‘வாய்யா அல்லது வாம்மாவென்று அழைத்து, ‘தமிழ்நாட்டிலே உங்களுக்குக் குடைக்கூலிக்குக்கூட இடம் கிடக்கவில்லைண்ணு கேள்விபட்டேன், இங்கேதான் கொஞ்சகாலம் தங்கிக்குங்களேன்’ என்று மத்திய சிறையோ அல்லது திகார் சிறையோ சொல்வதில்லை. அழையாவீட்டு விருந்தாளியாக இவர்கள்தான் வலியச்சென்று கதவைத் தட்டுகிறார்கள். அவர்கள் வாழ்க்கைத் தேர்வு அப்படி. “அறத்தாறிதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோ டூர்ந்தான் இடை” என்கிறது குறள். இந்த அறம் வேறொன்றுமல்ல – தேர்வு. பல்லக்கு சுமப்பவனும், அமர்ந்திருப்பவனும் அவரவருக்கு எது வேண்டுமோ அதை தேடிப்பெற்றிருக்கிறார்கள். இத்தருணத்தில் நமது இடமென்ன? என்ற கேள்விக்குண்டான பதில் அதற்கு முந்தைய தருணம் வரையிலான நமது தேர்வுகளின் அடிப்படையில் பெறப்பட்டது. கோளும் நாளும் அதனதன் விதியை அவைகளே எழுதிக்கொள்கின்றன. அருபது நொடி, அருபது நிமிடம், இருபத்துநான்கு மணி நேரமென்று ராசிபலன் பார்க்காமல், சனீஸ்வரன் கோயிலைச் சுற்றாமல் தம்மை மட்டுமே கருத்தில்கொண்டு நாட்கள் முன்நகர்ந்துகொண்டுதானிருக்கிறன. இவர் நம்ம ஆள் அதனால் நல்லது செய்யவேண்டுமென்றோ, அவர் எதிர் தரப்பு ஆள் அவருக்குத் தீங்கு செய்யவேண்டுமென்ற திட்டமெல்லாம் நாளுக்கில்லை. நமது வாழ்க்கைக்கு அவை எவ்விதத்திலும் பொறுப்பல்ல. தீதுநன்றும் பிறர் தர வருவதல்ல.
மனிதர் வாழ்க்கையில் தேர்வு முக்கியம். நம்மால் தேர்வு செய்யய்யப்படமுடியாதது மூன்று: பெற்றோர்கள், இனம், மொழி இவற்றைத் தவிர பிற அனைத்தும் தேர்வுசெய்ய முடிந்தவைதான். கல்வி, வேலை, வாழ்க்கைத்துணை, நண்பர்கள், படிக்கும் புத்தகங்கள், நெறிகள், முரண்கள், சண்டை, சமாதானம், சவடால் பேச்சு, கோபம், அமைதி, சிரிப்பு அழுகை என இப்பட்டியலை முடிக்காமல் நீட்டிக்கொண்டே போகலாம். ஒவ்வொரு வினையும் அவ்வினையின் பலனும் எதிரெதிர் பண்புகளைக்கொண்ட இரு தனிமங்களொன்றின் தேர்வை சார்ந்தது. இத்தேர்வில் எனக்குச் சாதகமானதென்ற கருத்தியத்தின் அடிப்படையில் ஒரு தேர்வையும் எனது பாதகத்தைத்தரும் என்ற கருத்தியத்தின் அடிப்படையில் மற்றொன்றையும் தேர்வு செய்கிறோம். அதாவது பின்னதும் ஒரு வகையில் தேர்வு என்றாகிறது. எனினும் இந்த இரண்டாம் வகை தேர்வுக்கு நிராகரிப்பு என்று பெயர். வேண்டாமென்று முகம் சுளிப்போம், போதும், மிக்க நன்றிங்க என நாகரீகமாகவும் மறுக்கக்கூடும், கடுமையாக விவாதிக்கலாம். தள்ளி நிற்கலாம் ஒதுங்கிப் போகலாம், சிலநேரங்களில் ஓடவும் செய்யலாம். தேர்வுக்கு அறிவு புலன் இரண்டும் துணை நிற்கின்றன, குறள் சுட்டும் பல்லக்கில் ஊர்பவன் அறிவினைக்கொண்டு தேர்வு செய்திருக்கலாம். இருந்தபோதிலும் அதை சாசுவதப்படுத்திக்கொள்ள ஒவ்வொரு நாளும் அவனதுதேர்வு சரியானதாக அமையவேண்டும்.
‘எக்ஸ்பிரஸ்’ பிரெஞ்சு தினசரிகளுள் முக்கியமானது. நித்தியானந்தா- ரஞ்சிதா, பட்டப்பகலில் கொலை. ரஜனிப்பேரப்பிள்ளை மூத்திரம் போனார் போன்ற நாட்டின் அதிமுக்கியமான கவலைகளில் அக்கறைகொண்ட நாட்டின் நெம்பர் ஒன் தினசரி அல்ல, ஒரு சராசரி தினசரி. இவ்வருடம் வாசகர்களை உறுப்பினர்களாகக் கொண்ட தேர்வுக்குழுவினர் சிறந்த நாவலாக பிலிப் விலென்(Philippe Vilain) என்ற எழுத்தாளரின் ‘Pas son Genre’ (அவனுக்கு உகந்ததல்ல) நாவலை தேர்வு செய்துள்ளனர்.
ஒரு தத்துவவாதி முடிவெட்டும் பெண்ணை நேசிக்க முடியுமா? பேராசிரியர்கள், அறிஞர்கள், சித்தாந்தம், பேருரைகள், விவாதங்கள், ஆய்வு கட்டுரைகளென நேரத்தை செலவழித்து, பல்கலைகழக வளாகங்கள் நிறைந்த பாரீஸ் மாநகரில் வாழ்ந்துபழகிய ஒரு சிந்தனாவாதி திடீரென்று ஒரு நாள் துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு பட்டிக்காட்டு வாழ்க்கையை தேர்வு செய்யமுடியுமா? என்ற இரண்டு கேள்விகளை முன்வைத்து அப்பதிலுக்குண்டான சாதக பாதகங்களை ஆய்ந்து மனித வாழ்க்கையில் தேர்வுக்குள்ள முக்கியத்துவத்தை வெகு நேர்த்தியாக சொல்லியிருக்கிறார். ‘எதை தேர்ந்தெடுப்பது?’ என்ற கேள்வியை மையப்பாடுத்திய கதை சொல்லல் நீர்ச்சுழலின் வேகத்துடன் வாசகனை ( முதல் அத்தியாயத்தை சகித்துக்கொண்டால்) உள்வாங்கிகொள்கிறது. எந்த மருந்துக்கும் குணமாகாத எந்த வேப்பிலை அடிக்கும் இறங்கிவராத ஒரு தீராத நோய் கதை சொல்லிக்கு இருக்கிறது. அந்நோய் உடனடியாக முடிவுக்கு வரவிடாமல் அவனைத் தடுக்கிறது, விளைவு, பிரச்சினைகளிலிருந்து விடுபடமுடியாமல் தவிக்கிறான். அவனுக்கு ஒன்றைத் தேர்வு செய்கிறபோது மற்றவற்றை நிராகரிக்கிறோமென்கிற குற்ற உணர்வு, ஓர் இருப்பின் நிராகரிப்புக்குண்டான தகுதியை நிர்ணயிப்பதில் அவனுக்கு சிக்கல்கள் இருக்கின்றன. தேர்வு குறித்து அவனுக்குள் உறையும் தயக்கத்தின், ஆரம்பம் எங்கே என்று பார்க்கிறபொழுது தனி மனிதனையும் அவன் சார்ந்த சமூகத்தையும் பிணைத்திருக்கிற கயிற்றின் தன்மையை ஆராய வேண்டியிருக்கிறது. கதைசொல்லியான பிரான்சுவா தனக்குப் பிறர்கொடுக்கின்ற மரியாதை சமூகமென்ற சனாதன தர்மத்தின்பாற்பட்டதென்ற முடிவினைக்கொண்டவன். அவர்களோடு வாழ நேர்ந்தாலும் தான் அவர்களிலொருவனல்ல என்று நம்புபவன். ( சாதிகட்சிகளில் தலைவர்கள் நினைவுக்கு வந்தால் அதற்கு பிலிப் விலென் பொறுப்பல்ல). தேர்வு செய்வதில் தயக்கமுள்ள ஆசாமி என்பதால், அவனாக அவன் இருப்பதில்லை, அவனுக்கான் வாழ்க்கையை அவன் தர மறுக்கிறான். வாழ்க்கையை இரண்டாக வகுந்து: பகுத்தும், காரண காரிய அடிப்படையில் செயல்களை தீர்மானித்தும் கற்பனா உலகில் உலாவரும் வாழ்வு ஒருபுறம் எதார்த்ததின் வெக்கைக்கும் குளிருக்கும் ஏற்ப போர்வைதேடும் சராசரி மனித வாழ்க்கை தேர்வு மறுபுறம். மேற்குடிதன்மையும் பாரீஸ்நாகரத்தின் அகங்காரமும் பாம்புபோல இறுக சுற்றிக்கொண்டிருக்கிறது. தொட்டால் கொத்திவிடுமோ என்கிற பயம்.
கதை சொல்லி, நாவலில் வருகிற மனிதர்களின் இயல்பான குணத்திற்காக அவர்களை நேசிப்பதை ஏற்றுக்கொள்கிறோம்: சிலர் நிறைகளுக்காக நேசிக்கப்படுகிறார்கள். வேறு சிலரை அவர்களின் குறைகளுக்காக நேசிக்கிறான். இதுவே அவன் தேர்விற்கான நபரை அடையாளப்படுத்த தயங்குவதற்குக் காரணமாகிறது. தவிர குறையும் நிறையும் அவரவர் பார்வையைப் பொறுத்ததென்ற உண்மையை உணராமலுமில்லை. அவன் வாழ்க்கையில் குறுக்கிடும் ஜெனி·பர் ஒரு சிகைத் திருத்தும் பெண்மனியாக இருந்தும் அவள் ஸ்பரிசத்தில் ஒரு தத்துவவாதியாக இருந்துகொண்டு இவன் போதிக்கமறந்த அல்லது இயலாத உண்மைகளை அவள் போதிப்பதாக நினைக்கிறான்.
இந்நாவலில் வரும் கதைநாயகனின் அச்சமும் பதட்டமும் உலகில் பலருக்கும் ஏற்படும் அனுபவம். எதைதேர்ந்தெடுப்பது என்று ஆரம்பித்து, தேர்வுக்காக பல தேர்வுகளை எழுதி காத்திருந்து அலுப்பவர்களில் ஒருவன். நீதிக்குப் பொருந்தக்கூடிய ஒரு தேர்வினை எட்ட உச்ச நீதிமன்றத்திற்கா போகமுடியும்.