நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது என்கிறார்கள் – வாசித்ததில்லை. இன்றையதேதியில் உம்பர்ட்டோ எக்கோ என்ற பெயரில் ஒரு விலைப்பட்டியலை நூலகத்தில் வைத்தால்கூடபோதும், அதற்கும் வாசகர்கள் கிடைப்பார்கள். இச்சூழலில் எல்லோருக்கும் கொண்டுபோகிறேனென்று இலக்கியத்தை எளிமைபடுத்து அவசியமா என்று கேள்வி எழுகிறது.
உம்பர்ட்டோவின் இந்த முயற்சியை கண்டிக்கின்றவர்கள் இருக்கிறார்கள். ஆதரவாக குரல் கொடுப்பவர்கள் இருக்கிறார்கள். நான் கண்டிக்கிறவர்கள் பக்கம். நாளை விஷ்ணுபுரத்தை எளிமைபடுத்துவதாக அதன் ஆசிரியர் கூறினால் ஏற்கமாட்டேன். விழ்ணுபுரத்து அழகே அதன் சிக்கலான நடையில்தானிருக்கிறது.. அப்படியொரு ஒப்பந்தத்தை ஜெயமோகன் எழுத்தோடு கைசாத்திட்டுள்ளார். உம்பர்ட்டோ எக்கோவிற்கும் அத்தகைய கடப்பாடு எழுத்திடமுள்ளதென்பது எனது கருத்து. The name of the Rose வாசகர்கர்களில் ஒரு விழுக்காட்டினர் கூட லத்தீன்மொழியை கற்றிருக்க சாத்தியமில்லை, அதனாலென்ன இடைக்காலத்தைப் பற்றி பேசுகிற நாவலொன்றில் அதன் உபயோகம் நாவலின் தரத்தை கூட்டியுள்ளதென்றே சொல்லவேண்டும். தவிர நாவலெங்கும் தற்காலத்தையும் இடைக்காலத்தையும் பிணைக்கும் தத்துவ விசாரங்களையும் குறியீடுகளையுங்கூட எளிமைப்படுத்துவாரா எனத் தெரியவில்லை. தவிர உம்பர்ட்டோவின் இந்த முடிவில் எனக்கென்னவோ ஏளனமும் கலந்திருக்குமோ என்ற சந்தேகம். அதாவது வெகுசன வாசகர்கள் இவரது படைப்பை தொடமறுப்பதற்குக்காரணம் வாசகர்களின் போதாமை எனச்சொல்லாமல் சொல்லுகிறார். அதாவது நாவலில் இவர் வெளிப்படுத்தியிருக்கிற மொழி ஆளுமையும், நுட்பமான சொல்லாடலையும், கோத்திக் நிழலையும், குறிப்பாக ‘I was a medievalist’ in hibernation’ எனக் கர்வப்படுகிற விஷயத்தை ஞான சூன்யங்களுக்குத் தெரியபடுத்துவானேன் என நினைக்கிறார் போலிருக்கிறது.
எனக்குள்ள ஆதங்கம் இதுதான் ‘இதனை இவனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து’ எழுத்து இவர்களோடு ஒப்பந்தம் போட்டிருக்கிறது அக்கடப்பாட்டை மீறுவானேன், மீறி தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்வானேன்.
——–
.