பெண் இலக்கியம்

பெண் என்ற சொல் குறித்து அச்சொல் தரும் பிம்பம் குறித்து, அப்பிம்பத்தின் வளர்நிழல், தேய்நிழல் குறித்து எத்தகைய நோக்கினை, நோக்கிற்குரிய பொருளை இவ்வுலகும், அதனுள் அடங்கிய சமூகமும் கொண்டிருக்கிறது என்பதை எண்ணிப்பார்க்கிறபோது அச்சமூகத்தின் அங்கமாகிய நம்மீது – ஆணினத்தின் மீது எரிச்சலும் கோபமும் வருகிறது. இருமை வாத ஒழுங்கின்படி பருப்பொருள் உயிர் இருவேறெனக்கொள்வதில் சிக்கலில்லை ஆனால் ஆண்xபெண் என்கிற இருமையியத்தை தராசில் இட்டு, ஒன்றை எடைகூடியதாகவும் மற்றொன்றை எடைகுறைந்த தாகவும் காட்டுகிற இந்த ஆண்சமூகத்தின் கட்டளை கற்களில்தான் பிரச்சினையே. இறைநம்பிக்கை அடிப்படையில் உருவானது மனிதர் வாழ்க்கை.. நமது சமூகத்தின் மரபுகள் இருமைவாதத்தை சமயநெறிகளின் அடிப்படையில் புண்ணியம்x பாவம், சொர்க்கம்x நரகம், நன்மைxதீமை ஆகியவற்றின் வழிமுறையில் ‘ஆண்xபெண்’ ஐயும் நிறுத்தி பொருள் காண்பது தான் நமக்குள்ள சிக்கல்.
நித்தம் நித்தம் வீட்டிலன்றி சாலையில், பேருந்தில், அலுவலகங்களில், பொதுவெளிகளில் எங்கும் பெண்கள் என்கிறபோது பெண்களற்ற சமூகம் மூலவரற்ற கருவறைக்குச் சமம் என்கிற ஞானத்தில், நமது பகுத்தறிவு முரண்நகையாக தெளிவு பெற்றிருக்கிறபோது மனிதர் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கலை இலக்கிய படைப்புகள் பெண்களையும் கருத்தில்கொண்டு உருவாவது இயற்கை, இலக்கியத்தில் பெண்கள் இடம்பெறுவது ஒருவகையான சமூக நீதி. இந்தச் சமூக நீதி சரியாக வழங்கப்படுகிறதா, யார் வழங்குவது முறை என்பதுதான் நமக்கு முன்னுள்ள கேள்வி.
« ஆண்கள் சமூகம் மூன்று வகைகளாகப் பெண்களைப் பிரித்திருக்கிறது. இயற்கையில் பெண்கள் எப்படி இருக்கவேண்டுமென சமுதாயம் எதிர்பார்க்கிறதோ அவ்வாறு இருக்கிற சராசரி பெண்கள் முதல்வகை. தனக்காக என்றில்லாமல் பிறருக்கென வாழப்பழகிய அர்ப்பணிப்பு பெண்கள் இரண்டாம் வகை, புதிர்ப்பெண்கள் மூன்றாவது வகை. பெண்ணினத்தால் அனுகூலம் பெற்ற மனிதர்கள் ஏற்படுத்திய வகைப்பாடே இவை மூன்றும். » என்கிறார் பெண்ணினத்தின் விவிலியம் எனப்படும் ‘இரண்டாம் பாலினம்’ நூலின் ஆசிரியர் சிமொன் தெ பொவ்வார், முத்தாய்ப்பாக, « ஒவ்வொரு ஆணும் தனிப்பட்ட வகையில் இப்பிரிவுகளால் நன்மை அடைகிறான் » என்பதோடு, « இதுபோன்ற பிரிவுகளின் அடிப்படையில் பெண்களுக்கெதிராகச் சட்டங்களை இயற்றுவதும், நெறிமுறைகளை வகுப்பதும் தந்தைவழிச் சமூகத்திற்கு எளிது », என்கிறார்.
சமூகமும் பெண்களும்
உலகங்கும் நிறம் இனம் அடிப்படையில் ஒடுக்கப்படும் மக்களில் இந்த இரண்டிலும் சாராது சிறுமை படுத்தப்படுவதில் பெண்களும் அடக்கம் என்பதுதான் பெண்ணினத்தின் பிரதிநிதியாக தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு குரலெழுப்பிய சிமொன் தெ பொவ்வாரின் நூல் தெரிவிக்கிறது. பெண்விடுதலைக்கான போராட்டம் தொடங்கி ஐம்பது ஆண்டுகள் கழிந்துவிட்டன. ஓர் அலுவகத்தில் ஆணும் பெண்ணும் பதவியிலும், வாங்கும் ஊதியத்திலும், பெறும் சலுகைகளிலும் சமமென்றே சட்டம் கருதினாலும், அதை முறைப்படுத்தினாலும் இருவேறு உலகங்களை அவர்கள் அலுவலக வாழ்க்கை ஏற்படுத்தித் தருவதாக ஒரு பிரெஞ்சு இதழ் தெரிவிக்கிறது:
எதிர்ப்படும் உங்களுக்கு அலுவலகத்தில் வணக்கம் தெரிவிக்க மறந்தால்:
ஆண் எனில்: அவனுக்கு இன்று ஏதோ பிரச்சினைகள்.
பெண் எனில்: அவளுக்குத் திமிறு
நிறுவனத்தின் இயக்குனரோடு உணவு விடுதியில் சேர்ந்து சாப்பிடுகிறாள் என வைத்துக்கொள்ளுங்கள்
ஆணென்றால்: கூடிய சீக்கிரம் அவனுக்கு பதவி உயர்வு காத்திருக்கிறது
பெண்ணென்றால்: இயக்குனருக்கும் அவளுக்கும் ஏதோ கசமுசா
வேலையில் கறாராக இருப்பதாக வைத்துக்கொண்டால்
ஆணென்றால்: தனக்குள்ள அதிகாரத்தை பிரயோகித்தத் தெரிந்தவன்
பெண்ணென்றால்: என்ன இருந்தாலும் அந்தப்பொம்பிளைக்கு இத்தனை ஆர்பாட்டம் கூடாது
மாலையில் அலுவலகத்தில் கூடுதலாக சில மணி நேரம் இருக்கவேண்டி இருக்கிறது
ஆணென்றால்: அவனுக்கு வேலையிலே அவ்வளவு அக்கறை
பெண்ணென்றால்: என்னவோ நடக்குது கேமரா வைக்கணும்
கூடுதலாக ஊதியம் கேட்பது
ஆணென்றால்: அவனுக்கு வேறு எங்கோ நல்ல வேலை கிடைப்பதற்கு சாத்தியங்கள் இருக்கவேண்டும்.
பெண்ணென்றால்: இப்போது அவள் வாங்குகிற சம்பளமே அதிகம்
அலுவல் விஷயமாக வெளிநாடு செல்லவேண்டும்
ஆணென்றால்: மனைவி பிள்ளைகளை விட்டு இப்படி அடிக்கடி பிரயாணம் செய்வது சிரமம்தான்
பெண்ணெனில்: இப்படி அடிக்கடி ஊர்மேயறாளே புருஷன் கண்டுகொள்வதில்லையா?
அலுவலகங்களைத் தவிர வீட்டிலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறையாமலிருப்பதை மேற்கு நாடுகளில் காணமுடிகிறது. அதிலும் சமயம், சாதி, எண்ணற்ற உட்பிரிவுகள் என்கிற பாகுபாடுள்ள இந்தியச் சமூகத்தில். பண்பாட்டின் பேராலும், மரபின் பேராலும் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் மேற்குநாடுகளைக் காட்டிலும் அதிகம் என்றே சொல்லவேண்டும். கிறிஸ்துவ மதத்தைக் காட்டிலும், இங்கு இந்துமதத்தைச் சார்ந்த பெண்களுக்குச் சிக்கல்கள் அதிகம். இந்துமதத்தைச் சார்ந்த பெண்களைக்காட்டிலும் இஸ்லாமிய பெண்களுக்குக் கூடுதல் நெருக்கடிகள். பிராமண வகுப்பைச்சார்ந்த பெண்ணைக்காட்டிலும் தலித் பெண்ணிற்கு கல்வி வாய்ப்புகள் இங்கு குறைவு. குறிப்பாக வறுமையில் வாடும் குடும்பங்களில் வயிற்றுப் பசியைத் தீர்ப்பதில் ஆகட்டும், கல்விக்கூடங்களுக்கு அனுப்புவதிலாகட்டும் ‘பொட்டை புள்ளை’களுக்கு அநீதிதான். இந்நிலையில் உள்ள நமது சமூகத்தின் பெண்ணிலக்கியத்தை யாரிடம் தேடுவது எங்கே தேடுவது என்று கேள்வி.
இலக்கியத்தில் பெண்கள்
தமிழ் நிலத்தில் பெண்கள் சங்க காலம் தொட்டு கல்விகற்று ஆண்களுக்கு நிகராகத் திகழ்ந்துவந்துள்ளனர் என்பது உண்மைதான். ஆனாலும் அவர்களின் விழுக்காடுகள் குறைவு. மகளிரில் பெரும்பாலோர் ‘மனை உறை’ மகளிராக வாழ்ந்து போருக்கான ‘வீர மறவர்களை ஈன்று புறம் தருதல்’ அறம் எனப் போற்றியதாகத்தான் சங்க கால வாழ்க்கை நெறி தெரிவிக்கிறது. அக்கால இலக்கியங்களும் இவற்றையே எதிரொலிக்கின்றன. நவீன தமிழ் படைப்பாளுமைகளில் முதன்முதலாக பெண்ணினத்திற்கு குரல்கொடுத்தவர் பாரதி. ‘நத்தைப் புழுவைபோல ஆணும் பெண்ணும் கூடப்பிறக்கிறோம். இதில் உடன் பிறந்தான் ஆண்டான் ; உடன் பிறந்தவள் அடிமை, சுவாமி சுத்த பாமர ஜனங்கள்’, என்றதோடு ஆண்வர்க்கத்தைப் பார்த்து, ‘பெண் உயராவிட்டால் ஆண் ஏது ?’ எனக் கேட்டவர். அவரைத் தொடர்ந்து ஆண் எழுத்தாளர்கள் பலர் தங்கள் படைப்புகளில் பெண்களைப் புதிய கோணத்தில் படைத்திருப்பினும், ஒரு வகையில் அவை குற்ற உணர்வின் வெளிப்பாடே. தவிர பெண் எனில் ஏதோ அச்சம், நாணம், கற்பு, தியாகம் ; அழகு, மென்மையான உடல், இனிமையான குரல் என்று ஒரு சில பண்புகளுக்காகவே என்பதுபோல கட்டமைக்கும் போக்கும் ; சீதையாக, தமயந்தியாக, சாகுந்தலாவாக, ஆண்டாளாக, வாசுகியாக, கண்ணகியாக , மாதவியாக, கோப்பெரும் தேவியாக மொத்தத்தில் பெண்ணை உயர்த்துவதுபோல எழுத்தைப்படைத்ததும் அவளைக் காதலன் அல்லது கணவனின் நிழலாகச் சித்தரிப்பதற்கே. நவீன ஆண்படைப்பாளிகளையும் இந்த அடிப்படையிலேயே அணுக வேண்டியுள்ளது. « இலக்கியவாதிகள் பெண்களைக் காட்டும் சித்திரங்களனைத்தும் சொந்தச் சரக்கல்ல. ஏற்கனவே நமது பழங்கதைகளில் கட்டமைக்கப்பட்ட பெண்ணையே இவர்கள் மீளுருவாக்கம் செய்திருக்கிறார்கள், தவிர எழுத்தாளர்கள் காட்டுகிற பெண் வடிவம் பெண்களுடையதுமல்ல, அவர்களின் கற்பனைவடிவம் » என்ற சிமொன் தெ பொவ்வார் கூற்று சிந்தனைக்குரியது.
பெண்ணிலக்கியம்
‘பெண்ணியக் கவிதை’ என்று வகைப்படுத்துவதைவிட ‘பெண்களின் கவிதை’ என்றோ ‘பெண் கவிதை’ என்றோ வகைப்படுத்திக்கொள்வது நல்லதாக இருக்கும். என்கிறார், கவிஞர் மாலதி மைத்ரியின் ‘நீரின்றி அமையாது உலகு’ கவிதைத் தொகுப்பிற்கு முன்னுரை வழங்கிய கவிஞர் பிரம்மராஜன். அவர் வழிமுறையிலேயே பெண்ணிய இலக்கியத்தை, ‘பெண்களின் இலக்கியம்’ என்றோ, பெண் இலக்கியம் என்றோ வகைப்படுத்திக் கொள்வதுதான் நல்லதாக இருக்கும், காரணம் இவை பெண்களை முன்னிறுத்தி, பெண்ணுரிமைக்காக வாதிடும் பெண்படைப்பாளிகளின் இலக்கியம்.
பெண்களுக்காக குரல்கொடுத்த, குரல்கொடுக்கிற ஆண் இலக்கியவாதிகளின் நல்லெண்ணத்தில் குறை இல்லை. ஒர் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவருக்காக வழக்காடுவதும், தம் கட்சிக்கார ருக்கு இழைக்கப்படும் அநீதிக்கு நியாயம் கேட்பதும் சனநாயக நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மரபு. எனினும் பாதிக்கப்பட்டவரே தமது வலியை, சந்தித்த துயரங்களை, படும் வேதனைகளை, இழைக்கப்படும் அநீதிகளைத் தெள்ளத் தெளிவாக நீதிமன்றத்தில் வைக்க முடியுமானால் அவர்களின் குரலைத்தான் இச்சமூகம் செவிமடுக்கவேண்டும் அதுதான் நியாயம், முறையுங்கூட.
« நாவலுக்கு உலவும் பெண்கள் என் உலகத்தில் என்னோடு உலவும் பெண்கள். என் உலகத்தில் என்னோடு சகபயணிகளாக இருந்து கொண்டிருப்பவர்கள் . அவர்களுக்கென சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் பிம்பங்களுக்குப் பொருந்தாத யதார்த்தமானவர்கள். எல்லா மனித ஜீவன்களையும் போல தம் வாழ்வை , வாழவும் நேசிக்கவும் விரும்புபவர்கள், தங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் எல்லைக்குள்ளிருந்தபடியே தங்களுடைய சந்தோஷங்களை, கனவுகளை, ரகசியங்களை, துயரங்களைத் தேடிக் கொள்பவர்கள், பிறருடைய சவுகரியத்துக்காகவோ, அசவுகரியத்துக்காகவோ ஒரு வார்த்தையைக்கூட நான் எழுதவில்லை. மொத்த நாவலிலுமே இது இப்படித்தான் இருந்துகொண்டிருக்கிறது என்பதைச் சொல்லியிருக்கிறேன், அவ்வளவுதான். » (இரண்டாம் ஜாமங்களின் கதை முன்னுரையில் – நூலாசிரியர் சல்மா)
« திருமணத்தையும் சாதியையும் உடும்புப் பிடியாக பிடித்துக்கொண்டிருக்கிற இந்தச் சமுதாயத்தில் தன்னந்தனியாக வாழ முடிவெடுத்து வாழ்வதிலுள்ள சிக்கல்களையும், சுகதுக்கங்களையும் , இன்னல் இடையூறுகளையும், இன்பதுன்பங்களையும் முழுமையாக அனுபவித்ததன் வெளிப்பாடுதான் இந்த ‘மனுசி’ . திருமணத்தை ஒரு கையிலும் சாதியத்தை மறுகையிலும் வைத்துக்கொண்டு பெண்ணைச் சிதைத்து சின்னா பின்னமாக்கும் இந்தச் சமூக அமைப்புக்குள் இருந்துகொண்டு ஒரு போராட்ட வாழ்க்கையை வாழ்ந்து விடவேண்டும் என்ற கனவும், அதனை நனவாக்கிட எனக்குள் எழுந்த வேகத்தின், தாகத்தின் வீரிய விதைகளே இவ்வெழுத்துக்கள். » (மனுசி முன்னுரையில் -நூலாசிரியர் பாமா)
« பெண் இன்று மட்பாண்டமில்லை. யார் உடைத்தும் அவள் சிதறிப் போகமாட்டாள். அவள் இன்று கல்வி பெறுகிறாள். உயர் தேர்வுகளில் இடம்பெறுகிறாள். பணி செய்ய அலுவலகம் போகிறாள். சம்பாதிக்கிறாள். தன்னைக் கௌரவமாகப் பேணிக்கொள்கிறாள். சமூகத்தோடு இசைவாகத் தன்னைப் பொருத்திக்கொல்கிறாள் » ( நேசத்துணை – முன்னுரையில் நூலாசிரியர் திலகவதி)
ஆக இலக்கிய அலகு களுக்கு அப்பாற்பட்டது பெண்ணிலக்கியம். ஓர் இலக்கிய பிரதிக்குரிய அல்லது தேவையான பிரத்தியேகப் பண்புகளுடன் ஒடுக்கபட்ட பெண்ணினத்தின் குலாகவும் ஒலிப்பது இவற்றின் சிறப்பு. அது விடுதலைக்குரல், அடிமைபட்டுக் கிடக்கும் வர்க்கத்தின் சுதந்திரக் குரல். « உன்னிலும் நான் உயந்தவள் ! » என்கிற அகங்காரம் இல்லை. « உன்னிலும் நான் எந்த விதத்தில் தாழ்ந்தவள் ? » எனக் கேட்கும் குரல். மேடும்பள்ளமுமாக இருக்கிற மானுடச் சமூகத்தை சமப்படுத்த விழையும் குரல். இக்குரல்கள் அவரவர் பின்புலம், பெற்றகல்வி உற்ற அனுபவம் ஆகியவற்றிற்கேற்ப மென்மையாகவோ, வன்மையாகவோ ஒலித்தாலும் பெண்களுக்கென எழுதப்பட்ட விதியைத் திருத்த முற்பட்டவை, இதுநாள்வரை சகித்திருந்தோம், இனி சகிப்பதில்லை என ஒலிக்கும் குரல்கள்.
« அடிவயிற்றில் நெருப்பை வச்சிக்கிட்டு எத்தனை நாள் அலைய முடியும் ? » இதை பல பெண்களிடமிருந்து பல்வேறு தருணங்களில் நான் கேட்டிருக்கிறேன். இந்த வாக்கியம் நம் சமூகத்தின் பெண் இருப்பு சார்ந்த அச்சத்தை உணர்த்துவதாக இருந்தாலும் அது வேறெதையோ சொல்லாமல் சொல்லிச் செல்கிறது. » என்கிறார் மாலதி மைத்ரி
நவீன தமிழ் இலக்கிய பெண் படைப்பாளிகள் குறிப்பாக கவிஞர்கள் இன்றைய தேதியில் ஆண் படைப்பாளிகளைப்போலவே ஆளுக்கொரு கவிதைத் தொகுப்பை வைத்துக்கொண்டு பதிப்பக க் கதவுகளை தட்டுகின்ற போதிலும் எனக்கு வாசிக்க கிடைத்த நவீன தமிழ் கவிதைகள், நாவல்கள், சிறுகதைகள் அனைத்துமே ஒரு நல்ல படைப்புக்குரிய அடர்த்தியையும், ஆழத்தையும், நேர்த்தியையும் பெற்று, கூடுதலாக பெண் விடுதலைக்காக வாதிடுகின்றன.
அம்பை, பாமா, திலகவதி, வைகைச்செல்வி, இளம்பிறை, சதாரா மாலதி, கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், மாலதி மைத்ரி, சல்மா,அனார், குட்டி ரேவதி, சுகிர்தராணி, தமிழ்நதி அ.வெண்ணிலா, என நீளும் பட்டியலில் புதிய தலைமுறையினரும் இணைந்துகொண்டுள்ளனர் இவர்களின் படைப்புக்களின் வடிவத் தேர்வு எதுவாக இருப்பினும், பெண்களை முன்னிலைப்படுத்தி, பெண்களின் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பவையாக உள்ளன. காட்டழிப்பை கண்டிக்கும் நேரத்திலும் கவிஞர் வைகைச் செல்வி « கருவில் பெண்ணை அழிப்பார்க்குக் காட்டை அழித்தல் பெரிதாமோ ? » எனப் பெண்ணினத்தின் பிரச்சினையை மறப்பதில்லை, என்பதை உதாரணத்திற்குக் கூறவேண்டும்.
மணவாழ்க்கையும் பெண்ணிலக்கியமும்
இந்தியச் சமூகத்தைப் பொறுத்தவரை அல்லது நாமறிந்த தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை குடும்ப வாழ்க்கையிலும் பொதுவாழ்க்கையிலும் சரி, பெண்களின் கருத்துக்களைப் புறம்தள்ளுவது இன்றளவும் தொடர்கிறது. சுற்றம் சூழ பெண்பார்க்கச் செல்லும் ஓர் ஆண், தன் வாழ்க்கைத் தோழியின் மனதை அறிய முற்படுவதில்லை. ஒரு மாட்டைச் சந்தையில் பிடிப்பதுபோலத்தான் தரகருடன் வியாபாரம் பேசுகிறான். காதல் கூட தன்னையும் தன் குடும்பத்தையும் கரைசேர்க்க பெண்ணின் பின்புலம் உதவுமெனில் ஆணின் மனம் அக்கறை காட்டுகிறது. புகுந்த வீடு அவளுக்குத் தொழுவம். காரியம் யாவிலும் கைகொடுப்பவளாக அல்ல, நுகத்தடிக்குப் பொருந்துவள், குடும்ப பாரத்தை இழுப்பவள், சுமப்பவள். ஆனால் மாட்டிற்கு ஒரு விலையுண்டு, உரிய விலையை விற்பவனுக்கு அளித்தாலொழிய உடமை யாக்கிக்கொள்ளல் சாத்தியமில்லை. ஆனால் இவ்விலங்கிற்கு உரிய விலையை விற்பவர்தான் வாங்குபவனுக்குத் தரவேண்டும் .
இப்பெண்பார்க்கும் வலியை ஏ ராஜலட்சுமி என்ற கவிஞர் :
‘எப்பொழுதும் போல் ‘உடனே கிளம்பி வா’

‘எப்பொழுதும் போல் ‘உடனே கிளம்பி வா’
அப்பாவின் அவசரகடிதம் !
என்றோ ஒரு நாள் என்று நிகழ்ந்தது
இப்பொழுது அடிக்கடி அவஸ்தையாய்…
ஜாதகப் பொருத்தம் வருமானம்
குடும்ப நிலை வீட்டுச் சூழல்
ஒவ்வொன்றிலும் கழன்றுவிடும்
ஏதோ ஒன்று
சரியில்லை என்று. (எனக்கான காற்று)

வாசல் – கனிமொழி
அப்பா சொன்னாரென
பள்ளிக்குச் சென்றேன்
தலைசீவினேன், சில
நண்பர்களைத் தவிர்த்தேன்,
சட்டைபோட்டுக்கொண்டேன்,
பல்துலக்கினேன், வழிபட்டேன்,
கல்யாணம் கட்டிக்கொண்டேன்,
காத்திருக்கிறேன்
என்முறை வருமென்று. (கருவறை வாசனை )

என்ன விலை காதலே -வைகைச் செல்வி
‘ ………………………..
………………………………………….
கல்யாணம் ஆகிவிட்டால்
கல்லாகி விடுவேனோ ?
கயவர்கள் உலகத்தில் சுய நலமே வாழ்க்கையெனில் – எனக்கு
பந்தக்கால் தேவையில்லை
சொந்தக்கால் போதுமடா. (அம்மி)

புதின இலக்கியத்தித்திலும் திருமணம் குறித்து படைப்பாளிகள் சந்தர்ப்பம் வாய்க்கிறபோதெல்லாம் தங்கள் கொந்தளிப்பையும் கோபத்தையும் காட்டவே செய்கிறார்கள்.
‘நம்ம கையில ஒழைப்பு இருக்கு. எவந்தயவும் நமக்குத் தேவையில்லை. ஆம்பள இல்லாம நம்மளால வாழமுடியாதா என்ன ?’ (மனுசி -பாமா, ப.117)
‘எனது உடலுக்குச் சொந்தக்காரி நான். அதைக் கொடுப்பதையும் கொடுக்காமலிருப்பதையும் தீர்மானிப்பதும் நானாகத்தான் இருக்கவேண்டும். இந்தச் சுதந்திரத்தை இழக்க எனக்கு ஒரு போதும் சம்மதமில்லை.’ (மனுசி-பாமா. ப.208)
திருமணத்தை மறுத்து குரலெழுப்பும் பெண் எழுத்தாளர்கள் ஒரு பக்கம் எனில் மணமான அன்றே சல்மாவின், இரண்டாம் ஜாமங்களின் கதையில் வரும் பிர்தவ்ஸ் தன் புதுக்கணவன் யூசுபின் தோற்றத்தைப் பார்த்த கணத்தில், ‘ நான் உன்னோடு வாழப்போவதில்லை. என்னைத் தொடவேண்டாம் ‘ (பக்கம் 35, இ.ஜா.கதை) என்கிறாள். கதையில் அவள் முடிவைக்கேட்டு நாவலாசிரியர் ஊரே அதிர்ச்சியில் உறைந்துபோய் இருந்ததாக எழுதுகிறார். பிர்தவ்ஸ் என்ற பெண்ணின் வார்த்தைகளைக் கேட்டு நூலாசிரியரின் துணிச்சலான இவ்வரிகளை வாசிக்கிறபோது நாமும் உறைந்து போகிறோம். காரணம் நூலாசிரியரைப் போலவே அப்பெண்ண்ணும் ‘ வயதுக்கு வந்த பெண்கள் வீட்டு வசல்படியைத் தாண்டுவதே இல்லை ; வெளியிலிருந்து வீட்டுக்குள் எந்த அன்னிய ஆண் வந்தாலும் அவர் முன் தலைகாட்டக்கூடாது என்கிற ஒழுங்கைக் கடைபிடிக்கும் குடும்பத்தைச் சார்ந்தவள்.
சமயமும் பெண் இலக்கியமும்
ஆண்களைக் காட்டிலும் சமய நம்பிக்கையில் ஆழ்ந்த ஈடுபாடுள்ளவர்கள் பெண்கள். ஆனால் உலகில் மதங்களுக்குப் பெண்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை, மதங்கள் பெண்களுக்குக் கொடுப்பதில்லை என்பதே உண்மை.
‘பெண்ணாவது தெய்வமாவது ஆதி ! என் எண்ணப்படி எது நடக்கிறது ? பாத்திமாவுடன் பேசியபடி பாலைவனத்தைச் சுற்றி வர ஆசை. மேரி கையிலிருந்து குழந்தையை வாங்கி என் இடுப்பில் வைத்துக்கொண்டு பெத்லஹெம் மற்றும் சுற்று புற பிரதேசங்களைப் பார்த்துவர ஆசை. இப்படி இவன் காலடியில் உட்கார்ந்திருப்பதில் என்ன சுகம் ? அக்கடா என்று படுக்க ஒரு பாம்பு படுக்கை உண்டா எனக்கு ?’ (காட்டில் ஒரு மான் ப. 38) என ஆதிசேஷனைப் பார்த்து லட்சுமி கேட்பதாக அம்பை எழுதுகிறார்.
‘ ஹனீபா தன் கணீர்குரலில் , « இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை » என்று பாடிக்கோண்டிருந்தார். பிர்தவ்ஸுக்குச் சிரிப்பு வந்த து. « நானும் தான் என்னவோ கேட்டேன். எதைக்கொடுத்தானாம் ?’ (ப.188 ) என்று இரண்டாம் ஜாமங்களின் கதையில் தன் கதைமாந்தர்களில் ஒருவரைவைத்து வினவுகிறார் சல்மா.
பண்பாடும் பெண் இலக்கியமும்.
பெண்களுக்கு எதிராக கட்டமைக்கப்பட்டுள்ள மரபையும் பண்பாடுகளையுங்கூட நவீன பெண் இலக்கியம் சகித்துக்கொள்ளாது என்பதைச் சொல்லவும் உதாரணங்கள் இருக்கின்றன.
விளக்குகள் என்ற கவிதையில் வைகறைச்செல்வி :

‘……….
குத்துவிளக்கென்று
பெண்ணைச் சொல்வார்
ஆங்கோர் மூலையிலே
மோனத்தவம் செய்வதற்கும்
எடுப்பார் கையிலெல்லாம்
அடங்கி இருப்பதற்கும் ( அம்மி -ப. 72) என்று எழுதுகிறபோதும்,

‘குறள் போட்டி, தேவாரப் போட்டி எல்லாம் நாங்க வெக்கிறோம். பெண்கள் பரிசு வாங்கினா கன்னா பின்னாட்டு பரிசு தரமாட்டோம். குத்து விளக்கு தருவோம்…..ஒண்ணுமில்லைம்மா நம்ம பண்பாடு முழுக்க முழுக்க பெண்கள் கையில் இருக்கும்மா’ (ப. 124, காட்டில் ஒரு மான்) என்று ஓர்ஆண் வர்க்கத்தின் பிரதிநிதியாக புத்தககக் கடைகாரர் ஒருவர் வாய்மொழிக்கொண்டு அம்பை வைகைச் செல்வியின் மேலே கூறப்பட்டக் கவிதையை உறுதிபடுத்துகிறபோது, இப்படி ஒரு பிரிவினரை ஒடுக்குவதற்கென வகுத்துக்கொண்ட நமது பண்பாடுகளின் மீது பகுத்தறிவுகொண்ட மனிதர் எவரும் கோபம் கொள்வது இயற்கை.
இறுதியாக பொதுவெளியில் பெண்களின் நிலமையென்ன ? என்பதைத் தெரிவிக்க இரு கவிதைகள்
உயிரினும் இந்தப் பெண்மை இனிதோ ? – வைகைச்செல்வி
‘என் தாயே !
நீ மாதவம் செய்திருக்கத் தேவையில்லை
அங்கே மா மரத்தின் கீழே
என் வயதுப்பெண்கள்
நட்சந்திரங்களுடன் பேசுகையில்
இங்கே நானோ,
சிம்னி வெளிச்சத்தில்
அரிசியிலே கற்களைப் பொறுக்குகிறேன்.
…………………
நேற்று ஒருவன் பாரதியைக் காதலித்தான்
இன்று நான் கதலிக்கிறேன்
அவனுக்குப் பெயர் பாரதிதாசன்.
தாசனுக்குப் பெண்பால் எனில்
தமிழே என்பால் கல்லெறியும்’ (அம்மி – ப. 23)

வீடுகளால் ஆன இனம் – மாலதி மைத்ரி

ஊரில் அனைத்து வீடுகளும்
நடப்பட்ட பெண்களென நிற்கின்றன
சாளரங்கள் கண்களாகவும் வாசல் யோனியாகவும்
யாரோ ஒரு ஆணிற்காக ஆயுள் முழுவதும் காத்துக்கிடக்கின்றன
வயதுக்கேற்றபடி த் தம் உறவுகளுக்காக
கொலைகாரன் திருடன்
குடிகாரன் துரோகி மோசடிக்காரன்
ஊழல் செய்பவன் ஏமாற்றுபவன் விபச்சாரகன்
கொடுங்கோலன் காமவெறியன்
சாதிவெறியன் மதவெறியன் இனவெறியன்
இவர்கள் யாரையும் வீடு கைவிட்டுவிடுவதில்லை
அவரவருக்கான வீடு எப்போதும் இருக்கிறது
உடம்பு தொட்டிலாகவும் மார்பாகவும் இருந்து
உயிரும் உணவும் அளித்து
அரவணைத்துப் பாதுகாக்கப்படும் ஆண் பந்தங்கள்

ஆண்கள் வீட்டைப் புணர்வதன்மூலம்
பூமியை வளர்க்கிறார்கள்
பெண்களையல்ல
காலத்தை ஆளும் பெண்கள் வீடாவதில்லை.(நீரின்றி அமையாது உலகு ப. 35)
ஆணோ பெண்ணோ படைப்புவேறு தான் வேறுஅல்ல என நினைப்பவர் எவரோ, தான் படைக்க நினைப்பதற்கு உதாரணமாக முடிந்தமட்டும் தன்னையும் சொந்த அனுபவத்தையும் பொதுப்படுத்தும் எழுத்தாற்றல் எவருக்குச் சாத்தியமோ அவரே என்வரையில் ஒரு நல்ல படைப்பாளி. கலையும் இலக்கியமும் அழகியலுக்கு அப்பாற்பட்டு, புலன்களைக் கடந்து இதயத்திற்குச் சிலிர்ப்பூட்ட வேண்டும், அறிவையும் மனதையும் அலைக்கழிக்கவேண்டும்.
இரண்டாம் ஜாமங்களின் : சொஹ்ரா, றைமா, அமீனா, சவூரா, நூரம்மா, மும்தாஜ், பிர்தவ்ஸ், வயிற்றுப்பிழைப்புக்காக இவர்களுடன் பிணைத்துக்கொள்ளும் மாரியாயி
பெண் என்ற இனம் பொதுவாக இரண்டாம் தளத்தில் நிறுத்தப்படுவது ஒரு பக்கமெனில் அவள் தலித்தாக பிறந்ததால் இச்சமூகத்தின் கருநாக்குகளுக்குக் கூடுதலாக பதில் சொல்லவேண்டியிருக்கிறது, நெருக்கடிகளுக்குப் பலியாக வேண்டியிருக்கிறது என்பதை தெரிவிக்கும் பாமாவின் மனுசி ‘ராசாத்தி’.
அம்பையின் சீதாயணத்திற்குக் கனவுகாணும் அடவி செந்திரு, அகம்பாவ ஷண்முகத்தை மேடையில் வீழ்த்தும் செண்பகம்.
பெண்களின் துயரங்கள் அனைத்தும் குடும்பம், திருமணம் ஆண்-பெண் உறவு ஆகிய வேர்களின் மூலாதாரத்தில் கிளைவிடுகிறதென்று உறுதிராக நம்பும் திலகவதியின் நேசத்துணை பாகீரதி..
இவர்களை வாய் பேசவைத்த படைப்பாளிகள், கவிதையுடாக பெண் இருத்தலை வலியுறுத்தும் கவிஞர்கள், இவர்கள் அனைவரின் குரலும், மாலதி மைத்ரி தமது ‘புலி’ கவிதையில் சொல்வதுபோல எல்லாரையும் தாண்டி எல்லாவற்றையும் தாண்டி இன்று ஆண்களின் தலைமாட்டருகே காத்திருக்கிறது. விழித்தால் தப்பித்தோம். உறங்குவதுபோல பாவனை செய்தாலோ, பெண்புலிதானே என அலட்சியம் செய்தாலோ ஆபத்து ஆண் வர்க்கத்திற்கு இல்லை, சமூகத்திற்கு.
——————————————————————————–