ஆனந்த விகடன் 9-5-2004 இதழில் வெளிவந்த இச்சிறுகதையே நீலக்கடலுக்கு மூலம்
பார்த்திபேந்திரன் காதலி –
இருபத்தோராம் நூற்றாண்டு ஒரு சித்திரைமாதம்
விண்ணுயர்கோபுரங்கள், வேத முழக்கம், சர்வக்ஞ பீடம், புண்ணிய நகரம் என அறிந்திருந்த காஞ்சிபுரத்தை அடைந்தபோது தனியல் சோர்ந்திருந்தான்
பிறந்து பாலுண்டமொழி, தவழ்ந்து மண்ணுண்ட நாடு, தோலின் நிறத்தால் இனம். பிறப்பால் தழுவிய மதம் எனப் புறத்தோற்றத்தில் இந்திய மண்ணுக்கு முரண்பட்ட பிரெஞ்சுக்கார இளைஞன்.
ஏழுமணிக்கு எழுந்து கெல்லக்ஸை விழுங்கியபின் பல் துலக்கி (சில நாட்களில் துலக்காமலும்), கண்ணாடி பார்த்து, லோ¡ஷன்களில் குளித்து, அணிந்த சூட்டைச் சரிபார்த்து, டையின் இரண்டாவது முடிச்சை லி·ப்டில் போட்டு, பாரீஸின் சுரங்கப்பாதை ரயிலான மெட்ரோவைப் பிடித்து, பயணத்தில் ‘லிபரேஷன்’ தினசரியின் கடைசிப் பக்கம் வரும்போது இவனது ராடோ 8.18-ஐ காட்டும். இறங்க வேண்டிய ‘மோன்பர்னாஸ்’ ஸ்டேஷன் வந்துவிடும். அடுத்த பன்னிரண்டாவது நிமிடம் தனது மேலாளர் பதவிக்கான இருக்கையில் அமர்ந்து நிமிர்ந்து பார்த்தானென்றால், மேஜைக்கடிகாரம் 8.30-ஐ சொல்லும்.
இந்த அட்டவணை வாழ்க்கைக்குப் பழகி, தனியல் அறிந்ததெல்லாம் தனது நிறுவனத்தின் உற்பத்தித் திறன், அவற்றைச் சந்தைப் படுத்துவதற்கான உத்திகள், நுகர்வோர் பலவீனம், எதிரி நிறுவனங்களைத் துவம்சம் செய்கிற வித்தை..இத்யாதி-இத்யாதி-
இந்த ஓடும் நீரில்தான் பாசியாகச் சிலகனவுகள்…திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான கனவுகள். சந்தித்த மருத்துவர்கள், வேலைப் பளுவிலிருந்து விடுபட்டு மன உளைச்சலைக் குறைக்கவேண்டுமென ஆலோசனை வழங்கினார்கள். விடுமுறை எடுத்துக்கொண்டு, இரண்டுவாரங்களுக்குத் ‘தயித்தி’த் தீவுக்குச் சென்றுவந்தான். சீரடைந்தது உடல்மட்டுமே… மீண்டும் கனவுகள்!
அறிந்திராத மண், காற்று, ஆகாயம், அறிமுகமில்லாத மனிதர்கள், கேட்டிராத மொழி என ஆரம்பத்தில் சந்தேகித்து ஒதுங்கிய அவன் மனம், நாளடைவில் அந்தப் படிமங்களைத் தேடி ஓடியது. சந்தோஷப்பட்டது. கனவு தொடர்ந்தது…தூரத்தில் கோபுரம், அகன்றவீதியில் ஒதுங்கிய அந்த வீடு, பெரிய வீடு. விழல் வேய்ந்த கூரை, மண்சுவர், சுவரெங்கும் வெண்புள்ளிகள், அவற்றைச் சுற்றி எழுதப்பட்ட கோட்டோவியங்கள்…
இடையிடையே கோழியைப்போல, மயிலைப்போலச் சித்திரங்கள். மத்தியில் சிற்பவேலைப்பாடுகள் நிறைந்த தடித்த ஒற்றைக் கதவு. அந்தக் கதவு குறைந்த அளவே திறந்திருக்க, அதனை அடைத்துக்கொண்டு அவள்! முகம் மட்டுமே தெரிகிறது. ஒருக்களித்த தலை, குவிந்த முகவாய், பேசத் துடித்து ஊமையாக ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கிற சிவந்த, ஈர அதரங்கள். ரோஜா மொக்காய் நாசி. அதன் இருபுறமும் சிறிய மல்லிகை மொக்காய் மூக்குத்தி. நெற்றியின் மத்தியில் பவளச் சிவப்பில் ஒரு பொட்டு.
இமைக்க மறந்த மையிட்ட கண்கள் சோகக் கண்கள். கண்ணீர்த் துளிகள் மையில் கலந்து யோசித்து சிவந்திருந்த கன்னக்கதுப்பில் இறங்க, அதைத் துடைக்க மனமின்றி வீதியைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள். அல்லது எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறாள்.
கோபுரமும், அகன்ற வீதியும், மண்சுவரோடு எழுந்த வீடும், திறந்திருந்த ஒற்றைக்கதவின் இடைவெளியை அழகுபடுத்திய முகமும் திரும்பத் திரும்ப வருவதற்கான காரணத்தை அறிவதற்கான முயற்சியில் தனியல் இறங்கிக் களைத்திருந்தபோதுதான், அது நடந்தது.
இந்தியாவுக்குச் சென்று திரும்பியிருந்த நண்பர் காட்டிய புகைபடங்கள் ஒன்றில், அவன் கனவில் வந்த அதேவீடு. அவனால் நம்பமுடியவில்லை, நம்பாமலிருக்கவும் முடியவில்லை.
நண்பரிடம் விசாரிக்க, தென்னிந்தியாவில் கோபுரங்கள் நிறைந்த காஞ்சிபுரத்துக்குச் சென்றபோது, அந்த வீட்டைக் கண்டதாகவும் வெளிநாட்டுச் சுற்றுலாவாசிகளைக் கவருவதற்காக ஒரு பழையவீட்டைப் புதுப்பித்து, அதற்குக் ‘காஞ்சிமனை’ என்று பெயரிட்டு, பண்டைய வீட்டு உபயோகப் பொருட்களைப் பொருத்தமாகச் சேர்த்து அழகுபடுத்தி இருக்கிறார்கள் என்றும் தெரிவிக்க, உடனே இந்தியா செலவ்து எனத் தீர்மானித்தான் தனியல்.
தனி ஒருவனாக, பாதுகாப்பற்ற இந்தியச் சாலைகளில் நீண்டதூரம் பயணிப்பது என்பது ஒரு சவால். எனினும், இறுதியாக காஞ்சிபுரத்தின் எல்லையைத் தொட்டபோது, பயணவலி குறைந்து, பதிலாக நெஞ்சத்தில் கோடை மழையில் நனைந்த விடலைப்பையனின் சந்தோஷம்!
தூரத்தில், கனவில் கண்ட விண்ணைச் சீண்டும் கோபுரம், அதைத் தொட்டு விளையாடும் புறாக்கூட்டம், சூரியனுக்கு முன்னே வர வெட்கபட்டு தன் முறைக்காகக் காத்து நிற்கும் நிலா… எதுவுமே அவனுக்குப் புதியதல்ல!மனம் வழிகாட்ட காரைச் செலுத்தி, இறுதியாக அந்த வீட்டின் முன் காரை நிறுத்தி இறங்கிக்கொண்டான். வீட்டுக்கு முன்னே சிறிது நேரம் நின்று, கனவில் வந்த படிமங்களோடு ஒப்பிட்டுப்பார்த்தான். மனம் அங்கீகரித்த திருப்தியில், கதவை அழுந்தத் தள்ளினான். திறந்துகொண்டது. எதிர்ப்பட்ட பெண்ணிடம் கேட்டான்…
“இது கச்சியப்ப சிவாச்சாரியார் இல்லந்தானே?”
பத்தாம் நூற்றாண்டு ஒரு சித்திரை மாதம்…
கனிமொழிக்குச் சொந்தமானவளை நேரிட்டுப் பார்க்கிறான். அவற்றை உச்சரித்து ஓய்ந்த இதழ்களைப் பார்க்கிறான். இதழ் சுமக்கும் கன்னங்களைப் பார்க்கிறான். இமைக்க மறந்த இரு கருவிழிகளைப் பார்க்கிறான். ஜென்ம ஜென்மமாக ஒருவர், மற்றவருக்காகக் காத்திருப்பதை உணர்ந்து பார்க்கிறான்.
“என் கேள்விக்கு மறுமொழி இல்லையே?”
“மன்னிக்கவும். என் பெயர் பழனிவேலன். உத்திரமேரூர் பெருநிலக்கிழார் அரூரார் மைந்தன். ஸ்ரீ குமரக்கோட்டம் ஆலயத்திலிருந்து வருகிறேன். அக்கினி நட்சத்திர உச்சிவேளை பூஜைக்கென பெரு நிலக்கிழார்கள், வடதிசை மாதண்ட நாயகர், இறை அதிகாரி உட்பட எல்லோரும் காத்திருக்கிறார்கள். கச்சியப்ப சிவாச்சாரியாரை உடனே அழைத்துப் போகவேண்டும்…”
“தந்தை புறப்பட்டுச் சென்று இரு நாழிகை ஆயிற்றே! கந்தபுராணத்தை எழுதிமுடிக்கும் ஆவலில், தனது அன்றாடப் பணிகளைக்கூட மறந்துவிடுவார்..” என்று வருந்தியவளுக்கு என்ன நேர்ந்ததோ, முகம் கவிழ்ந்து மெள்ள கதவடைக்கிறாள்.
குமரக்கோட்ட ஆலயத்துக்கு மீண்டும் வந்தவனின் மனம் முழுக்க அம்பிகையாக அர்ச்சகர் பெண். மீண்டும் மீண்டும் அந்தப் பெண்ணையே சுற்றிவந்து அவன் வாலிபம் வணங்க, நினைவை ஆசீர்வதித்து, தேர்ந்தெடுத்த உபாயம்.. கச்சியப்ப சிவாச்சாரியாருக்குச் சீடனாக மாறுவது. மாறினான்!
உற்சவ காலங்களிலும், விசேட நாட்களிலும் கச்சியப்பருக்குத் துணையாக குமரக்கோட்ட சுப்ரமணியருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்தான். பிழைதிருத்தப்பட்ட கச்சியப்பரின் கந்த புராணத்தை மீண்டும் படியெடுத்து உதவினான். முருகனுக்கு உகந்த கண்ணி, கடம்பம், காந்தள், குறிஞ்சி, செவ்வலரி, ஆகிய மலர்களைக் குடலையிலிட்டு பூஜைக்கும், ஆலயப் பூங்காவனத்திலிருந்து முல்லை, மல்லிகை, திரு ஆத்தி போன்றவற்றை மாலைக்காவும் அர்ச்சகரின் அழகு மகள் தெய்வானையிடம் வழங்கப்போக இருவரும் ஒருவர்மீது ஒருவர் காதல் வயப்பட்டனர்.
காதல் என்றால் பிரிவில்லாமலா? அவர்களிடத்தும் பிரிவு வந்தது. சோலைகளடர்ந்த மரங்கள் சூழ்ந்த உலகானித் தீர்த்தம், புன்னை மர நிழல்.. குளத்தில் கரையொட்டிப் பூத்திருந்த தாமரையைப் தெய்வானை எட்டிப் பறிக்க முயன்று, இயலாமற் போக … ஏமாற்றம். முகம் கொள்ளாக் கோபம்.
“தெய்வானை.. வாய் திறந்து பேசமாட்டாயா.. வருத்தமா?”
“வருத்தமில்லை. கோபம்! ஏழை அர்ச்சகர் மகளென்றுதானே இவ்வளவு நாட்களாக என்னை ஏமாற்றி வந்துள்ளீர்கள்? நீங்கள் பல்லவர் வழிவந்த பார்த்திபேந்திரன் என்றும், சோழர் படையின் உதவியோடு, தொண்டை மண்டலத்தை ராஷ்டிரகூடர்களிடம் இருந்து மீட்கப்போகிறேன், விடைகொடு என்றும் சொன்னால் கோபம் வராதா?”
“தெய்வானை, நீ அமைதி கொள்ளத்தான் வேண்டும். தவிரவும், இப்போதைக்கு நான் பார்த்திபேந்திரன் என்பதை உன் தந்தை அறியலாகாது. போர் முடிந்து, ஒரு திங்களில் மீண்டும் வந்து உன்னைக் கைத்தலம் பற்றுவேன். இது உறுதி!”
“சுவாமி, என்னை மன்னியுங்கள். ஏற்கனவே ஏழைச் சிற்பியின் மகளுக்குப் பல்லவ சக்கரவர்த்தியிடம் ஏற்பட்ட காதலனுபவம் உலகறிந்தது. அந்த அச்சமே உங்கள் வார்த்தையை நம்ப மறுக்கிறது.
“இல்லை தெய்வானை, என் வார்த்தைகளை நம்பு. கந்தன் மீது ஆணை!”- மெள்ல அவள் தலையை நிமிர்த்தி, உதிர்ந்த கண்ணீர்த் துளிகளைத் துடைத்தான் பார்த்திபேந்திரன்.
“பிரபு, ஏழேழு ஜென்மமென்றாலும் இந்த உயிர் உங்களுக்காகவே காத்திருக்கும். மறந்துவிடாதீர்கள்!” என்று நமஸ்கரித்தவளை ஆசீர்வதித்துப் புறப்பட்டவன், மீண்டும் காஞ்சி திரும்புவதற்குள் இரண்டு ஆண்டுகள் ஓடியிருந்தன.
தெய்வானையைப் பார்ப்பதற்கு ஓடோடிவந்தவன் தலையில் இடியென அந்தச் செய்தி இறங்கியது. போரில் பார்த்திபேந்திரன் வெற்றிபெறவேண்டும் என்பதற்காக நேர்ந்துகொண்ட தெய்வானை, கருமாறிப் பாய்ந்தாள் என்பதுதான் அந்தச் செய்தி. அதாவது, காமாட்சி அம்மன் கோபுரத்திலிருந்து உலகானித் தீர்த்தத்தில் விழுந்து உயிரை மாய்த்துக்கொண்டுவிட்டாள் அவள்.
கச்சியப்பரைக் காண மனம் நாணினான். தயக்கத்தோடு அந்தக் குடிலில் காலை வைத்தான். தெய்வானை ஆடி மகிழும் வீட்டு ஊஞ்சலும், ஓடி விளையாடும் நந்தவனமும் சோபை இழந்திருந்தன. கச்சியப்ப சிவாச்சாரியாரின் மெலிந்த தேகம் சுருண்டுக் கிடந்தது.
“ஐயா, என்னை மன்னிக்க வேண்டும்! இப்படியொரு அசம்பாவிதத்தை நான் எதிர்பார்க்கவில்லை..”
“பாவி! நானும் செத்து ஒழிந்தேனா இல்லையா என்று பார்க்க வந்தாயா? என் ஒரே மகளைப் பறிகொடுத்துவிட்டு, இந்த ஜீவன் பிழைத்திருப்பது என் பிரபு சுப்ரமணியருக்காக! என் கண் முன்னே நிற்காதே, போய் விடு!”
“சத்தியம் ஐயா! என்னை மன்னித்தேன் என்று ஒரு வார்த்தைச் சொல்லுங்கள்!”- ஊஞ்சலில் அமர்ந்திருந்த கச்சியப்பரின் கால்களில் விழுந்து கதறினான் பார்த்திபேந்திரன்.
இருபத்தோராம் நூற்றாண்டு சித்திரை மாதம்…
“சார், என்ன ஆச்சு.. ஏன் அழறீங்க?” – இந்திய ஆங்கிலத்தில் ஒரு பெண்ணின் குரல். கண்களைத் துடைத்துக்கொண்டு நிமிர்ந்தான் தனியல்.
“சார், இந்தக் காஞ்சி மனை’யைப் பற்றிய உங்கள் அபிப்ராயத்தை இந்தப் பார்வையாளர் புத்தகத்தில் எழுத முடியுமா?” அந்தப் பெண்ணே மீண்டும் கேட்டாள்.
“அற்புதமான வீடு… மறக்க முடியாத அனுபவம்!” என எழுதியவன், ‘பார்த்திபேந்திரன்’ என்று கையொப்பமிட்டான்.
“தென்னிந்திய முறைப்படியான மதிய உணவைப் பார்வையாளர்களுக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம்.. விருப்பமா?”
‘வேண்டாம்’ என மறுத்தவன், ‘காஞ்சிமனை’யை விட்டு வெளியே வரும்போது தயக்கத்துடன் கேட்டான்..
“நீங்கள்…?”
“என் பெயர் தெய்வானை. ‘காஞ்சிமனை’யின் நிர்வாகியாக இங்கே பணிபுரிகிறேன். எதற்குக் கேட்கிறீர்கள்?”
————————————–