காஃப்காவின் நாய்க்குட்டி

Kafka Naykutti Wrapper 3-1

 

1. காஃப்காவின் நாய்க்குட்டி : வலியை உற்பத்தி பண்ணும் எழுத்துமுறை

                                                                                  panchu       . பஞ்சாங்கம்

மொழி அறிந்த மனிதராகப்பட்வர் எழுத்தாளராக மாறும் புள்ளி எது என்று பார்த்தால், பிறரைப் பார்ப்பது போலத் தன்னைப் பார்க்கத் தொடங்கும் போதுதான் என்று சொல்லத் தோன்றுகிறது; கூடவே, தன் கண் கொண்டு பார்க்காமல் பிறர் கண் கொண்டும் பார்க்கப் பழகும்போதுதான்  எனப்படுகிறது. பாரீஸ் கலாச்சாரத்தோடு வாழ்வதற்கு விதிக்கப்பட்ட நாகரத்தினம் கிருஷ்ணாவிற்கு உலக அளவில் பன்முகப்பட்ட கலாச்சாரத்தைச் சார்ந்த பல்வேறு மனிதர்களாகத் தன்னை மாற்றிப் பார்த்துக் கொள்வதற்கான வாய்ப்பு கூடி வந்த சூழலில், அவரது எழுத்துமொழி தமிழாக இருந்தாலும், அவரது புனைவெழுத்து உலகம் தழுவியாக நீட்சி பெறுவதை அவரது நாவல்களை வாசிக்கிற கூர்மையான வாசகர் உணர்ந்து கொள்ளலாம். ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ என்ற இந்தப் புனைவும் செக் நாட்டைச் சேர்ந்த பிராஹா, பிரஞ்சு நாட்டைச் சார்ந்த பாரீஸ், கொல்மார், ஸ்ட்ராஸ்பூர், ஜெர்மனியைச் சார்ந்த பிராங்பர்ட், ஈழத்தைச் சேர்ந்த முல்லைத்தீவு, இந்தியாவின் வடக்குப் பகுதியான புதுடில்லி, ரிஷிகேஷ், தென்பகுதியான தமிழ்நாடு, புதுச்சேரி, கன்னியாகுமரியென உலகம் தழுவிய ஒரு ‘களத்தில்’ கட்டமைக்கப்படுகிறது. அதுபோலவே பருவகாலம் மற்றும் பொழுதுகள், என்ற முதற்பொருளும், தெய்வம், உணவு, மரம் விலங்கு, பறவை, ஆறு முதலிய கருபொருட்கள் பலவும் உலகம் சார்ந்ததாக அமைந்துள்ளன. எடுத்துரைப்பின் இந்தப் புதிய பின்புலங்கள் அது பேசும் புதிய புதிய வடிவங்களுக்குக் கூடுதலான அழகைக் கொண்டு வந்து சேர்க்கின்றன. எப்பொழுதுமே எழுத்தின் அழகியல் அது பேசும் பொருளில் மட்டும் இல்லை; புதிய களங்களைக் கட்டமைக்கும் வடிவ நேர்த்தியில்தான் குடிகொண்டுள்ளது.

*

இவ்வாறு உலகம் தழுவிய பின்புலத்தில் அந்த நாவலாசிரியர், என்னதான் அப்படி வாசகர்களுடன் உரையாடுகிறார் என்று பார்த்தால் மனிதவாழ்வின் அபத்தங்கள், ஆண்-பெண் உறவின் ஊடே வினைபுரியும் அசிங்கங்கள், மரணம் குறித்த மனித உயிர்களின் விளக்கங்கள், ஈழப் போராட்டத்தால் புலம் பெயர்ந்து பிரான்சு தேசத்தில் வாழ நேர்ந்தாலும் போட்டி, பொறாமை, காமக்குரோதம், சூழ்ச்சி என ஒன்றிலும் ஒரு சிறிதும் குறையாமல் ஒரு சிறிதும் மாறாமல் வழக்கம்போல் தரமற்ற வாழ்க்கையையே எவ்வாறு நடத்த முடிகிறது என்ற வியப்பில் வியர்ந்து எழும் எழுத்துக்கள், பிரான்சில் வாழ ஆசைப்பட்டு, ஏதாவதொரு பிரான்சு நாட்டுக் குடிமளைத் திருமணம் முடித்துக் கொண்டு, அவளின் ‘நாய்க்குட்டியாக’ தன் ஒட்டுமொத்த வாழ்வையும் வாழ்ந்து தீர்க்கும் புதுச்சேரி வாழ் தமிழர்களின் துக்கம், ஈழத்திலிருந்து பிரான்சில் முறையற்றுக் குடியேறியதால் வழக்கில் சிக்கிக் கொண்ட ஈழத்தமிழர்கள், நீதிமன்றத்தில் கூறும் வாக்குமூலங்களைப் பிரஞ்சு மொழியில் மொழிபெயர்த்துத் தரும் அனுபவங்களைச் சித்தரிப்பதன் மூலம் நீதிமன்ற நடவடிக்கைகளைக் காட்சிப்படுத்துதல், ‘அங்கே இங்கே’ என்று விவரிக்கும் தன்மை, என நாவல் பன்முகமாக விரிகிறது; வாசகர்களையும் தன்னோடு உரையாடியே தீருமாறு தனது எடுத்துரைப்பு மொழி மூலம் சாதித்துக் கொள்கிறது.

*

புலம்பெயர்ந்து வாழ நேர்ந்த ஒருவர்க்குள் தன் மண்சார்ந்த நினைவுகளும் விசாரணைகளும் கூடிவந்து வினைபுரிவதைத் தவிர்க்கமுடியாது. நாவலாசிரியர் காஃப்காவின் நினைவுகளோடு உலகம் தழுவிய ஒரு சூழலில் நாவலை நடத்திக் கொண்டு போனாலும், தன் மண்சார்ந்த தமிழர்களின் வாழ்வு இருக்கும் நிலைகுறித்து உள்ளம் நோகாமல் இருக்க முடியவில்லை. உலகப் பரப்பு முழுவதும் தமிழர்களாக அறியப்பட்டவர்கள் இன்று படர்ந்து வாழ்கிறார்கள். ஆனால் சீக்கியர்கள் போல, வங்காளிகள் போல, குஜராத்திகள் போலச் சென்ற இடங்களில் பெருமைப்படும்படியான சுயமரியாதை வாழ்வு வாழ்கிறார்களா? படைப்பாளி நேரில் பார்க்கும் வாய்ப்பு பெற்றவர் என்பதால் புண்பட்ட மனத்தை தன் எழுத்தின் ஊடே பல இடங்களில் பதிவு செய்து கொண்டே போகிறார்:

கிரகங்களிடம் தங்கள் தலை எழுத்தை ஒப்படைத்திருக்கிற தமிழர்கள் (223)

தமிழ் படிச்சவரு புண்ணியக் கோடி. அவர் குதிரைபோல் கனைத்தார்; வேறொன்றுமில்லையாம்; அவர் சிரித்த்து அப்படியாம். காபி அடித்து பேரு வாங்கும் கூட்டம் (225)

ஒரு விஷயத்தை நிறைய வார்த்தைகளிட்டுப் பேசுகிறார்கள் (248)

தமிழர் பேச்சில் போலியும் பகட்டும் அதிகம் (142)

உங்களைப் புண்படுத்திறத்துக்காக சொல்லேல்லை, பல நூற்றாண்டகளாக படையெடுப்புகளால் தமிழ்நாடு கலப்பட இனமா ஆயிட்டுது, உங்களோட கோழைத் தனத்திற்கும் சுயநலத்திற்கும் அதுதான் காரணம்…. உங்களைப் போல நெஞ்சுரமில்லாத ஆட்களைக் கண்டால் எதையோ மிதித்ததுபோல இருக்குது (298)

இவ்வாறு இந்த நாவலில், புலம் பெயர்ந்து வாழும் ஒருவரின் பார்வையில் தமிழ் வாழ்வின் தரமற்ற தன்மை பளிச்செனப் புலப்படுத்துகிறது. இந்தப் பார்வையின் நீட்சியாக, ‘அங்கே, இங்கே’ என்று ஒப்பிட்டுப் பார்க்கும் எழுத்துமுறையும் நாவலில் இடம் பெறுவதைப் பார்க்க முடிகிறது. புலம்பெயர்ந்து வாழும் மனத்தின் ஒரு வெளிப்பாடு இது. ஒரே ஒரு சான்று:-

ஒரு மரணத்தால் ஏற்படும் துக்கமோ மகிழ்ச்சியோ  பிறருக்கேயன்றி, அம்மரணம் நிகழந்த உடலுக்கில்லை என்கிறபோது எதற்காக அனுபவித்திராத மரணத்தை நினைத்து ஒருவர் கவலையுறவோ அஞ்சவோ வேண்டும்? தெரிதா முதல் எபிகூரஸ் வரை சொல்வதும் இதுவே. மரணத்தினால் ஓர் உயிரின் இருப்பு முடிவுக்கு வருகிறது என்பதைத் தவிர வேறு சொல்ல என்ன இருக்கிறது….. கிழக்கில் வேறு சிந்தனை இருக்கிறது. இறைவன் நம்மைப் படைத்தது, எழுத்த தேகம் இறவா நிலையைப் பெறுவதற்காக, மீண்டும் பிறவாத பேரின்ப நிலையை அடைவதற்காக…..(252-253)

*

புலம்பெயர் வாழ்வு தரும் வலிகளையும் சலுகைகளையும் சிக்கெனப் பிடித்துக் கச்சிதமாகப் பொருத்திக்கொள்ளும் படைப்பளி, எழுத்தின் நுட்பம் அறிந்தவராதலால் பலவிதமான சோதனைகளையும் நாவலுக்குள் செய்து பார்க்கிறார். அவற்றில் தலையாயது ஒரு கணம் தோன்றும் மாயத் தோற்றங்களை நூலேணி போலப் பிடித்துக் கொண்டு மேலேறும் எழுத்துமுறை மிகச் சிறப்பாகக் கூடி வந்துள்ளது. விவேக சிந்தாமணியில் ஒரு காட்சி: பொழில் விளையாட்டிற்காகக் காட்டிற்குள் செல்லும் தலைவி, நாவல் மரங்கண்டு காலிழுக்க அடியில் போய் நிற்கிறாள்; ஒரு பழம் உருண்டு திரண்டு கர்ரேரென்று கிடக்கிறது; கையில் எடுக்கிறாள்; ஆனால் அது தேனுண்டு மயங்கிக் கிடக்கும் வண்டு. தலைவியிடம் ஒரு தணம் தோன்றிய அந்த மாயத் தோற்றத்தைப் படித்துக் கொண்டு கவிஞர் மேலேறுகிறார்; அந்த வண்டு தலைவியின் உள்ளங்கையைத் தாமரைப்பூவின் இதழ் என்று அறிவது போலவும், விழித்துப் பார்த்த்தால் அவள் முகம் முழுமதி போன்று தெரிவதால், தாமரைப்பூ உடனே கூம்பி விடுமே, நாம் பூவுக்குள் மாட்டிக் கொள்வமே என்று பயந்து அவரசம் அவசரமாக ‘றெக்கையை’ விரித்து விர்ரென்று பறந்து போனதாம்; அதைப் பார்த்த தலைவி மீண்டும் ஒரு கணம் மாயத் தோற்றதிற்கு உள்ளாகிறாள்; ‘பறந்த்து வண்டோ பழமோ’ என்று சொல்லும் போது கவித்துவத்தின் அழகியலுக்குள் நாமும் வண்டாய் மயங்கி விடுகிறோம்.

இந்தப் படைப்பு நுட்பத்தை நாவலாசிரியர், பிராஹாவில் சுற்றுலாப் பயணிகளோடு பயணியாக, ‘இளம் மஞ்சள் வெயிலில்’ சுற்றிவரும்போது அனைவரும் ஒரு கணம், ஓரிடம் நிற்காமல் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டே யிருக்கும் நாய்களாகத் தோற்றம் அளிக்கிறார்கள்;

அந்தக் கணத்தைப் பயன்படுத்திக் கொண்டு நூலேணியில் ஏறுகிறார். மனிதர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் எளிமையாக அதிகாரம் செலுத்துவதற்கான ஒரு முறையில் மற்றவர்கள் தங்களிடம் ‘நாயாக’ நடந்து கொள்ள வேண்டுமென நனவிலி மனத்தில் எதிர்பார்க்கிறார்கள் என்ற ஒரு பாவனையில் எழுத்தை அற்புதமாக நடத்திச் செல்லுகிறார்.

‘மனிதத் துணையைக் காட்டிலும் நாயின்’ துணை நம்பக் கூடியதுதான். நாயினால் பெண்களுக்கு அநாவசியப் பிரச்சனைகளில்லை. இன்றைக்கு என்ன சமைப்பது போன்ற கேள்விகளுக்கு அவசியமில்லை. நான்குவிதம் சமைக்க வேண்டுமென்ற கட்டாயமுமில்லை. பெண்கள் சாப்பிட்டு முடித்து, மிச்சம் இருப்பதை வைக்கலாம். வரதட்சிணை பிரச்சைனைகளில்லை. பெற்றோரிடத்தில் அதை வாங்கிவா! இதை வாங்கிவா! என்கிற வம்புகள் இருக்காது. சாதுவாக ஒரு மூலையில் படுத்துக் கிடக்கும். கொஞ்சம் முரண்டு பிடித்தால் சங்கிலியால் கட்டிப் போடலாம். இந்த வசதிகள் ஓர் மனிதத்  துணையிடம் கிடைக்குமா சொல்லு! (282)

இப்படி துணை, நட்பு, உறவு, அன்பு என்ற பதாகையின்கீழ் புதைந்துகிடக்கும் அரிகார வெட்கையின் அம்மை போட்ட முகத்தை, போலான முறையில் நாவலாசிரியர் அழகான புனைவெழுத்தாக்கி உள்ளார். மேலும் இந்த மாயத் தோற்றத்தைப் பயன்படுத்தி “விலங்குகள் வேற, மனிதர்கள் வேற இல்லை” என்றும் உரையாடுகிறார்.

‘என்னை பேசற நீ? உன்னுடைய மொழியைத் தெரியாத என்னை நீ விலங்கென்று சொல்வாயா? அல்லது என் மொழி தெரியாததால் உன்னை விலங்கென்று தீருபாபளிக்க முடியுமா? “மனிதர்களுக்கு நம்முடைய மொழியைப் பேசவோ புரிந்து கொள்ளவோ போதாது. அவர்கள் அனைவரும் விலங்குகள்” என விலங்குகள் சொல்லித் திரிவது உங்கள் காதில் விழுந்திருக்குமா? அவைகளுக்கு வேறு மொழிகள் இருக்கின்றன. வேறு வகையான உரையாடல்கள் இருக்கின்றன’ (292)

என்று எழுத்து வேகமான நகரும்போது வாசிக்கின்ற வாசகர் உட்பட எல்லோரையும் காஃப்காவின் ‘நாய்க்குட்டிதான்’ என்ற தீச்சுட்டு, ஒரு கணம் மரத்துப் போய்க்கிடக்கும் நாம் உயிர்ப்புறுகிறோம்.

எலும்பின் மஜ்ஜைக்காக ஒன்றையொன்று கடித்துக் குதறிக்கொள்ளும் காப்ஃகாவின் நாய்கள்தாம் நாமும் என்ற பார்வை நாவல் முழுவதும் உள்ளோடிக் கிடந்தாலும், வெளிப்படையாக அது புலப்படுவது ஈழப் போராளியாய்ச் செக்குச் சுமந்து வேறு வழியின்றி பாரீஸில் இருக்கும் தமக்கையின் கணவனாகிய மத்யூஸிடம் வந்து மாட்டிக் கொள்ளும் போராளி ‘நித்திலா’ பற்றிய பக்கங்களில்தான். தனது மணைவி கமலாவின் தங்கையாகிய நித்திலாவை அடைவதற்காக மத்யூஸ் போடுகிற திட்டங்களும் நடத்துகிற கபட நாடகங்களும் நிகழ்த்துகிற கொடுமைகளும் எலும்பின் மஜ்ஜைக்காக நாயைவிடக் கேவலமாக நடந்து கொள்ளும் மனிதர்களின் பேரவலத்தைப் படம் பிடிப்பவைகளாக அமைந்துள்ளன. இவ்வாறு எல்லாவிதமான கயமைத்தனத்தையும் பயன்படுத்தி அடைந்த மஜ்ஜை, அடைந்த அந்தக் கணத்திலேயே அது விஷமாகிவிடும் யதார்த்தத்தை நாவல் வலுவாக முன்வைக்கிறது என்பதில்தான் இந்த நாவலின் பலமே இருக்கிறது. ஈழப் போராட்டமானாலும், நீதிமன்ற நடவடிக்கைகளானலும், ஒருத்தரை ஒருத்தர் நாயாய் நடத்த முயலும் ஆண்-பெண் உறவானாலும், கன்னியாகுமரி முதல் பிராஹா-வின் வெல்ட்டாவா நதிவரை அலைந்து திரியும் சாமியாரானாலும் சரி, கவர்ச்சி காட்டி அங்கும் இங்கும் அலைபாய விட்ட அனைத்தும், கைப்பற்றிய அந்தக் கணத்தில் மனிதர்களுக்கு எதிரானவைகளாக அப்படியே தலைகீழாக மாறி விடுகிற நெஞ்சைச் சுடும் மெய்மையினால் பிறக்கும் வியப்பின் வெளிப்படுதான் ‘காஃபாகாவின் நாயக்குட்டி’ என்ற இந்த நாவல்.

ஒரு நல்ல எழுத்து வாசகருக்குள் புதைந்து கிடப்பதை அவருக்கு எடுத்துக்காட்டுவதன் மூலம் ‘வலியை’ உறபத்தி பண்ணிவிட முயற்சிப்பதுதான். இந்த நாவல் அதைச் செய்கிறது.


2.பெருவெளிழுத்து:  

குற்றநீதிபற்றிய விசாரணைகள் : காப்காவின் நாய்க்குட்டி

Rama-012– அ.ராமசாமி

 

நாவல்கலையினூடாக  வகைபிரித்தல்

காலம், வெளி, பாத்திரங்கள் என்ற மூன்றையும் தனது விருப்பம் போல் உருவாக்கி விரியும் நாவல் இலக்கியப்பரப்பிற்கு எல்லைகள் எதுவும் இல்லை. அதே நேரத்தில் அது யாருடைய வாழ்க்கை வரலாற்றையும் விரிவாகச் சொல்லும் நோக்கம் கொண்ட இலக்கியவகையும் இல்லை. இது ஒன்றைத்தவிர நாவலென்னும் இலக்கியக்கலைக்கு வரையறை எதையும் சொல்லிவிடமுடியும் எனத் தோன்றவில்லை.

எழுதப்பட்ட ஒரு நாவலின் நிலவியல் பின்னணிகளையும் மொழிக்கூறுகளையும் அறியும்போது வட்டார நாவல் என வகை பிரிக்கிறோம். அதேபோல் காலப் பின்னணியைக் கணிக்கும்போது வரலாற்று நாவலாக மாறும் வாய்ப்பு உண்டு. தமிழில் எழுதப்பட்டு வாசிக்கப்பட்ட வரலாற்று நாவல்கள் பெரும்பாலும் வரலாற்றாசிரியர்களால் அறியப்பட்டு, உறுதிசெய்யப்பட்ட காலத்தைப் பின்னணியாகக் கொண்டவை, அறியப்பட்டு உறுதிசெய்யப்பட்ட நகரங்களில் நடந்ததாகவே அவற்றின் கதைகளும் சொல்லப்படுகின்றன. அப்படிச் சொல்லப்பட்ட கதைகளில் அரசர்களின் பெயர்களும் கூட வரலாற்றுத் தரவுகளால் உறுதிசெய்யப்பட்டனவாக இருக்கின்றன. வரலாற்று நாவலாசிரியர்கள் முன்வைத்த வரலாற்றுப் பாத்திரங்களையே தலைப்பாக்கிச் சொல்வதை எளிய வழிமுறையாகப் பலரும் பின்பற்றினார்கள். வரலாற்றுப் புனைவுகளில் புதிய திசைகளில் பயணம் செய்த பிரபஞ்சன் (மானுடம் வெல்லும்)அந்த எளியமுறைக்கு மாற்றை முன்வைத்தவர்.

அறியப்பட்ட வரலாற்றைக் கவனமாகத் தவிர்த்துவிட்டு புனைவான வரலாற்றை உருவாக்குவதன் மூலம் சமூகநாவல்கள் உருவம் கொள்கின்றன. புனைவான கிராமங்கள் அல்லது நகரங்களை உருவாக்கும் நாவலாசிரியர்களின் நாவல்களிலும் ஆண்டுக் கணக்குகளைச் சுலபமாகக் கண்டு சொல்ல முடியும். வாசிப்பவர்களுக்குக் கூடுதலான வரலாற்றறிவும் நிலவியல் பார்வையும் இருந்தால் அறியப்பட்ட வரலாற்றின் பின்னணியைக்கூடக் கண்டுபிடித்துவிடலாம். அதன் மூலம் ஒரு புனைவான நாவலை வரலாறாகவும் சமூக இருப்பாகவும் இயங்கியலாகவும் வாசிக்கமுடியும். ஆனால் உருவாக்கப்படும் பாத்திரங்கள் எப்போதும் புனைவாகவே இருக்கும்; இருக்கவேண்டும். அதுவும் அறியப்பட்ட மனிதர்களாக இருக்கும் நிலையில் அவை தன் வரலாறாகவோ/ வரலாற்றுப்புனைவாகவோ ஆகிவிடும். இவ்வளவு சிக்கல்களையும் தாண்டித்தான் அல்லது உள்வாங்கிய பின்பே ஒரு எழுத்தாளர் நாவலை உருவாக்குகிறார். இதன் மறுதலையாக இவ்வளவு புனைவுகளையும் உடைத்துப் புரிந்துகொள்பவனே நாவலின் வாசகனாகவும் விமரிசகனாகவும் மாறுகிறான் என்றும் சொல்லலாம்.

 புதுவகை நாவல்கள்

பாத்திரங்களை உருவாக்குவதில் பெருமளவு வேறுபாடுகள் இல்லையென்றபோதும் காலம், வெளி ஆகியனவற்றை உருவாக்குவதில் நேர்கோட்டுத்தன்மையைக் குலைப்பதைப் புதுவகை நாவல்கள் முக்கியமான உத்தியாக நினைக்கின்றன. நேர்கோடற்ற தன்மையினூடாகப் பாத்திரங்களின் புறச்சூழலையும் அகநிலைப்பாடுகளையும் சந்திக்கச் செய்வதும் நடக்கின்றன. விலகிப்போவதையும் உருவாக்குகின்றன. இணைதலும் விலகலுமான எழுத்துமுறையின் மூலம் நமது காலத்து மனோநிலையான- நவீனத்துவ முறையைக் கடந்த பின் நவீனத்துவ மனநிலையைக் கட்டமைக்க முடியும்.  முதன்மையாக நான் எழுதும் நாவலில் விரியும் எதுவும் பெருங்கதையாடலின் கூறுகள் கொண்டதல்ல என்பதை எழுதுபவன் உணர்த்த முடியும். அண்மையில் வாசிக்கக் கிடைத்த ஒரு தமிழ் அத்தகைய உணர்த்துதலைக் கச்சிதமாகச் செய்தது.அந்த நாவலின் வெளி ஆச்சரியப்படத்தக்க விதமாகப்  பெருவெளிப் பரப்பைக் கொண்டிருக்கிறது. சிறுபரப்பான ஊர்களில் நிலைகொள்ளாது, மாநிலம் மற்றும் தேசம் என்னும் நிலவியல் சட்டகங்களைத் தாண்டி, கண்டத்தையும் கடக்கும் வெளியைக் கொண்டதாக எழுதப்பட்டுள்ளது அந்த நாவல். அந்த வகையில் இந்நாவலைத் தமிழின் முக்கியமான வரவு எனச் சொல்வதில் எனக்குத் தயக்கமில்லை.நாவலின் பெயர் காப்காவின் நாய்க்குட்டி(மே,2015). எழுதியவரின் பெயர் நாகரத்தினம் கிருஷ்ணா. நாகரத்தினம் கிருஷ்ணா தமிழ் நிலப்பரப்பில் வாழும் தமிழ் எழுத்தாளர் அல்ல; அவர் வாழும் நகரம் பிரெஞ்சு நாட்டின் ஸ்ட்ராபோர்டு  என்பதால் இப்பெருவெளி எழுத்து சாத்தியமாகியிருக்கிறதோ என்றுகூடத் தோன்றுகிறது. உலக இலக்கிய வரலாற்றில் நன்கு அறியப்பட்ட பெயர் ப்ரான்ஸ் காப்கா. காப்காவின் முக்கியமான நாவலொன்று (Der Process/Trial-விசாரணை) தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு கால் நூற்றாண்டுக்கும் மேலாகிறது. பிரெஞ்சு நாட்டில் வாழும் நாகரத்தினம் கிருஷ்ணா, காப்கா என்னும் ஜெர்மானிய நாவலாசிரியரின் பெயரோடு ஒரு நாய்க்குட்டியை இணைத்துத் தனது நாவலுக்கு ஏன் தலைப்பு வைக்கவேண்டும் என்ற ஆவலே அந்த நாவலை வாசிக்கத்தூண்டும் காரணங்களில் முதன்மையாகிவிட்டது எனக்கு.

கட்டமைப்புப் புதுமை

அறியப்பட்ட இலக்கிய ஆளுமையான காப்கா என்ற குறிப்பான பெயரைத் தலைப்பாகக் கொண்ட அந்த நாவலின் பக்கங்களுக்குள் நுழைந்தால் ஒவ்வொரு இயலுமே குறிப்பான தகவல்களோடு தொடங்கி இருக்கிறதைக் கவனிக்கலாம். ஒரு நாட்குறிப்பின் பக்கங்களைப் போல ஒவ்வொரு இயலும் உருவாக்கப்பட்டுள்ளன. ஆண்டு, தேதி, கிழமை ஆகிய தகவல்கள் முன்நோக்கிய வரிசையில் தரப்பட்டிருந்தால் ஒரு நாட்குறிப்பை வாசிக்கும் அனுபவம் கிடைக்கக்கூடும். அதன்மூலம் எழுதியவரின் மனப்பதிவுகளை வாசிக்கிறோம் என்ற எண்ணம் உண்டாகியிருக்கும்.  ஆனால் காலக் குறிப்புகளோடு வெளியின் விவரங்களான நகரம் மற்றும் தேசக் குறிப்புகளையும் தந்திருப்பதால் வாசிப்பவர்க்குத் தரப்படுவது நாட்குறிப்பனுபவம் இல்லை என்றாக்கப்பட்டிருக்கிறது. இடம், மற்றும் காலமென இரண்டும் ஒன்றிணைக்கப்பட்ட பின்பு பாத்திரங்களின் வினைகளும் உரையாடல்களும் தொடர்ந்துள்ளன. இதனால் வாசிப்பவர்களுக்குக் கிடைப்பது வேறுவகையான உணர்வு. கிடைக்கும் உணர்வு,  வரலாற்றைப் புனைவாக வாசிக்கும் அனுபவம். வெளிப்பாட்டு நிலையில் சமகாலத்தை மையமாக்கும் நாவல் என்னும் இலக்கியவடிவம் வரலாற்றுக்குள் நுழைவதின் நேர்மறைக் கூறுகளில் முதன்மையானது நம்பகத்தன்மையை உருவாக்குவது. அதல்லாமல் இன்னும் சில நேர்மறைக்கூறுகளும் உள்ளன. அதேபோல் எதிர்மறைக் கூறுகளும் உள்ளன. அவை பற்றித் தனியாக விவாதிக்கலாம்.

 

குறிப்பான குறிப்புகளும் நம்பகத்தன்மையும்  

 

நாகரத்தினம் கிருஷ்ணாவின் நாவல், பிராஹா, செக் குடியரசு/ 2013, சனிக்கிழமை  ஏப்ரல்,6 எனக் குறிப்பான வெளி மற்றும் காலக்குறிப்போடு முதல் இயலைத்  தொடங்குகிறது. நாவலின் கடைசி இயலான   47 வது இயலும் அதே  பிராஹா, செக் குடியரசு 2013, ஏப்ரல் 6 சனிக்கிழமை என அதே நாளிலேயே முடிகிறது.  இதனால்  ஒரேநாளில், ஒரு நகரத்தில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு என நினைத்துவிடும் வாய்ப்பிருக்கிறது.  தொடங்கிய புள்ளியில் நடந்த ஒரு மாயத்தை விடுவிக்கும் ரகசிய விடுவிப்பாக எழுதப்பட்டுள்ள இந்நாவலின் காலக்கணக்குகளைக் கவனமாகக் கணக்கிட்டால் கால அளவு நான்கு ஆண்டுகள் என்பது தெரியவரலாம். நான்காண்டுகளில் நடந்த சில நிகழ்வுகள் ஒரு மையத்தைச் சென்று அடைவதற்காக  உருவி எடுத்துத் தரப்பட்டுள்ளன. அதேபோல் நிகழ்வுகளின் தொடக்க வெளியாக ஐரோப்பாவின் செக் நாட்டுத் தலைநகர் பிராஹாவாக இருந்தாலும் அதிகமான நிகழ்வுகள் பிரான்ஸ் நாட்டின் ஸ்ட்ராபோர்டு நகரத்திலேயே நடக்கின்றன. ஸ்ட்ராபோர்டு நகரத்திற்கு  இலங்கையின் முல்லைத்தீவிலிருந்தும்    இந்தியாவின் புதுச்சேரி நகரத்திலிருந்தும் வந்து சேர்ந்த மனிதர்கள் சந்தித்த நடைமுறைச் சிக்கல்களும் மனவியல் உறுத்தல்களுமே நாவலின் களம். இவ்வெளிகள் தவிரப் பயணவெளிகளாக ஜெர்மனியின் ப்ராங்க்பர்ட்டும், எந்தெந்தத்தேசமெனத் தெரியாத பயண வழித்தடங்களும்கூட நாவலின் பரப்பில் வந்து போகின்றன .காப்காவின் நாவல் நிகழ்வெளியால் மட்டுமல்லாமல் தரப்பட்டுள்ள குறிப்பான காலக் குறிப்புகளாலும்கூடப் பெருவெளி எழுத்தாக இருக்கிறது. காலத்தை அதன் நிகழ்தகவில் வரிசைப்படுத்தும்போது முதல் நிகழ்வாக 2009 மே 20, புதன்கிழமையை தொடக்க நாளாகச் சொல்லலாம். இந்த நாள் இலங்கைத் தீவில் நடந்த மனிதப் பேரழிவுக்குப் பிந்திய ஒரு நாள் என்னும் குறிப்பு என்பதை மறந்துவிடக்கூடாது. மொழியையும் சமயத்தையும் அடையாளமாகக் கொண்ட பெரும்பான்மைச் சிங்கள பௌத்த ஒடுக்குமுறைக்கெதிராகத் தமிழ்/இந்துச் சிறுபான்மையினம் நடத்திய விடுதலைப்போரில் மனிதப்பேரழிவு நடந்த இடம் முல்லைத்தீவு. அந்த வரலாற்றுக் குறிப்போடு தொடங்கும் அந்த இயலில் முல்லைத்தீவிலிருந்து கிளம்பிக் கொழும்பு வழியாக இந்தியா வந்து, எந்தெந்த நாடுகள் வழியாகவும் நகரங்கள் வழியாகவும் செல்கிறோம் என்பதை அறியாமல் பயணம் செய்த ஒரு பெண்ணை (நித்திலா) அவளது அகதி அடையாளத்தோடு பிரான்ஸில் தங்கவைத்துவிட ஒரு பெண் (ஹரிணி) உதவுகிறாள். அப்படி உதவும் அவள் நித்திலாவோடு எந்த உறவும் கொண்டவள் அல்ல. ஆனால் தமிழ்பேசும் ஆடவனுக்கும் பிரெஞ்சு பேசும் பெண்னொருத்திக்கும் பிறந்தவள். அவளது முயற்சியில் அவளது நண்பர்களும் பங்கெடுக்கிறார்கள். அவர்களின் முயற்சிக்குப் பின்னிருக்கும் மனநிலை என்ன? என்பதே நாவல் எழுப்பும் அடிப்படை வினா. இந்த வினாவிற்கான விடையைப் பெற இன்னும் சிலரின் பயணமும் காரணங்களாக இருக்கின்றன. அந்தப் பயணமும் செக் நாட்டின் பிராஹாவை நோக்கிய பயணமே. இந்தப் பயணம் நித்திலாவின் பயணம்போல நெருக்கடியால் விரும்பி மேற்கொண்ட பயணமல்ல. தற்செயல் நிகழ்வுகளால் நகர்த்தப்படும் பயணம்.

இந்தியாவின் தென்கோடி நகரமான கன்யாகுமரியிலிருந்து 2010, நவம்பர்,12, வெள்ளிக்கிழமை காலை கிளம்பி, ரயிலில் டிக்கெட்டில்லாப் பயணியாக ஏறி, அந்த ரயிலில் வரும் ஒரு வெள்ளைக்காரனோடு ஒட்டிக்கொண்டு வட இந்தியாவின் புதுடெல்லி வந்து, ரிஷிகேஷில் தங்கியிருந்து இந்திய ஆன்மீகத்தின் அடையாளமாக ஆன ஒருவன், செக் குடியரசின் தலைநகரான பிராஹா வந்து சேரும் சாமியாரின் பயணம். இவ்விரு பயணிகளும் மூன்றாவதாக ஒரு கதைக்கண்ணியில் இணைக்கப்படுகிறார்கள். அந்தக் கண்ணி, புதுச்சேரியின் பிரெஞ்சிந்தியர்களுக்குள்ள இரட்டைக் குடியுரிமையைப் பயன்படுத்தி பிரான்சில் வாழும் குடும்பம். அவர்களது உதவியால் பிரான்ஸ் வந்த சேர்ந்தவன் வாகீசன் என்னும் இளைஞன்.

நாவலின் வெளியைப் பெருவெளியாகவும், குறிப்பான நான்காண்டு காலத்தை நிகழ்வுகளின் காலமாகவும் கொண்ட காப்காவின் நாய்க்குட்டியை அதன் ஆசிரியர் உருவாக்கியிருக்கும் சொல்முறையும் தொனியும் முக்கியமானவை. ரகசியங்களைத் தேடும் துப்பறியும் பாணியும், அதனால் கிடைக்கக்கூடிய விசாரணையின் விடுவிப்புமான சொல்முறையும் நாவல் முழுக்கப் பின்பற்றப்பட்டிருக்கிறது. மனிதத் தன்னிலைக்குள் அலையும் குற்றவுணர்வுக்கான காரணங்கள் மனிதர்களிடம் மட்டுமே இருப்பதில்லை; அவர்கள் வாழும் அமைப்புகளின் விதிகளிலும் இருக்கின்றன என்பதைத் தனது படைப்புகளில் அடியோட்டமாக வைத்து எழுதியவர் காப்கா. அதனை நினைவூட்டம்விதமாகத் தலைப்பைத் தேர்வுசெய்த நாகரத்தினம் கிருஷ்ணா தனது எழுத்துமுறையை விசாரணையின் தன்மையில் உருவாக்கியதன் மூலமும் தலைப்புப்பொருத்தத்தைச் செய்ய நினைத்திருக்கிறார்.

நித்திலா அகதியாகத் தொடர்ந்து இருக்கத்தக்கவளா? வெளியேற்றப்பட வேண்டியவளா? என்ற விசாரணைக்குப் பின்னால் பல துப்பறியும் பணிகள் நடக்கின்றன. துப்பறியும் பணியில் ஈடுபடுபவள் முழுநேரத்துப்பறியும் பணியில் ஈடுபட்ட அனுபவம் கொண்டவள் அல்ல. ஐரோப்பிய நீதிமன்றங்கள் பின்பற்றும் நடைமுறைப்படி குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்படும் நித்திலாவின் பேச்சை மொழிபெயர்க்கப்போனவள் ஹரிணி. அவளது மொழிபெயர்ப்புப்பணி கூடத் தற்செயலாக நேர்ந்தது. வழக்கமாக மொழிபெயர்ப்புச் செய்யவேண்டியவர் வரமுடியாததால், தனது வேலையைத் தற்காலிகமாகக் கைவிட்டுவிட்டு மனச்சோர்வோடிருந்த ஹரிணி தற்செயலாகத் தான் ஏற்றுக் கொண்டாள். ஏற்றுக் கொண்ட அவளுக்கு நித்திலாவின் மௌனமும், பேச விரும்பாத இறுக்கமும் பல ரகசியங்களைக் கொண்டது என நினைக்கவைக்கிறது. அதுவே அவளுக்கு ஏதாவது உதவிசெய்தாகவேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குகிறது.

இறங்கித் துப்பறிகிறபோது நித்திலா திருமணம் ஆகாமலேயே ஒரு குழந்தையைப் பெற்றுக்கொண்டவள் என்ற உண்மை தெரியவருகிறது. ஆனால் அந்த குழந்தை அவளிடம் இல்லை. அவளைப் பிரான்சிற்கு வரவழைத்த அக்காவிடம் இருக்கிறது. அக்காளும் அத்தானும் தங்கள் குழந்தை என்றே வளர்க்கிறார்கள். நித்திலாவின் குழந்தைக்குக் காரணமான ஆண் யார்? எதையும் வாயைத்திறந்து சொல்ல மறுக்கிறாள் நித்திலா. எந்தத் தீர்ப்பையும் ஏற்கும் மனவலிமையோடு கூண்டேறி இறங்கிக் கொண்டிருக்கிறாள் அவள். இந்த மனவலிமைதான் ஹரிணியை உற்சாகமடையச் செய்கிறது.

ஹரிணியைப் பொறுத்தவரையில் அந்தக் குழந்தை நித்திலாவின் குழந்தை என்று நிரூபித்துவிட்டால் அங்கேயே அவளை அகதியாகத் தங்கவைத்துவிடலாம் அதற்கான துப்பறிதலும் விசாரணைகளுமாக நாவல் பல முடிச்சுகளோடு நகர்கிறது. செயலாகக் கைவ் முறையானதங்கள் நாட்டிற்குள் நுழைந்தவர் முறையான அனுமதியின்றி நுழைந்தவராக இருந்தபோதிலும் சொந்தநாட்டுக் குடியுரிமைச் சட்டங்களும், உலக மன்றங்களில் ஒத்துக் கொண்ட அகதியுரிமைச் சட்டங்களும் அனுமதித்தால் ஒருவரை நாட்டைவிட்டு வெளியேற்றக் கூடாது என்ற உயரிய நடைமுறைகளைக் கொண்ட நாடுகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் குடியேற்றமுறையான விசாரணையின் அடிப்படையிலும் ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டில் அகதியாக ஒருவரைத் முல்லைத் தீவிலிருந்து நித்திலாவை ஸ்ட்ராபோர்ட் நகரத்திற்கு வரவைத்தவர்கள் அவளது அக்காவும், அவரது கணவரும். வரச்சொன்னபோது இருந்த காரணம், அவளுக்கு அங்கு அகதி உரிமையோடு புதுச்சேரியிலிருந்து வந்து பிரான்சில் தங்கியிருக்கும் வாகீசனைத் திருமணம் செய்து வைத்து போராளியாக வாழ்ந்தவளைக் குடும்பப் பெண்ணாக மாற்றிவிடலாம் என்ற ஆசைதான். அவனது புகைப்படத்தையெல்லாம் காட்டி அழைத்த அத்தானும் அக்காவும் அவள் வந்த பின்னர் அவனைக் கண்ணிலேயே காட்டவில்லை. நீண்ட காலமாகத் தங்களுக்குக் குழந்தை இல்லையென்பதால் அவளைத் தானே திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்ற ஆசை அவளது அத்தானுக்கும் இருந்தது.

அக்காவின் கணவனால் உண்டான பிள்ளையா? நித்திலாவை விட்டு விலகிய பின் இந்திய மரபுகளின் மீது பிடிமானம் கொண்ட அத்ரியானா என்னும் பிரெஞ்சுப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட வாகீசனால் கிடைத்த பிள்ளையா என்ற கேள்விக்கான விடை தெரிந்த ஒரேயொருத்தி நித்திலா மட்டுமே. அவளோ வாய் திறக்க மறுக்கிறாள். தொடர்ந்த முயற்சியில் ஹரிணிக்குத் தோல்வியே கிடைக்கிறது என்றாலும், அந்தக் குழந்தையின் தாய் நித்திலா தான் என்பதை நிரூபிக்கமுடிகிறது. அந்த நிரூபணம் போதும். நீதிமன்றம் அவளை பிரான்ஸிலேயே அகதியாகத் தங்க அனுமதித்துவிடும். அதை நிறைவேற்றும் விசாரணையோடு நாவலின் நிகழ்வுகள் நிறைவடைகின்றன.

தரவுகள், சாட்சிகள், விசாரணைகள், சட்ட நுணுக்கங்கள் எல்லாம் அங்கே நிறைவடைந்தாலும் விசாகனைத் துரத்தும் குற்றம் என்னும் நாய்க்குட்டி – நாய்க்குட்டியாக மாறிய அத்ரியானா என்னும் மனச்சாட்சி- காப்கா மியூசித்திற்குப் பக்கத்தில் இருக்கும் ஆற்றில் குதித்து அவனைக் குதறியெடுப்பதாக எழுதுவதோடு நாவலை நிறைவு செய்கிறார் நாகரத்தினம் கிருஷ்ணா.

பிரான்ஸ் தேசத்தின் குடிமக்களின் வழியாக நகரும் துப்பறிதல் , விசாரணை அதன் முடிவில் கிடைக்கும் நீதி என்பதன் வழியாக ஒரு வாசிப்புத் தளம் உருவாக்கப்படுகிறது. அத்தேசத்திற்குப் புலம்பெயர்ந்தும் இடம்பெயர்ந்தும் சென்று சேர்ந்த இந்திய மற்றும் இலங்கைக் குடிமக்கள் வழியாக இன்னொரு வாசிப்புத்தளமும் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டையும் உருவாக்கி நம் காலத்தின் முக்கியமான சொல்லாடலான குற்றநீதியோடு தொடர்புடைய புள்ளியில் கொண்டுவந்து இணைப்பது இந்நாவலின் முக்கியமான விசாரணை. அவ்வகையில் இந்நாவல் உலக இலக்கியப்பரப்புக்குள் நுழையும் தன்மைகொண்டது .

நன்றி: தீரா நதி பிப்ரவரி 2016


3.காஃப்காவின் நாய்க்குட்டி ஒரு வாசிப்புப் பார்வை

.முத்துக்கிருஷ்ணன்

1

நாவல் என்ற இலக்கிய வகை ஒரு கட்டுக்குள் அடங்காத, அடக்க இயலாத முரட்டுக் குணம் கொண்டதாக விளங்குவது போல் தோன்றினாலும் எழுதி முடித்த பின்னர் அந்தப் படைப்பாளியால் ஒரு வரையறைக்குள் கொண்டு நிலை நிறுத்தி வைக்கப்படுகின்ற ஒரு மென்மை இலக்கிய வகை என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது போல் தோன்றினாலும் ஏற்றுக் கொண்டாக வேண்டிய ஒன்று தான் என்பது உண்மை.

திரு.நாகரத்தினம் கிருஷ்ணாவின் மொழிபெயர்ப்புப் படைப்புகள் பலவற்றைப் படித்திருப்பினும் அவர் மூலநாவலும் எழுதக்கூடிய வல்லமை படைத்தவர் என்பது அவரின் “காஃப்காவின் நாய்க்குட்டி” என்ற சமீபத்தில் வெளிவந்துள்ள நாவலைப் படித்ததும் நிரூபணமாயிற்று.

இன்றைய உலக இலக்கியங்கள் அனைத்துமே ஒரு புதிய வழித்தடத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்றன என்பது கபிரியேல் கார்கியா மார்க்யோஸ், ஒரான் பாமுக், சல்மான் ருஷ்டி ஆகியோரின் உலகளாவிய பரிசுகள் பெற்ற நாவல்களைக் கருத்தில் கொள்ளல் அவசியம், ஃபிரன்ஸ் காஃப்காவிற்கும் ஒரு தலையிடம் உண்டு.

ஃப்ரன்ஸ் காஃப்காவின் The Trial என்ற நாவலின் தமிழ் மொழி பெயர்ப்பில் க்ரியா எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் ஒரு குறிப்பு என்ற முன்னுரை போன்ற பகுதியில் கீழ்க்கண்ட கருத்தை வாசிப்பு என்பது பற்றி விவரித்து விளக்குகிறார்.

-2-

வாசிப்பு என்பது இயந்திரகதியில் நிகழும் செயல் அல்ல; மாறாக மன ஒழுங்கை வலியுறுத்தும், படைப்புச் செயலில் பங்கு கொள்ளும் ஒரு செயல் வாசகனின் கவனத்தையும் அக்கறையைக் கோரும் போது தான் ஒரு படைப்பு தன் முழு வீச்சையும் புலப்படுத்துகிறது பெரும்பாலோருக்கு வாசிப்பு எளிதில் நிகழும், முயற்சி தேவைப்படாத ஒரு பழக்கமாக இருந்து வருகிறது. வாசகனின் முயற்சியை வேண்டும், அதன் மூலம் வாசகனின் அகவிஸ்தரிப்பைச் சாத்தியமாக்கும்

இந்த க்ரியா எஸ்.ராமகிருஷ்ணனின் கருத்து நாவல் வாசிப்போரின் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்றாகிறது.

ஓர் ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்பிருந்த நாவல் வாசிப்பு நிலை தமிழில் இன்று இல்லை என்பது உறுதி. புதுமைப்பித்தன், நகுலன், மௌனி, சுந்தரராமசாமி, தமிழவன் போன்றோர் கடல்புறா, கயல்விழி, குறிஞ்சிமலர், பாவைவிளக்கு, சிவகாமியின் சபதம் போன்ற நாவல் முறைகளை முற்றிலும் ஒதுக்கிவிட்டு நாவல் தளம் தமிழில் புது மேடையில் இன்று உற்சாகமாக வலம் வந்து கொண்டிருக்கிறது. பழைமைப் பாங்கான நாவல்கள் வெளிவருவது இன்று அடியோடு நின்று விட்டது எனலாம்.

 

-3-

காஃப்காவின் நாய்க்குட்டி”  பிறந்த கதை என்ற தன் முன்னுரையில் காஃப்காவின் நாய்க்குட்டிஎன்ற நாவலின் தலைப்பினைப் போலவே பிராஹா நகரப் பயணம்”, பயணத்தின் மூன்றாம் நாள்’  காஃப்காவின் பிறந்த இல்லத்தைக் கண்டது, ‘நாவல் கருத்தரித்ததுஅனைத்துமே தற்செயல் நிகழ்வுகள். திட்டமிடல்களைக் காட்டிலும் எதிர்பாராதவையே நமது வாழ்க்கையை அதிகம் தீர்மானிப்பவை என்பதை உறுதி செய்த மற்றோர் சம்பவம்

என்று நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள் தெரிவித்திருப்பதிலிருந்து நவீன நாவல்கள் பழைய ஆரம்பகால நாவல்களைப் போல திட்டமிடல்களில் அமைக்கப்படுவதல்ல என்பது புலனாகிறது. நாவல் ஒரு கரையற்ற கடல், எல்லைகளற்ற வான்வெளி, ஓட்டம், நனவோடை,  நினைவிலி ஆகிய தடங்களில் கதை போன்ற ஒன்று நடனமிடுகிறது. தாளகதியும் நிறைந்திருக்கிறது. அந்த வகையிலும் நாகரத்தினம் கிருஷ்ணாவின் காஃப்காவின் நாய்க்குட்டிஎன்ற நாவல் அமைந்திருப்பது புது முயற்சி இலக்கியங்களில் முழு முனைப்பு கொண்டு செயல்பட்டிருக்கிறது என்பது வெற்றிக்கான அறிகுறி தான்.

காஃப்காவின் நாய்க்குட்டிஎன்ற நாகரத்தினம் கிருஷ்ணாவின் நாவலின் கதை என்ன? நித்திலாவின் கதையா?  பாலாவின் கதையா? சாமியின் கதையா? ஹரிணியின் கதையா?  நித்திலாவின் தமக்கையின் கதையா? வாகீசனின் கதையா? அத்ரியானாவின் கதையா? இவர்கள் எல்லோருடைய கதை என்றும் சொல்லாம், இல்லை என்றும் சொல்லலாம். இங்கே தான் நாவலின் தேடலில் வாசகன் பயணிக்க வேண்டியதிருக்கிறது. பல்வகை உத்திகள் நாவலில் புரண்டும், சுழன்றும், பின்னப் பட்டிருக்கின்றன. அனைத்து பாத்திரங்களும் தேடலில் சுழன்று நிகழ்வுகளான கதையம்சத்தைத் தெளிவுறுத்துகிறது.

கதைக்கு முக்கியத்துவம் இல்லை என்றாலும் நாவல் முழுவதும் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாத நவீன உத்திகள் நாவலின் ஊடாகப் புகுந்து ஒரு அபூர்வமான இலக்கிய அனுபவிப்பை வாசிப்பவனிடம் விதைத்துச் செல்கிறது நாவல். இச்செயல் சாதாரணம் என்று எடுத்துக்கொள்ள முடியாது. ஒரு புதிய வழித்தடத்தைக்  கண்டறிய நாகரத்தினம் கிருஷ்ணா மிகுந்த அவா கொண்டுள்ளார். அந்த முயற்சி அவரை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றிருக்கிறதா? என்பதை இந் நாவலைப் படிக்கும் வாசகர்களால் மட்டுமே புலப்படுத்த இயலும்.

பல பாத்திரங்களின் கதைகள் பலவகை உத்திகளால் மிகவும் வித்தியாசமான முறைகளில் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாத்திரத்தின் கதையும் முரண்பாடான, அதே சமயம் உலகளாவிய சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் வாழ்க்கைப் பிரதிபலிப்பாக இருக்கிறது. நித்திலா என்ற பாத்திரம் மிகவும் முக்கியத்துவம் பெற்ற பாத்திரமாகத் திகழ்கிறது. நாவல் வாசிப்பவர்கள் நித்திலா மீது இரக்கம் கொள்ளவும் அதே சமயம் அவளுடைய தைரியத்தை நினைத்துப் பெருமைப்படவும், அவளுடைய அல்லல்களை நினைத்து வருத்தப்படவும் நேர்கிறது. நித்திலாவின் (திருமண ஆகாமல் பெற்ற குழந்தை) மகன் மனோகரன் போன்ற விவரிப்புகள் தமிழுக்குப் புதுமையாகத் தென்படுவது போல் தோன்றினாலும் பழைமையின் சாயல் ஓட்டிக் கொண்டிருப்பதை உணர முடிகிறது. பிற பாத்திரங்களில் முக்கியமானது அத்ரியேனா என்ற பாத்திரம் நாவலின் தலைப்போடு பொருந்திப் போகிற பாத்திரமாகப் பரிமளிக்கிறது. நாய்க்குட்டியாகப்  பார்க்கப்படுதல் அத்ரியானாவும் அவள் கணவரும் படிமங்களாக்கப்பட்டிருப்பது நாவலாசிரியர் புதிய உத்திகளுக்குள் நுண்மையாக நுழைந்திருப்பது புலப்படுகிறது. ஹரிணியின் உதவும் மனப்பான்மை மனிதாபிமானத்தை எதிரொலிக்கிறது. நித்திலாவின் தமக்கை தமிழ் டி.வி. சீரியல்களில் வரும் பெண்களை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது. வாகீசன் சூழ்நிலைக்கேற்ப நடந்து கொள்ளும் விதம் மனித இயல்பைத் திறம்பட சுட்டுகிறது.  காதல் புறம் தள்ளப்பட்டு வாழ்வின் ஆதாரம் மையப்படுத்தப்பட்டிருப்பது சிறப்பு. இன்னும் பாலா, சாமி, முல்லர் ஆகிய எல்லா பாத்திரங்களும் அவரவர்கள் பண்புநலனைப் பக்குவமாக வெளிப்படுத்துகிறார்கள் என்பது கச்சிதமாக அமைக்கப்பட்டுள்ளது. எல்லா பாத்திரங்களுமே ஒரு தேடலை நோக்கிப் பயணிப்பது தான் நாவலின் அடிநாதம். அந்தத் தேடல் என்ன என்பதை நாவல் படிப்பதிலிருந்து தேடினால் கிடைப்பது வாழ்க்கை என்ற ஒன்று தான்.

இந்த நாவலில் ரசித்துச் சிலாகிக்கக் கூடிய பகுதிகள் நிரம்ப உள்ளன. அனைத்து சுவாரஸ்யங்களையும் கூறல் தேவையற்றது என்பதால் சிலவற்றை மட்டும் கூறல் மிகவும் அவசியம். பிறவற்றை நாவல் படிப்போர் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே இதன் நோக்கம். சில ரசிக்கக்கூடிய பல பகுதிகளில் சில கீழே:-

மெல்லிய சன்னல் திரைகளின் மறுபக்கம் வெள்ளை வெளேரென்று மேகங்கள். ஒரு பகுதி பால்கனியின் கைப்பிடிக் கம்பிகளில் தலை வைத்திருந்தன”-பக்கம் 24

 

-6-

எதுவானா என்ன?” ஊர் பேர் தெரியா தமிழ் எழுத்தாளன் மனைவின்னு சொல்லிக் கொள்வதைக் காட்டிலும், காஃப்கா வீட்டு நாயெனச் சொல்லிக் கொள்வதில் பெருமை”- பக்கம் 44

தற்கொலை செய்து கொள்ளத் துணிச்சல் இல்லாம சந்நியாசத்தைத் தேர்வு       செய்தேனோ என்கிற சந்தேகம் எனக்குண்டு. அநேகமாக துறவு பூண பெரும்பாலோருக்கு அதுவே காரணம்”   –பக்கம் 119

 “ராஜபக்ஷேக்கள் தமிழரிலும் உண்டென்று தெரியும். ஆனால் அவன் தமக்கையின் கணவனாக தன்னுடைய குடும்பத்திலும் இருக்கக் கூடுமென்று யோசித்துப் பார்த்ததில்லை”-பக்கம் 164

நவாஸ் ஷெரீப்பை சந்திக்கத் தயாராக இருந்த மோடி போல

அவளை வரவேற்கத் தயாரான போது மாலை மணி ஆறு”-

பக்கம் 187

நாய்க்கு என்ன பேரு பின்லாடனா”-பக்கம் 191

நூலற்ற பட்டம் போல பயண இலக்குகள் பற்றிய

கவலைகளின்றி காற்றிடம் தன்னை ஒப்படைக்கும்

எண்ணம் கடந்த சில நாட்களாக விடாமல் அவரைத் துரத்துகிறது”.- பக்கம் 250

-7-

அவள் சிரிக்கிற போது, வெண்ணிற பற்கள் உதடுகளில் உட்காரவும் எழவும் செய்வதைப் பெண்களும் சாடையாகக் கவனித்தனர்”. –பக்கம் 262

 

தமிழ்நாட்டில் தமிழ் பலருடைய வாயில் அகப்பட்டுப் படாதபாடு படுவதைப் பார்க்கும் போது தமிழை எண்ணி பரிதாபம் கொள்ளத்தான் நேர்கிறது. டி.வி செய்தி, சீரியல், தினசரி செய்தித்தாள்த் தமிழ், அரசியல் கட்சிகளின் ஆவேசக் கூட்டத் தமிழ் ஆகிய இன்ன பிற இதில் அடங்கும். ஆனால் இந்நாவலில் தமிழ்நாட்டுத் தமிழ், பிரெஞ்சுத் தமிழ், இலங்கைத் தமிழ், புதுச்சேரித் தமிழ் ஆகிய மொழிநடை மிகவும் லாவகமாகவும் அற்புதமாகவும் கையாளப்பட்டிருப்பது பாராட்டிற்குரியது.

இன்றைக்கு வெளிவரும் நவீன உத்திகளுடன் கூடிய நாவல்களைப் படிக்கும் போது அத்தியாயங்கள் நீண்டு கொண்டே செல்லுவது மிகவும் சலிப்பை ஏற்படுத்துவதாய் உள்ளது. ஆனால் இந்நாவலில் மிகமிகச் சிறிய, குறுகிய, கட்டுக்கோப்பான அத்தியாயங்கள் நாவல் வாசிப்பின் விறுவிறுப்பை கூட்டுவதற்கு உந்துதலாய் இருக்கிறது.

இந்நாவலைப் படிக்கும் போது நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களுக்கு ஃப்ரன்ஸ் காஃப்கா மீது உள்ள அளவு கடந்த ஈடுபாடும் தாக்கமும் நன்கு புலனாகிறது.

58,87,151,168,181,195,250,254,262 ஆகிய பக்கங்களிலுள்ள எழுத்துப் பிழைகளை அடுத்த பதிப்பில் நீக்குதலை நினைவிற்கொள்ளல் வேண்டும் என்பது அதற்குப் பொறுப்பாளர்களின் கடமை, பணி.

உலகளாவிய களன்களைக் கட்டுக் கோப்பான நவீன உத்திகளை மிக கவனமாக உள்ளடக்கிய ஒரு சிறப்பு மிக்க நாவல் என்றே “காஃகாவின் நாய்க்குட்டி” நாவலைச் சொல்ல வேண்டும். நவீன உத்திகளை உள்ளடக்கிய இந்நாளில் வெளி வந்து கொண்டிருக்கும் புரியாமை என்ற கஷ்டம் இந்த நாவலில் இல்லை என்பது மகிழ்வுக்குரியது. நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களிடமிருந்து இன்னும் பல சிறந்த நாவல்கள் வெளிப்படும் என்ற நம்பிக்கையைப் படிப்பவர்களிடம் இந்த நாவல் ஏற்படுத்துகிறது. நாகரத்தினம் கிருஷ்ணாவைப் பொறுத்தவரையில் அவர் சிறந்த முறையில் முழுப் பொறுப்புடன் எழுதியிருக்கிறார். தமிழ் வாசகர்களும் சிறந்த முறையில் முழுப் பொறுப்புடன், கவனச் சிதறலின்றி இந்நாவலை அணுகுவார்கள் என்றால் அது தமிழுக்கு இன்னும் மெருகூட்டும், வலுவூட்டும்.

இம்மாதிரி புதுவகை நாவல்களைப் பதிப்பிக்கும் காலச்சுவடு பதிப்பகத்திற்கு தமிழ் இலக்கியச் சரித்திரத்தில் ஒரு நல்லிடம் நிச்சயம் உண்டு.

நன்றி:  பேசும் புதிய சக்தி

———————————————————————————————————————————————-

 

4. காஃப்காவின் நாய்க்குட்டிமஜ்ஜையின் ருசி

                                                          – ரா. கிரிதரன்

Guirtdaran

லண்டனிலிருக்கும் முக்கியமான சுற்றுலாத்தளங்களில் ஒன்றான டிரஃபால்கர் சதுக்கத்திற்கு ஓர் இருள் கவியும் நேரத்தில் சென்றிருந்தேன். உலக முகங்களில் சகல தினுசுகளும் பார்க்கக் கிடைக்குமிடம். புன்னகைக்கும் ஐரோப்பிய முகங்கள், புகைப்படமெடுத்து இருட்டை வெளிச்சத்தில் ஆழ்த்தும் சீனர்கள், காதலர்கள், மெத்ரோ பிடிக்க ஓடும் அலுவலகர்கள், சண்டை பிடிக்கும் அம்மா மகள், வாத்தியக்கருவி இசைப்பவர்கள் என ஒரு புத்துலகில் பிரவேசித்தது போலொரு நெகிழ்வுக்கூடல். சிங்கங்களின் சிலைகளுக்குப் பின்னே தெரிந்த ஆளுயர தொட்டிகளிலிருந்து நீரூற்று நடனத் துளிகளில் குழந்தைகளின் சந்தோஷங்கள் பல்லாயிரமாகத் தெறித்தன. உலகத்திலேயே மிகவும் அழகான சதுக்கம் எனத் தோன்றியது. அழகானப் பொழுதும் கூட. இவற்றுக்கு நடுவே ஆங்காங்கே தனிமையில் பிரக்ஞையற்று சுற்றும் சிலரும் தெரிந்தனர். நாம் அறிந்த சில முகங்கள் – பங்களாதேஷ், பாகிஸ்தான் சில சமயம் இந்தியா போன்ற நாடுகளிலிருந்து பிழைப்புக்காக வந்து தனித்து சுற்றுபவர்களும் இருந்தனர். அவர்களது தனிமை அந்த சதுக்கத்தின் குதூகலத்தில் கரைந்துகொண்டிருந்தது. பிறிதொரு நாள் அதிகாலை ஐந்து மணிக்கு அதே இடத்துக்கு வரநேர்ந்தது. நீரூற்று சலனமற்றுக் கிடந்தது, தெருவிளக்கிலிருந்தும் கடைகளிலிருந்தும் வெளிப்பட்ட நியான் வெளிச்சம் கருங்கல் சுவர்களில் மோதிப்படர்ந்திருந்தன. காற்றின் ஓசையைத் தவிர வேறெந்த சத்தமும் இல்லை. அழும் குழந்தை கையில் அது வேண்டியதைத் திணித்தது போல நிசப்தம். அங்கொன்றும் இங்கொன்றுமாய் கடை வாசல்களில் சிலர் மூட்டைப் போல குளிருக்குச் சுருண்டு படுத்திருந்தனர். வெறும் தனிமை மட்டுமே இருந்தது.

 

நாகரத்தினம் கிருஷ்ணா எழுதிய ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ நாவலைப் படித்து முடித்தபோது என்னையும் அப்படிப்பட்ட தனிமை சூழ்ந்தது போலுணர்ந்தேன். கும்மாளங்களும், குதூகலங்களும் முடிந்த பிற்பாடு வரும் தனிமை அல்ல இது. நம் கண்முன்னே திரிந்த மனிதர்கள் அவரவர் தேடல்களைத் தொடரத்தொடங்கிவிட்டதில் நம்மை சூழும் தனிமை. அப்படியாகப் படிக்கும்தோறும் சந்தோஷத்தைக் கொடுத்த படைப்பு. அதற்குப் பல காரணங்கள் உண்டு; குறிப்பாக, புதுவிதமானக் களத்தில் சொல்லப்பட்ட அகப்பயணம் பற்றிய கதையாக நாவல் இருந்தது ஒரு காரணம். நாவலில் வரும் சின்னச் சின்ன பாத்திரங்கள் கூட துல்லியமாகத் துலங்கி வந்து நம்முடன் இருந்தது அடுத்த முக்கியமான காரணம். எனக்கு சந்தோஷத்தைத் தந்தது என்பதால் கதை மிக இலகுவான சிக்கலைப் பற்றிச் சொல்கிறது என நினைக்கவேண்டாம். மனித வாழ்வின் அவலத்தைப் பற்றிப் பேசும் ஒரு படைப்பு படிப்பவர் மனதில் ஆகப்பெரிய தாக்கத்தை அபத்தத்தின் வழியே உருவாக்க முடியும் என்பதைக் காட்டும் படைப்பு. ஒரு நவீன நாவல் இம்மூன்று முக்கியமான தளங்களையும் கணக்கில் கொண்டு சுவாரஸ்யமான வாசிப்பு அனுபவத்தைத் தரமுடியும் என்பதற்கு உதாரணம் இந்த நூல்.

 

‘நீலக்கடல்’, ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கெளமுதி’, ‘சன்னலொட்டி அமரும் குருவிகள்’, ‘எழுத்தின் தேடுதல் வேட்டை’ போன்ற புத்தகங்களுக்குப் பிறகு நான் படிக்கும் அவரது நாவல். முதலிரண்டு நாவல்களும் மிகவும் சம்பிரதாயமான கூறுமுறையில் எழுதப்பட்டவை. ‘நீலக்கடல்’ பிரெஞ்சு ஆட்சியின்போது மொர்ரீசியஸ் தீவில் நடந்த தமிழர் காலனியாதிக்கத்தைப் பின்புலமாக வைத்து எழுதப்பட்ட வரலாற்று நாவல். பலவிதங்களில் இந்த நாவல் தமிழ் நவீன இலக்கியத்துக்கு முன்னோடியாக அமைந்திருக்கிறது. காலனியாதிக்கத்தைப் பற்றி நவீன வரலாற்றுப் பிரக்ஞையுடன் எழுதப்பட்ட முதல் நாவல் என இதை வகைப்படுத்தலாம். குறிப்பாக பிரஞ்சு காலனியாதிக்கம் உலக சரித்திரத்தில் மிகவும் கோரமான பக்கத்தைக் கொண்டது. நமது புதுச்சேரி முன்னோர்கள் இதை நேரடியாக அனுபவித்தவர்கள். பிரஞ்சு காலனியாதிக்கம் பிரிட்டீஷ் ஆட்சியை ஒப்பிட்டால் அதிக வன்முறையற்றது எனும் பொதுபிம்பத்தை பிரபஞ்சனின் ‘வானம் வசப்படும்’, ‘மானுடம் வெல்லும்’ போன்ற நாவல்கள் கோடிட்டுக் காட்டியது என்றால் நீலக்கடல் அக்காலகட்டத்து வாழ்க்கையை வாழ்ந்து காட்டியிருக்கும் ஒரு ஆழமானப் படைப்பு எனலாம். சரித்திர கதையில் அமைந்திருக்கும் காதல், வீரம் போன்ற ஒற்றைப்படையான மிகை உணர்வுகளைத் தாண்டி வரலாற்று பூர்வமாக மனித அவலத்தையும், ஆதிக்கத்தின் கரிய பக்கத்தையும் காட்டிய நாவல்.

 

எழுத்து முறையில் ‘நீலக்கடல்’ செவ்வியல் பாணியை ஒத்திருந்தது என்றால் ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ பின்நவீனத்துவத்தின் கூறுமுறையை ஒத்திருக்கிறது எனலாம்.  எழுத்துமுறையில் ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ அடைந்த பாய்ச்சலைக் காட்டுவதற்காக சொல்லப்பட்ட இந்த ஒப்பீடு அன்றி பின்நவீனத்துவ பாணியில் மையமற்று சொல்லப்பட்ட கதையாக இருக்கிறது எனும் அர்த்தத்தில் அல்ல. மிகத் திட்டவட்டமான மையமும், வாழ்க்கை தரிசனமும் ஒருங்கே அமைந்திருப்பதால் சில புனைவு கற்பனைகளையும் (பேசும்  நாய்க்குட்டி) மீறி யதார்த்தில் ஊறிய படைப்பாகவே அமைந்திருக்கிறது. அண்மைக்காலத்தில் இத்தனை சுவாரஸ்யமாக எழுதப்பட்ட மிகச் சொற்பமான நாவல்களில் இதுவும் ஒன்று என்பதும் இதன் பலம்.

 

மனித வாழ்க்கை துவங்கிய நாளிலிருந்து சந்திக்கும் சிக்கல்களான இடப்பெயர்வு,மனித உறவுகள் மீதான அதிகாரம் தரும் தத்தளிப்பு போன்றவற்றிலிருந்து விடுதலையைத் தேடி அலையும் மனிதர்களின் கதை இது. புதுச்சேரியிலும், யாழ்ப்பாணத்திலும், பிரான்ஸிலும், பிராஹாவிலும் நடக்கும் கதையாக அமைந்திருந்தாலும் மனிதர்கள் சந்திக்கும் சிக்கல்களில் பெரிய மாற்றமொன்றும் இல்லை. விடுதலை வேட்கை அரிக்காத மானுடனே கிடையாது எனும்போது தேசக்கட்டுப்பாட்டால், உறவுகளின் துஷ்பிரயோகத்தால், நெருங்காத உறவின் உஷ்ணத்தால் சிறைபட்டிருக்கும் மனிதன் பெறத்துடிக்கும் முதல் கைவிளக்கு விடுதலை. அதற்கானத் தேடுதலில் அலைபவர்கள் விலையாகக்கொடுப்பது என்ன? கொடுத்த விலைக்குக் கிடைத்த சுதந்திரம் மதிக்கத்தக்களவு இருக்கிறதா அல்லது மற்றொரு சிறையா? சிறையிலிருந்து சிறை, அங்கிருந்து வேறொரு தங்கக்கூண்டு என வழிதெரியாத இருட்டு குகைக்குள் கடக்கும் மானுட வாழ்வின் மதிப்பென்ன?

 

இந்த நாவலின் நித்திலா, ஹரிணி, கமிலி, வாகீசன், சாமி என ஒவ்வொருவரும் கற்பனாவாதிகள், தேடுதலில் ஈடுபடுபவர்கள், ஏமாளிகள் என நமக்குத் தோன்றிய வகையில் வகைப்படுத்தலாம். அவர்கள் தேடும் ஒவ்வொரு விஷயமும் ஏதோ ஒரு உயர்ந்த லட்சியத்தை நோக்கிய பயணமாக இருப்பதில்லை. தங்கள் சொந்த இருப்பை ஸ்திரப்படுத்திக்கொள்ள, வாழ்வின் குழப்பங்களுக்குத் தீர்வு ஏற்பட, உறவுச்சிக்கல்களிலிருந்து விடுபட என லட்சியங்கள் மண்ணில் பாவித்து பல சமயம் பிறர் காலடியிலும் தேய்ந்துவிடுகிறது – அக்காவின் புருஷனால் திருமணத்துக்குத் துரத்தப்படும் நித்திலா போல. ஏதோ ஒரு வகையில் எல்லாரும் விடுதலைக்காக ஏங்கி நிற்பதோடு மட்டுமல்லாது தங்களது ஸ்வாதீனமான இருப்பிடத்தை விட்டு விலக வேண்டிய அவசியத்துக்கும் உள்ளானவர்கள்.

 

நேர்கோட்டு பாணியில் அல்லாது கதை ஒவ்வொரு கதாப்பாத்திரங்களினூடாகத் தாவித்தாவி செல்கிறது. அப்படித் தாவிச் செல்வதிலும் ஒரு ஒழுங்கு அமைந்திருக்கிறது. தனது காதலன், அக்கா கொடுத்த தகவலின்படி தன்னைத் திருமணம் செய்யப்போகும் வாகீசனைத் தேடி இலங்கைவாசியான நித்திலா ஐரோப்பிய பிராஹா நகரத்தை வந்தடைவதிலிருந்து கதை தொடங்குகிறது. மிகச் சரியான இடம்தான். கதையில் தொடக்கத்தில் கொடுக்கப்படும் தேதிகளுக்கும் ஒரு முக்கியத்துவம் உள்ளது – 2013, ஏப்ரல் 6 ஆம் தேதி நடக்கும் கதையாகத் தொடங்குகிறது. நித்திலா ஓர் முன்னாள் போராளி. இலங்கை உள்நாட்டுப்போரில் இயக்கத்தில் பயிற்சி எடுத்தவள். போர் முடிந்து மறுசீரமைப்பின்போது இலங்கை அரசால் புகலிடம் கொடுப்பட்டாலும், இயக்கத்தில் ஈடுபட்டதை மறைந்ததினால் விசாரணைக்குத் தேடப்படும் குற்றவாளி. பிரான்ஸிலிருக்கும் அக்காளும் மாமாவும் அழைத்ததன் பேரில் வந்துவிடுகிறாள். பிராஹா நகரில் தன்னந்தனியாக வாகீசனைத் தேடி அலைவது எதனால்? ஹோட்டலில் வேலை செய்யும் வாகீசன் ஒரு எழுத்தாளனாக ஆசைப்படுபவன். பிராஹா நகரில் பிரான்ஸ் காஃப்காவின் நினைவிடங்களில் நேரத்தைக் கழிக்க விருப்பப்படுபவன் – பிராஹா வருவதற்கான முகாந்திரங்கள் கச்சிதமாக அமைந்திருக்கும் தொடக்கம்.

 

சார்லஸ் பாலமும், வெல்ட்டாவா நதியும் பிராஹாவின் பிரதானமான அடையாளங்கள். சார்லஸ் பாலம் பழைய பிராஹாவைப் நவீனப் பகுதியோடு இணைக்கும் மிக முக்கியமான இடமாகும். வெல்ட்டாவா நதியைத் தாண்டி நிற்கும் பாலம் நெடுக கருங்கல் சிற்பங்களும், நவீன விளக்குகளும் பொருத்தப்பட்டு சுற்றுலா மையமாகக் காட்சி அளிக்கிறது. இந்த நாவலில் வெல்ட்டாவா நதியும் இந்த பாலமும் தேடுதலின் தவிப்பைக் காட்டும் படிமமாக உருவாகியுள்ளது. பிராஹா நகரில் வாகீசனைத் தேடும் நித்திலா பாலத்தைக் கடக்கும்போது அங்கு படகு கவிழ்ந்து ஒரு ஜோடி இறந்துவிட்டதை அறிகிறாள். கூடவே ஒரு வயதான இந்தியர் அவளைப்பார்ப்பதை கவனிக்கிறாள். இவர்கள் அனைவரையும் ஒரு  நாய்க்குட்டிப்  பார்ப்பதையும கண்டுகொள்கிறாள். வண்ண ராட்டினத்தைச் சுற்றும்போது வெள்ளையும் வண்ணங்களும் சேர்வதும் பிரிவதுமாகக் கண்ணுக்குத் தெரிவது போல இங்கிருந்து ஒவ்வொரு கதாபாத்திரமும் துலங்கி எழுத்தொடங்குகிறது. அவ்வப்போது அவர்களது தேடுதலின் தீவிரம் அதிகரிக்கும்போது பிராஹா நகரின் சார்லஸ் பாலத்தின் மீது அவர்களது வாழ்க்கைப் பயணம் குறுக்கும் நெடுக்குமாகக் கடப்பதுமாக அமைகிறது.

 

இந்த இடத்தில் ஒரு நேர்கோட்டான பாதையில் செல்லாமல் ஒரு புதிர்வட்டப்பாதையில் செல்லும்படி ஆசிரியரைத் தூண்டியிருக்கும் விஷயங்களைப் பற்றி எண்ணிப்பார்க்கிறேன். கன்னியாக்குமரியில் பெண்ணாசையால் வாழ்வைத் தொலைத்து பின் சுதாரித்து மீண்டவர் பிள்ளைகள் பெரியவர்களானதும் அதே பெண்ணின் ஒப்புதலில் திடுமென வாழ்விலிருந்து நிராயுதபாணியாக நீக்கப்படும் சாமியின் சித்திரம். புதுச்சேரிக்கு சுற்றுலா செல்லும் பிரான்சு தேசத்து எலிஸபெத்தும் தமிழனும் இணைந்த புதிர் நொடியில் உருவாகிப்பிறந்த ஹரிணி ஒரு புறம். மாமனின் துன்புறுத்தலைத் தவிர்க்க திருமணம் செய்ய ஏற்பாடு செய்திருப்பதாக நம்பி வரவழைக்கப்பட்ட வாகீசனைத் தேடி நித்திலாவின் பயணம் ஒரு திசையில். ஊருக்குத் திரும்ப முடியாது எழுத்தாளனாகவும் ஸ்திரப்பட முடியாது ஹோட்டலில் காலத்தைக் கழிக்கும் வாகீசன் விசா சிக்கலுக்காகத் திருமணம் செய்துகொள்ளும் வாழ்க்கை. இவையணைத்தையையும் இணைப்பது அவர்களது இருத்தலின் மீதிருக்கும் ஆதாரப்பிடிப்பு. இவர்கள் அனைவரும் முன்னர் வாழ்ந்த வாழ்க்கைவிட மேலான ஒன்றை அடையும் முயற்சியில் நம்மைப்போன்றவர்கள் தாம். ஆனால் அவர்களின் நிஜ உலகம் ஒரு நாய் வேட்டைக்களம். புதைகுழி. வீழ்ந்தால் மீளமுடியாத நிலையில் இந்தப்பயணம் அவர்களது ஜீவமரண முடிவைத் தாங்கிய ஒன்று.

 

ஒன்றுடன் ஒன்று முற்றிலும் வேறுபட்ட கதையாக அமைந்தாலும் அவர்களது வாழ்க்கை லட்சியம் ஓருடலாக்குகிறது. அவர்களது வாழ்விலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பக்கங்களை அடுத்தடுத்த பகுதிகளாகப் படிக்கும்போது நமக்கு எந்தவிதமான குழப்பமும் ஏற்படுவதில்லை. சொல்லப்போனால் நித்திலா வாழ்வில் வரும் சிறு வெளிச்சம் ஹரிணியின் வாழ்வைக் காட்டுகிறது. நித்திலாவுக்காக மொழிபெயர்ப்பாளராக வரும் ஹரிணியின் போராட்டம் அவளது அம்மாவுடனான சங்கமத்துக்கு உதவுகிறது. அம்மாவிடம் கொஞ்சமும் உதவி கேட்கக்கூடாது எனும் வீறாப்புடன் வாழ்ந்து வருபவள் நித்திலாவின் விசா சிக்கலுக்காக நாடு கடத்துவதைத் தவிர்ப்பதற்காக எலிஸெபத்துடன் பேசத்தொடங்குகிறார். ஹரிணியின் அம்மாவோடு ஒரு புது பிணைப்பு உருவாகிறது. அதே போல, கொடூர வாழ்விலிருந்து நித்திலாவை மீட்கப்போராடும் வாகீசன் தனது விசா சிக்கலைத் தீர்ப்பதற்காக ஒரு பிரான்ஸ் நாட்டுப்பிரஜையைத் திருமணம் செய்ய வேண்டியிருக்கிறது. இப்படி ரிலே ரேஸ் போல சக மனித உறவுகளுக்குள் இருக்கும் முடிச்சுகளை இன்னும் சிக்கலாக்கி பாத்திரங்களை பகடைக்காயாக மாற்றியிருக்கிறார் ஆசிரியர். அவர்களை நன்றாகவே அலைக்கழிய வைக்கிறது.

 

ஜன்னலில் விரையும் சொட்டி நீரைப்போல ஏதோ ஒரு நிதானத்துக்கு வரத்துடிப்பது போல ஏனோ இந்த கதாபாத்திரங்களுக்கு வாழ்வு அமைந்துவிட்டது. சடசடவென ஒரு குழிக்குள் விழுவதும் பின்னர் நிதானமாக எழுந்து முழு சக்தியைத் திரட்டி தேடுவதுமாக வாழ்வைக் கழிக்கிறார்கள். அந்தத் தேடுதலும் தகுந்த முடிவைத் தருவதில்லை. சிலர் தேடுதலுக்காகவே பிறந்தவர்கள் – அவர்களது இயல்பு தங்கள் இயல்பை சந்தேகிப்பது. அங்கிருந்து நகர்வதும் அலைவதும் மட்டுமே.

 

“ஹரிணி தான் உட்கார்ந்திருந்த சோபாவிலிருந்து எழுந்து, எலிஸபெத்தின் கைகளைப் பிடித்து மண்டியிட்டிருந்தாள். எலிஸபெத் சோபாவிலிருந்து இறங்கினார் அவள் முகத்தை தனது மார்பில் சேர்த்து அணைத்தார். வெதுப்பான ஹரிணியின் கண்ணீர் எலிஸபெத்தின் சன்னமான மேலாடையை நனைத்து மார்பைத் தொட்டது. அவள் கைகள் மேலும் இறுகின. இரு பெண்களின் விம்மலும் தேம்பலும் வெகுநேரம் அங்கே கேட்டது”

 

பல கதாபத்திரங்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் இந்த நாவலின் வெற்றி அவர்களுக்கிடையே இருக்கும் அக ஆழத்தை சரியான அளவு காட்டியதில் இருப்பதாகத் தோன்றியது. ஒருவிதத்தில் ஒருவரது செயல் மற்றொருவரின் தேவையை நிரப்புகிறது. அதன் மூலம் இருவரும் அகவிடுதலையில் அடுத்த கட்டத்தை அடைகிறார்கள். புது தளம் புது சிக்கல்கள். கதாபாத்திர வார்ப்பினால் மட்டுமே உருவான இணைப்பு மட்டுமல்ல, இந்த நாவலின் அடியாழத்தில் அதிகாரத்துக்கும், விடுதலைக்கும் உண்டான இழுபறி ஆட்டமும் ஒரு காரணம். சொல்லப்போனால், நாவலின் தரிசனம் இந்த இழுபறி ஆட்டத்தில் அமைந்திருக்கிறது.

 

இலங்கையில் போர் முடிந்து சீரமைப்பு நிலைமைத் தொடங்கியதில் பாதிக்கப்பட்ட பல அகதிகளில் நித்திலாவும் ஒருத்தி. போர் நின்றுவிட்டால் அகதியாக காலத்தைக் கழிப்பவர்கள் தங்களது சொந்த நாட்டுக்குத் திரும்பவேண்டும் என்பது அரசு விதி. றுகட்டமைக்கு எப்படி நடக்கிறது என்பதை அந்த விதி பார்ப்பதில்லை. நன்னடத்தை விதிகளால் அரசியல் அகதிகளுக்கு இடம் கொடுக்க இருக்கும் சுதந்திரம் அதைப் பறிக்கவும் அரசுக்கு வழிவகுக்கிறது. நித்திலாவின் சுதந்திரம் இந்த அதிகாரத்தின் முனையில் ஊசலாடுகிறது. ஆனால் அரசு குடியுரிமை சிக்கலை சரிசெய்தாலும் மத்யூஸ் மாமனின் தொந்திரவிலிருந்து அவளுக்கு விடுதலை கிடையாது. அதை வாகீசன் கையில் அவள் ஒப்படைத்தால், அவனும் ஒரு சூழ்நிலைக் கைதி என்பதை அறியாமலேயே. சுதந்திரம், சமத்துவக்கனவை கனவாகவே வைத்திருக்கும் பிரான்ஸில் சுதந்திரம் என்பது பண்டமாற்று முறையைப் போன்றது என்பதை நித்திலா, வாசீகன், ஹரிணி வாழ்க்கை நிரூபிக்கிறது என்றால் கன்னியாகுமரியிலிருந்து, பிராஹா வந்தாலும் ஆன்மசுதந்திரம் என்பது தேடிக்கொண்டே இருக்கும் நித்திய பயணம் மட்டுமே என்பதை சாமி காட்டுகிறார்.

 

இத்தனை உள்ளடுக்குகளைக் கொண்ட நாவலை நாகரத்தினம் கிருஷ்ணா தனது திறமையான புனைவு மொழி மூலம் குழந்தை விளையாட்டு போலாக்கிவிட்டார். வாசகனின் கவனத்தைத் தொடர்ந்து தக்கவைக்குவிதமான நடுவாந்திர மொழிப் பிரயோகம். நீண்ட வாக்கியங்களைத் தவிர்த்ததன் மூலம் ஒருவித அவசர கதியைப் புகுத்த முடிந்திருக்கிறது. அதே சமையத்தில் நித்திலாவின் கதையில் வரும் இலங்கைத் தமிழ் எவ்விதமான விலக்கத்தையும் கொடுக்காது இலங்கை அகதியின் வாழ்க்கையைத் தத்துரூபமாகக் காட்டுகிறது. பொதுவாக நான் பார்த்தவரை அது இருதலைக்கொல்லி வாழ்க்கை தான். சொந்த சமூகத்தின் விடுதலை தனக்கிடப்படும் மூக்கிணாங்கயிறு எனும் நிலைமை வேண்டுதலுக்கு எதுவுமில்லாத நிலைக்கு மக்களைத் தள்ளிவிடும். அந்த மனநிலையைக் காட்டும் நித்திலாவின் கதாபாத்திரம் மிகக்கச்சிதமானப் படைப்பு. அவளது குறிப்பு வரும்பகுதிகள் மட்டும் கதையாகச் சொல்லப்படாமல் அவள் எழுதிய குறிப்புகளாகவே பதியப்பட்டிருந்தால் நாவல் இன்னொரு ஆழத்தை சந்தித்திருக்கும். இது மட்டுமே எனக்கு சிறு குறையாகத் தெரிந்தது.

 

அகப்பயணத்தைப் போல புறப்பயணமும் நெடியது. கன்னியாக்குமாரி, புதுச்சேரி, பாரீஸ், ஸ்டிராஸ்பெர்க், பிராஹா என தங்கள் கவலைகளைச் சுமந்தபடி அவர்களது வாழ்வு ஓடிக்கொண்டேயிருக்கிறது. நாய்க்குட்டியாக மாறிவிடும் வாகீசனும் அவனது பிரெஞ்சு மனைவியும் கூட ஒருவிதத்தில் தங்கள் கஷ்டங்களிலிருந்து விடுதலை அடைந்துவிட்டார்கள் எனலாம். கதையின் புனைவு உத்தியாக மட்டும் நின்றிருந்தால் ஆழத்தைக் கூட்டியிருக்காது.  நாய்க்குட்டியாகப் பாவித்து வாகீசன் பேசுபவை திக்கற்றவனின் சுயபுலம்பலாகவே தோன்றுகிறது.

 

மீண்டும் ஒருமுறை டிரஃபால்கர் சதுக்கத்தில் நான் கழித்த அதிகாலைப் பொழுதை நினைத்துப்பார்க்கிறேன். தனித்துவிடப்பட்டது போல சோபைகூடிய வெளி. ஏதோ ஒருவிதத்தில் தேடுதலைத் தக்கவைத்துக்கொண்டிருப்பவர்கள் வந்துசெல்லும் crossroads ஆக நம் வாழ்க்கை மாறிவிட்டது. கூட்டுரோட்டு சந்திப்பு போல சிலர் சேர்கிறார்கள், சிலர் பிரிகிறார்கள். வாழ்வின் அபத்தத்தைப் புரிந்துகொள்ளமுடியாமல் தவிப்பவர்களுக்கு மத்தியில்  தங்கள் குழப்பங்களுக்கும் கவலைகளுக்கும் ஏதேனும் ஒருவிடிவு கிடைக்கும் எனும் எதிர்பார்ப்பில் இந்த crossroads வழியே ஓடிக்கொண்டே இருக்கின்றனர். வாழ்க்கை மீதான பிடிப்பு, இருத்தலின் தேவை என சமாதானப்பேச்சு எத்தனை சொன்னாலும் தேடுதல் எனும் தளத்தை வாழும் கலை என்பதாக எடுத்துக்கொள்வதில் தான் தீர்வு அமைந்திருக்கிறது. அக்கலையை மிக நேர்த்தியாகக் காட்டும் நாவலாக காஃப்காவின் நாய்க்குட்டி அமைந்திருக்கிறது. நீலக்கடல் முதல் நாகரத்தினம் கிருஷ்ணாவைத் தொடர்ந்து வருபவன் எனும் முறையில் அவரது அடுத்தகட்ட பயணத்துக்காக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

____________________________________________________________________

5.காஃப்காவின் நாய்க்குட்டி விமர்சனம் –

 -கலைச்செல்வி

கலைச்செல்வி

(தஞ்சைக்கூடலின் 29/6/19 அன்று பேசிய சிறப்புரையின் கட்டுரை வடிவம்.)

எழுத்தாளர் ஃபிரான்ஸ்காஃப்காவின் மீதான அபிமானம் சில “தற்செயல்களை“ நிகழ்த்தியதில் உருவான நாவல் இது என்ற அறிமுகத்தோடு நாவலுக்குள் நுழைவது எனக்கு சுவாரஸ்யமாகவே இருந்தது. கிட்டத்தட்ட முந்நுாறு பக்கங்கள் கொண்ட இந்நாவலில் மனிதர்கள். நாடுகள், சம்பவங்கள், சூழல்கள் எல்லாமே விறுவிறுப்பாக நகர்ந்துக் கொண்டேயிருக்கிறது. இதனை தேடல்கள் மீதான அணிவகுப்பு என்று சொல்வதை விட, தேடுதல்கள் மீதான பார்வை என சொல்லலாம்.

காய்தல்உவத்தலின்றி நிகழ்தருணங்களை கடந்து ஓரளவுக்கேனும் முழுமொத்த பார்வையோடு வாழ்வை அள்ளிக் கொண்டு விரிவாகும் இலக்கிய வகைமையை நாவல் என்று புரிந்துக் கொள்கிறேன். புதிதுபுதிதான வடிவ சாத்தியங்களை முயல்வதும் பிறிதொன்று அதை மிஞ்சுவதுமாக இருக்கும் இலக்கியச்சூழலில் நாவலை அதன் உள்ளடக்கம் சார்ந்து வரையறை செய்வதை தனிப்பட்ட வாசகரின் பொறுப்பாக கருதிக் கொள்ளலாம்.

இலங்கை முள்ளிவாய்க்காலில் போர் முடிந்த காலக்கட்டம். நித்திலா ராணுவத்தினரிடம் சரணடைந்து, பிறகு, முகாமிலிருந்து விடுதலை செய்யப்படுகிறாள். அவளின் தமக்கையும் கணவர் மத்யூஸும் ஃபிரான்சில் வசிக்கிறார்கள். அவர்களின் மூலம் அவளுக்கு புகைப்படமாக வாகீசன் அறிமுகம். தம்பதிகளின் அழைப்பின்பேரில் தமக்கையின் வீட்டிற்கு வந்து சேர்கிறாள் நித்திலா. அங்கு தமக்கைக்கும் அவள் கணவனுக்குமிடையே நடக்கும் சண்டை தன்னை குறித்துதான் என்பதை அறிகிறாள். ஆனால் எதிர்வினையாற்றவியலாத நிலை. வாகீசன் குறித்த நல்லுணர்வு அவளுக்குள் மலர்ந்திருக்க, தமக்கை வீட்டில் அதைபற்றிய பேச்சு எடுக்கப்படாதது அவளுக்கு உறுத்தலாக தோன்றுகிறது. அவனை தேடி பிராஹா வருகிறாள். அரசாங்க கெடுபிடிக்குள் சிக்கிக் கொள்கிறாள். போர் முடிந்தபிறகு அகதிகளாக அடைக்கலம் பெற்றவர்கள் சொந்தநாட்டுக்கு திரும்ப வேண்டும் என்ற முனையில் அவள் அரசாங்க காவலில் வைக்கப்படுகிறாள்.

அக்காவின் கணவன் மத்யூஸ்க்கு நித்திலாவை கட்டிக் கொள்ள விருப்பம். வாகீசனின் புகைப்படத்தை காட்டியே நித்திலாவை வரவழைக்கிறார். சாதி மதம் ஜோதிடம் சம்பிரதாயம் பிசகாது உற்றமும் சுற்றமும் சூழ நடைபெறும் திருமணங்கள் கூட தனிமனித நியாயம் என்ற ஒன்றில்லாதபட்சத்தில் ஏதோ ஓரிடத்தில் முறிந்துவிடுகிறது. ஆனால் இங்கு திருமணத்தை தவிர எல்லாமே அந்தரத்தில் தொங்குகிறது. சம்பாத்தியம் இல்லாத, நித்திலா என்றொரு தங்கையை தவிர வேறெந்த உறவும் இல்லாது, யார் காரணமாகயினும் குழந்தையும் பெற்றுத் தர வழியில்லாத பெண் இயல்பாகவே பலவீனமான சூழலுக்குள் வந்து விடுகிறாள். அந்தவகையில் மாத்யூஸ் அதிதீவிர வில்லனாகவெல்லாம் தோன்றவில்லை. ஏதோ ஒரு அடிப்படை நியாயம் அவருக்குள்ளிருக்கிறது. அது நாய்க்குட்டியாய் அவர் கால்களை கட்டிக் கொள்வதால்தான் எனக்கு ஒன்னட அக்கா மேல அத்தனை பாசம் என்று அப்போதைக்கப்போது தன்னை நிறுவிக் கொள்கிறார். இதை தமக்கையும் உணர்ந்திருந்ததனால்தான் எப்படியோ அவருடன் காலத்தை ஓட்டி விட முடியும் என்று நம்புகிறாள். அதனாலேயே அவரை அதிகம் பகைத்துக் கொள்வதில்லை. யாருக்கும் பிரச்சனையின்றி அறைக்குள் கரைந்து விட்டு, வெளியே இயல்பாகுவது வாழ்வதற்கான உத்தி. பார்க்கப்போனால் மத்யூஸை விட தமக்கையே கெட்டிக்காரி.

தமக்கைக்கும் அவள் கணவருக்குமான உறவை, சண்டை பிடித்துக் கொள்வது.. பிறகு தங்கச்சங்கிலி வாங்கி தருவது, மனைவிக்கு தெரிந்தும் தெரியாமலுமாக நித்திலாவுடன் வெளியே வருவது, திருமணம் குறித்து இரண்டு வருட ரகசிய டீல் போடுவது என மத்யூஸின் பாத்திரம் தெளிவாக நிறுவுகிறது.

ஐரோப்பிய நீதிமன்றங்கள் பின்பற்றும் நடைமுறைப்படி குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்படும் நித்திலாவின் பேச்சை மொழிபெயர்ப்பதற்காக வருபவள் ஹரிணி. இந்திய அப்பாவுக்கும் ஃபிரெஞ்ச் தாய்க்கும் பிறந்தவள். தன் பணியை தாண்டி நித்திலாவின்  மௌனமும், பேச விரும்பாத இறுக்கமும் அவளுக்கு உதவ வேண்டும் என்ற உணர்வை ஹரிணியிடம் உண்டாக்குகிறது. தாயின் மீது பந்தமற்று இருந்த அவள் நித்திலாவுக்காக தாயிடமே உதவிக் கோரும் நிலை வரும்போது, தாயை குறித்து கொண்டிருந்த இறுக்கங்களெல்லாம் கசிந்து, மனதளவில் நெகிழ்வது மகள் என்ற உணர்வில் கூட இருக்கலாம். மனதின் இயல்பை அதுவறியாமல் அறியும் தருணங்கள் அவை.

இலைகளுக்கும் பூங்கொத்துகளுக்கும் இடையில் சிதறிய கண்ணாடி துண்டுகளாய் வானம். கொத்துகொத்தாக பாற்கட்டி நிறத்திலிருக்கும் மொட்டுகள்மீது அலையும் வண்டுகள். ராபின் குருவிகள். ஹாத்தோர்ன் பூக்களின் மணத்தை  இருகை குவித்து முகத்தில் வழியவிட்டுக் கொள்வதில் பரவசப்படும் மனம் காற்றாய் மிதக்க, உடைகளை கழற்றி விட்டு சோபாவில் ஸ்பிரிங் போல குதுாகலித்து எழும் ரசனையானவளாக அறிமுகமான ஹரிணி, பின் இறுக்கமாக ஆகி விடுவது சற்று முரணாக தோன்றுகிறது.

நித்திலாவும் ஹரிணியும் பிரியும் தருணம் அழகானது. “ஊர்லேர்ந்த வந்த நேரம் வாகீசன் அவ்ளோ முக்கியமெண்ரு படலை. இப்ப அவருக்காகதான் இங்க வந்தனானென்று தெரியுது. ஈழம் கிடைச்சிடும்னு நாங்கள் நம்புவதும் அந்த அடிப்படையில்தான். மத்தவங்களுக்குதான் விளங்கிக் கொள்ள கஷ்டமாயிருக்கும்..” ஒரு முழுநீள கட்டுரை சொல்ல வேண்டியதை நாலைந்து வரிகளுக்குள் இலக்கியம் சொல்லி விடுகிறது.

ஆனால் நித்திலா உடைந்து அழும்போது ஹரிணி சொல்லும் சமாதானம் மிக மிக சம்பிரதாயமான வார்த்தைகளாலானது. “அசடு.. அசடு.. இதென்ன குழந்தை மாதிரி அழுதுக்கிட்டு.. எல்லாரும் ஒன்ன பாக்கிறாங்க.. நீ தைரியமான பொண்ணுன்னு எனக்கு நல்லா தெரியும்..“ என்பது போல நீள்கின்றன. அலுப்பே தெரியாமல் நீளும் பக்கங்களில் இது போன்ற சம்பிரதாயங்கள் படிப்பதற்கு தடையூட்டுபவை.

வாகீசன் புதுச்சேரியை சேர்ந்தவன். இளம் எழுத்தாளன். சமையல்கலையியில் கற்றவன். எப்படியெல்லாமோ கடன்பட்டு பிரான்சுக்கு வருகிறான். நிரந்தர குடியுரிமை இல்லாததால் ஏற்படும் இன்னல்களின் காரணமாக வேலையை விட்டுவிடவும் முடியாது. பிரெஞ்ச் குடியுரிமைக்காக அத்ரியானாவை திருமணம் செய்கிறான். லயிப்பே இல்லாத திருமணம். “இந்திய திருமணத்தின் மீதான பிடிப்பு“ என்ற அத்ரியானாவின் மேம்போக்கான எண்ணம், லேசான காற்றுக்கே ஆடிப்போய் அடிமண் தெரிய ஆரம்பித்து விடுகிறது. வாகீசனின் பயணம் நித்திலாவில் இருக்கலாம். அல்லது பொதுப்பணித்துறை ஒப்பந்தக்காரரான அவர் மாமாவின் சொத்தின் மீதும் அதற்கு கொசுறாக கிடைக்கும் அவர் மகளின் மீதும் இருக்கலாம். ஆனால் அவன் அசாதாரணனன் அல்ல. குடியுரிமைக்காக மணந்துக் கொள்ளும் அத்ரியானாவிடம் நாய்க்குட்டியாய் பம்ம வேண்டியிருக்கிறது என்பது மனதளவில் இடைஞ்சல். சராசரி கணவனாக மாற முயல்கிறான். அவனும் அவளும் ஒருவருக்கொருவர் நாய்க்குட்டிகளாக்கிக் கொண்டாலும், இறுதியில் பாலனிடம் மிஞ்சுவது அவனின் குற்றவுணர்வு என்னும் நாய்க்குட்டியே.

சாமி வயதுகாலத்தில் பெண்ணொருத்தியின் ஒப்புக்குச்சப்பாணி கணவனிடமிருந்து அவனது இடத்தை எடுத்துக் கொள்கிறவர். காலங்கள் நகர்ந்தபிறகு அந்த பெண்ணின் வாரிசுகளால் வெளியேற்றப்படுகிறார். தற்கொலைக்கு துணியாமையால் மனம் சன்னியாசத்தை நாடுகிறது என்ற சுயக்கணிப்போடு, ரயிலில் தனக்கு தோழனாக வாய்த்த ஐரோப்பியரோடு ரிஷிகேஷ் வருகிறார். தன்னை நோக்கி அவர் எழுப்பிக் கொள்ளும் கேள்விகளின் தொகுப்பாக அந்த நாய்க்குட்டி அவரை தொடர்கிறது. ஐரோப்பியரின் இறப்புக்கு பின் அந்த ஆசிரமத்தின் பிராஹாவில் இருக்கும் கிளைக்கு வருகிறார். ரிஷிகேஷ் அத்தியாயங்களில் இமையத்தையோ கங்கையோ பெயரளவுக்கு மட்டுமே சித்தரித்து விட்டு நகர்ந்து விடுவது பெருத்த ஆச்சர்யம்தான். வெல்ட்டா நதியின் அளவுக்கு கூட கங்கை வர்ணிக்கப்படவில்லை.

இலங்கை, புதுச்சேரி, கன்னியாக்குமரி, ரிஷிகேஷ், பிராஹா, ஸ்ட்ராஸ்பூர் என உலகமயமாக்கலின் படிமம் போல கலவையான இடங்கள், கலவையான மாந்தர்கள். அவர்களை பிணைக்கும்மொழி ஏகதேசம் தமிழ் என்றாலும் அந்தந்த இடத்திற்கேற்ப கூறுமொழியை அமைந்துள்ளது நிகழ்வுகள் எங்கு நிகழ்கின்றனவோ அதற்கேற்ப நாவலை இலகுவாக வளைக்கிறது. போலவே, காட்சிவிவேரணைகளும்.

வெல்ட்டா நதியின் இருகரைகளைகளையும் இழுத்து பிடித்திருப்பது போல சார்லஸ் பாலம். அதில் இருள் மெல்ல நிரம்பிக் காண்டிருக்கிறது. அவற்றின் மூன்றில் ஒரு பங்கு ஏற்கனவே நீரில் கரைந்திருந்தது. இருளோடு கலந்து சிலுசிலுவென்று காற்று. பாலத்தின் நுழைவாயிலில் ஒரு பெரிய கோபுரம். கோபுரத்தை கடந்ததுமே இடதுபுறம் உணவு விடுதிகள், நீரில் கால் நனைப்பது போல அமர்ந்துக் கொண்டு ஜோடிஜோடியாக உணவருந்து மனிதர்கள் என்று கதை முழுக்க படிமமாகவே வரும் வெலட்டா நதியையும் சார்லஸ் பாலத்தையும் விவரிக்கிறார் ஆசிரியர்.

நாவலின் காலம் மொத்தமாக நான்காண்டுகள். 2013 ஏப்ரல் 6ல் தொடங்கி 47 அத்தியாயங்களை கடந்து அதேநாளிலேயே முடிகிறது. முன்பின்னாக செல்வதில் பிரச்சனை ஏதுமில்லை. காட்சி விவரணைகளும் துடிப்பான வார்த்தைகளும் நாவலை அது தொடங்கியதுமே தொடர வைத்து விடுகிறது. நாள் கிழமைகளோடு தொடங்கும் அத்தியாயங்கள் ஏதோ ஒரு நியதியில் தரப்பட்டிருந்தால் டைரிக்குறிப்பு போல தோன்றியிருக்கும். நாடு, நகரம் எல்லாவற்றையும் சேர்த்தே கொடுத்திருப்பதை சற்று கவனித்து கடக்கவில்லையெனில், மீண்டும் ஒருமுறை வர நேரிடும். அனுபவங்கள் நினைவுகளாகி இயல்பான மொழிக்குள் வந்து விழுகிறது. நிகழ்வுகள் எவ்வித திட்டமிடலுமின்றி நிகழ்வுகளின் அடுக்குகளாக நகரும் இந்நாவலில் கதையென்று ஒன்றை குறிப்பிட முடியாது.  கூறுமொழியின் நுட்பம் ஆர்வமாக பின்தொடர வைக்கிறது..

கட்டுக்கடங்காமல் திமிறிக்கொண்டோடும்போக்கில் நாமும் விரையும்போது வார்த்தை சித்தரிப்புகள் நின்று ரசிக்க வைக்கின்றன. நித்திலாவுக்கு அசோகவனத்தில் இருப்பதுபோலிருக்கிறது. இவளுடைய அசோகவனம் பாரீசுக்கருகே உள்ளது. இவள் இலங்கையிலிருந்து வந்திருக்கிறாள். இது இதிகாச சீதைக்கும் இவளுக்குமான முரண். இராவணனுக்கு நாற்பத்தைந்து வயது. தமக்கையின் கணவர் என்பதால் அத்தான் என்று அழைக்க வேண்டியிருக்கிறது. இவளுக்காக வில்லை வளைக்கவோ, நவீன இராவணனுடன் யுத்தம் செய்யவோ யாருமில்லை. இதுவரை இராமனுக்கு வாழ்க்கைப்படாததால் இராவணனை குறைசொல்லவும் யோசனையாக இருக்கிறது.

கிடைத்த நாடுகளில் அடைக்கலம் புகும் அவலநிலையில் “ஊர் உலகத்தில என்ன நெனப்பாங்க..“ ஊர் சனங்களுக்கு பதில் சொல்ல முடியில..“ இதுபோன்ற இயல்பு வாக்கியங்கள் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறதா என்பது சற்று நெருடலாக தோன்றுகிறது.

நாய்க்குட்டியை வெவ்வேறாக கருதிக்கொள்ளலாம். நித்திலாவுக்கு அது தொலைந்து போன வாழ்க்கை. பாலனுக்கு அது குற்றவுணர்வு. அத்ரியானாவை உபயோகித்து கொள்வதனால், நித்திலாவை உபயோகித்துக் கொள்ளாததால், பொதுப்பணித்துறை ஒப்பந்தக்காரரின் சொத்துகளை அனுபவிக்காததனால்  ஏற்படும் குற்றவுணர்வு, தேடல்கள் ரிஷிகேஷிலோ மற்றெதிலுமோ விட அவர் வாழ்ந்திருந்த வாழ்க்கையின் நெருடல்களின் குவியல்தான் சாமியின் நாய்க்குட்டி. அதனால்தான் அவருக்கு யார் மீதும் விமர்சனமில்லை.

ஒரு புழுவின் முன்னேறும்பாதையை மறிக்கும்போது அது உடனே குச்சிக்கப்பால் மற்றொரு வழியை ஏற்படுத்திக் கொள்கிறது. அங்கும் தடை செய்துவிடும்போது வேறுவேறு வழிகளில் முனைகிறது. உடலை இருகூறாக மடித்தும் கூட முற்றிலும் புதிதான வழியை முயல்கிறது. இந்நாவலின் மாந்தர்களும் அத்தகைய வழிகளைதான் தேடுகிறார்கள். எத்தனை வழிகள் அடைப்பட்டாலும் ஏதொன்றிலாவது அகப்பட்டுவிடாதா என்ற அவாவோடு. அவர்களுக்கான ஆசை என்பது வாழ்வின் இலட்சியம் என்பதாகவெல்லாம் கிடையாது. எளிய ஆசைகள்தான். ஆனால் அவற்றை பின்தொடரும் சாத்தியங்கள் கடினப்படும்போது ஆசைகளின் மீதான ஆசை குறைந்து நிறைவேற்றும் எண்ணம் மட்டுமே பிரதானப்படுகிறது. ஆகவே அடைந்தபொழுதுகள் அதற்கான ஆனந்தத்தை பெற்றுக் கொள்ள இயலாது போகிறது.


 

6. காஃப்காவின் நாய்க்குட்டி வாசிப்பனுபவம்

                    – கே. ஜே. அசோக்குமார்

1

அசோக்

பெருநகரத்தில் தனித்துவிடப்படவனின் சஞ்சலங்கள் போன்ற தீராத மனவாதை பிறிதொன்றில்லை. ஓய்வில்லாத மக்கள் கூட்டத்தின் மத்தியில் புலம்பெயர்ந்து கள்ளவழிகளில் ஐரோப்பிய நகரங்களில் வாழும் மனிதர்கள் அடையும் பெரும் கலக்கங்கள் விவரிக்கவியலாத தனிமனித கலக்கங்கள். மற்ற நபர்களுடன் பகிர்ந்துக் கொள்ளவே முடியாத அனுபங்களை என்ன செய்ய முடியும். அவைகளை எங்கே கொண்டு கொட்ட முடியும். வாழ்நாள் முழுவதும் இருக்கும் இந்த துக்கம், மனிதர்கள் தங்களின் அடையாளமாகவே ஆகிப்போனததன் அடையாளமற்ற வாழ்க்கையை என்ன செய்வது.

வெவ்வேறு அலைக்கழிப்பில் வாழ்க்கின்ற மனிதர்களும் அவர்களின் மனங்களும் அடைகின்ற துயரங்களை பேசுபொருளாக கொண்டது காஃப்காவின் நாய்க்குட்டி நாவல். இடம்பெயர்வின் அலைகழிப்பை துல்லியத்துடன் பதிவு செய்ய விழைகிறது. நிலத்தை விட்டு பணத்திற்காக, வேலைக்காக, ஏமாறிய அவமானத்திற்காக, எதிரிகளின் தாக்குதலின் தப்பித்தலுக்காக, சொந்தங்களை பிரிந்து, இழந்த சோகத்திற்காக என்று எத்தனை வகைகள் உண்டோ அத்தனை வகைகளிலும் இன்று மனிதர்கள் இடம்பெயர்கிறார்கள். வந்த இடத்தில் நிலைத்திருக்க, புதிய உறவுகளை தேடிக்கொள்ள, தக்கவைத்துக் கொள்ள அத்தனை எத்தனங்களையும் செய்ய வேண்டியிருக்கிறது. முந்தைய காலங்களில் அது உணவிற்காக மட்டுமே இருந்தது. தன் வாழ்வின் பெரும்பகுதியை இதற்கே விட்டுகொடுத்து வாழ்த்து மறையும் ஒரு சாராருக்கு தெரியாதன சில இந்த புவியில் உண்டென்றால் அது அன்பும், பிறரின் தம்மீதான சந்தேகமின்மையும்தான் என நினைக்கிறேன்.

காஃப்காவின் நாய்க்குட்டி இந்த மனிதர்களைப் பற்றி எளிய கோட்டோவியம் மட்டுமே அளிக்கிறது. பாலா, நித்திலா, நித்திலாவின் தமக்கை, என்று மனிதர்கள் வளமையான இடம் தேடி இடம்பெயர்கிறார்கள். ஆனால் கூடடைந்த குருவிகளாக என்றும் இரைத்தேடி செல்லாத வாழ்க்கை அவர்களுக்கு அமைகிறது.

உண்மையில் நாவல் கலைந்து விரிந்த பார்வையும், கலைத்து போட்ட சிதறலான வாசிப்பு அனுபவத்தையும் அளிக்கும் பின்நவீனத்துவ பாணி கொண்டது. நாவல் நமக்களிக்கு அனுபவம் பாதுகாப்பற்ற பகுதியில் (unsafer zone) வாழும் மனிதர்களின் உளசித்தரிப்பை மட்டும் தான். பாதுகாப்பற்ற பகுதி என்பது உயிருக்கு உத்திரவாதமற்ற வேலையை செய்பவர்கள் அல்லது சேரியில் சாக்கடையின் அருகில் வாழ்பவர்கள் என்கிற அர்த்தமல்ல. மற்றவரது கண்காணிப்பில், கொடிய அதிகாரத்தின் பிடியில், எந்நேரமும் இருக்கும் நிலையிலிருந்து முற்றிலும் எதிரான தாக சட்டத்திற்குபுறம்பானதாக மாறிவிடும் சூழலில் வாழும் வாழ்க்கை அது. மிக கவனமாக கையாளவேண்டிய புனைவுலகத்தை சரியாக செய்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.

சுவாரஸ்ய பிண்ணனியில் நாவலை அமைக்க வேண்டும் உந்துதல் எதுவும் ஆசிரியருக்கு இல்லை. நேரடியாக தன்னை ஒப்புக்கொடுத்து அதன் போக்கில் நாவலை வளர செய்திருக்கிறார். நாவலின் போக்குகளில் சில நுண்ணிய தருணங்களை தேர்ந்த ஆசிரியராக அழகாக பிடித்திருக்கிறார். வாசீகனை சந்தித்து வந்த நாளில் தமக்கையின் கணவன் கோபித்து அவளை அவமானபடுத்தியதும், கிளம்பி நேராக சென்று வாகீசனை சந்தித்ததும் அவனை கட்டிப்பிடித்து அழுவது ஒரு முக்கிய தருணம். ஒரு பெண்ணின் உண்மையான மனஉந்துதல் அதுவாகத்தான் இருக்கும். அதேபோல நித்திலா இந்தியா வழியாக பிரான்ஸ் செல்லும் காட்சிகளை நுல்லியத்துடன் விவரிக்க அவரால் முடிந்திருக்கிறது. சாமியின் பாத்திரம் இந்த நாவலில் மிக முக்கியமானது. சாமியின் பாத்திரபடைப்பு ஒருவகையில் இந்த நாவலுக்கு தேவையற்றதாக தோன்றினாலும், அவரது இழப்பும் இலக்கற்ற பயணமும் இடம்பெயர்வின் கொடூர தருணங்கள்.

2

நாகரத்தினம் கிருஷ்ணா தொடர்ச்சியாக நாவல்களை எழுதிக் கொண்டிருக்கிறார். நீலக்கடல், மாத்தாஹரி, கிருஷ்ணப்ப கெளமுதி நாயக்கர், ரணகளம், இறந்தகாலம் போன்ற நாவல்களை எழுதியிருக்கிறார். நேரடி வரலாற்று பின்புலம்கொண்ட அல்லது வரலாறு பிண்ணனியில் எழுதிய நாவல்களில் அவருக்கு ஆர்வம் என தெரிகிறது.

கடின சொற்சேர்கைகளை கொண்ட வாக்கியங்களை அமைப்பதில் அதிக கவனம் கொள்கிறார். ஆரம்ப பகுதியில் அவ்வாறு செய்தாலும் நாவலின் பிற்பகுதியில் மிக இயல்பாக தேவைக்கேற்ப மட்டுமே வார்த்தைகள் உள்ளன. வெவ்வேறு வரிசையில் இருக்கும் அத்தியாயத்தின் ஆரம்பத்தில் இடம், ஆண்டு, கிழமை, நாள் போன்ற குறிப்புகளுடன் ஆரம்பிக்கிறது. இதைப் பின்தொடர்ந்தால் நாவலின் முழுமையான நீளத்தை கண்டடையலாம்.

இலக்கியம் என்பது நிகர்வாழ்க்கையின் அனுபவத்தை அளிப்பது. எவ்வளவு தூரம் வாசகனுக்கு நெருக்கமாக ஒரு பிரதியால் சொல்ல முடிகிறது என்பது புனைவினுடைய வெற்றியாக கருதப்படுகிறது. காஃப்காவின் நாய்க்குட்டி அப்படியான ஒரு புனைவு.

எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணாவிற்கு முன்னோடியாக யாரை குறிப்பிடமுடியும்? அவர் பின்பற்ற விரும்பும் ஒரு எழுத்தாள வரிசையை கண்டுபிடிப்பது சிரமம் என்றே நினைக்கிறேன். அவர் தொடர்ச்சியாக வெவ்வேறு புனைவுகளின் வழியாக தன்னை மறுஆக்கம் செய்து கொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது. பிரன்ச் காப்கா, ஆல்பர்ட் காம்யூ போன்றவர்கள் அவரது மிக நெருங்கிய ஆதர்சயங்கள் என்றாலும் அவரின் பிரஞ்சு இலக்கிய ஆர்வங்கள் அவரின் எழுத்துமுறைமைகளை மாற்றியமைத்திருக்கின்றன என்றே நினைக்கிறேன். அத்தோடு புனைவுகளை ஒரு வரலாற்று பிண்ணனியில் வைத்து எழுதும் முறைகளில் அவருக்கிருக்கும் ஆர்வம் என்பது தொடர்ச்சியாக புனைவின் மீதான காதலை தக்கவைத்துக் கொள்ளும் முயற்சிதான்.

ஆசிரியரது கதைப்பின்புலம் யதார்த்தமானது தான் என்றாலும் அவர் தொடர்ந்து பின் நவீனத்துவ பாணியை தன் கதையுலகில் இணைத்துக் கொள்ளவேண்டும் என்று பிரியப்படுகிறார். இந்நாவலிலும் காஃப்காவின் நாய்க்குட்டியாக மாறும் நாயகனது மனைவியும், பின் நாயகனும் நாயாக மாறுவது குறியீட்டு அடிப்படையில் தங்களை குறைத்துக் கொள்வது என்று வாசகனால் பொருள் கொள்ளவேண்டியிருக்கிறது.

காஃப்கா பிறந்த ஜெர்மனி பகுதியிருலிருந்து கதை தொடங்குவது ஒரு நல்ல அறிகுறி. வாசகனை பலவகையில் ஊகிக்க வைக்கிறது. பாலா (வாகீசன்) வாழ்வில் தன்னை தக்க வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், நித்திலா தன்னை தன் காதலை நிலைநிறுத்தி முயற்சிப்பதில் இருக்கும் எத்தனிப்பும், பல தவறுகள் செய்த சாமி தொடர்ந்து சிக்கலிலிருந்து தன்னை தேடும் பயணத்திலும், மத்யூஸ், அவரது மனைவி இருவரும் தங்கள் வாழ்வில் புதிய மலர்ச்சியை எப்படியேனும் கொண்டுவரும் முயற்சியும் எல்லாமும் சேர்ந்து காஃப்கா தன்னை கரப்பான்பூச்சியாக உருமாறிக் கொள்வதன் கற்பனைக்கு சமமானதுதான். அதை ஆசிரியர் பல்வேறு வழிகளில் வாசகனுக்கு அளிக்கும் முய்ற்சிதான் காஃப்காவின் நாய்க்குட்டி.

சுவாரஸ்யமான வாசிப்பனுபவத்தை அளித்த நாகரத்திரன் கிருஷ்ணா அவர்களுக்கு வாழ்த்துகள்.

(தஞ்சைக் கூடல் 29/6/19 அன்றைய‌ கூட்டத்தில் விவாதித்தின் கட்டுரை வடிவம்.)

 

___________________________________________________________

7.காஃப்காவின் நாய்க்குட்டி விமர்சனம் –          

                          –      இரா.கதிரேசன்

சுந்தரேசன்

தஞ்சை இலக்கிய கூடல் சார்பாக நடந்த கூட்டத்தில் எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணாவின் காஃப்காவின் நாய்க்குட்டி பேசுவதற்கு எடுத்துக் கொண்டார்கள்.

எதார்த்த வாத நாவலின் சாயலில் அமைந்துள்ள பின் நவீனத்துவ நாவல் என்று இதை கூறலாம். பின் நவினத்துவ நாவல்களின் பண்புக்கூறான carnival தன்மை இந்நாவலில் இருக்கிறது. நிலபிரபுத்துவ சமூகம் மறைந்து தொழில் மைய சமூகம் உருவாகும் காலகட்டத்தில்தான் ஒரு இனக்குழுவாக இருந்த மனிதன் தன்னை தனிமனிதனாக உணருகிறான். ஆகவே இலக்கியத்திலும் அதுவரை இருந்த ஒட்டு மொத்த சமுகத்தை எழுதும் எழுத்து முறை மாறி தனி மனிதனின் புற அக உலக நெருக்கடிகளை, கொந்தளிப்புகளை பேசக்கூடிய படைப்புகள் உருவாகின.

தாஸ்தாய்வொஸ்கியின் நிலவரைக்குறிப்புகள் இந்த வகையில் முன்னோடியான படைப்பு. என்றாலும் காப்கா இந்த வகை இலக்கியத்தின் ஒரு உச்சம் என்பது விமர்சகர்களின் கருத்து. தமிழில் இவ்வகை எழுத்தின் முன்னோடிகளாக நம்முன் இருப்பவர்கள் அசோகமித்ரன். சுந்தராமசாமி. ஜி.நாகராஜன் போன்றோர். சுந்தரராமசாமியின் ஜே.ஜே சில குறிப்புகள் தமிழில் எழுதப்பட்ட முதல் NON LINEAR நாவல் எனச்சொல்லலாம்.

காப்காதன்மை கொண்ட எழுத்து. காப்காயிசம். என்று ஆங்கில அகராதியில் இடம் பெரும் அலவிற்கு காப்கா நவினத்துவவாதிகளை பாதித்திருக்கிறார் எனவே .ஒரு நவீன வாழ்க்கையில் தனிமனிதர்களின் பிரச்சனையை ஒரு பின் நவினத்துவ பாணியில் எழுதியிருக்கிறார்.

இக்கதையில் வரும் இரண்டு ஆண்கள் வாகீசன் மற்றும் சாமி இருவருமே எழுத்தாளரின் இரு மனங்ககள் தான் . வாகீசன் எதார்த்தவாதி தன்னை வாழும் சூழலுக்கு ஏற்றவாறு தன்னை பிணைத்துக் கொள்பவன் தனது அன்றாடத்தை சிக்கலில்லாமல் எதிர்கொள்ள நினைப்பவன். சாமி தன்னை வஞ்சித்தவர்களிடம் இருந்து விலகி தனியே கால் போன போக்கில் போகிறார் கன்யாகுமாரியில் ரயிலில் சந்திக்கும் ஒருவருடன் ரிசிகேஸ் பயணிக்கிரார். அங்க்கிருந்து பிரஹா.வாகிசனும் சாமியும் பிராஹாவில் ஒரு ஆற்றில் சந்தித்துக் கொள்கின்றனர். ஆனால் இருவரும் ஒருவர் மற்றொருவருடன் பேசிக்கொள்வதில்லை. பிரஹா காப்கா பிறந்த இடம்.

வாழ்வதற்கு போதுமான பிடி கிடைகாத இளமனம் என்று வாகிசனையும் வழ்வின் பிடி அறுந்துபோன முதுமையின் மனம் என சாமியையும் சொல்லாம். ஒருவர் எதார்த்த வாழ்க்கையில் சந்தர்பவாதியாக மாறிக்கொள்கிறார் மற்றொருவர் ஆன்மீகம் நோக்கி திரும்பி தனக்கான வாழ்வை கண்டடைகிறார்இருவரும் காப்காவின் பிரந்த ஊரில் அவர் வீட்டின் அருகில் இருக்கும் ஒரு நதியில் சந்தித்துக் கொள்கின்றனர். என்பது இம்முரண்பாட்டைச் சுட்டவே ஆசிரியர் இருவரையும் ஒரு புள்ளியில் நிறுத்துகிறாரா?

இரண்டு வகையான நவீனத்துவ மனிதர்களின் வாழ்க்கைச் சிக்கல்கள் அதனை அவர்கள் எதிகொள்ளும் வாழ்க்கை என இந்நாவலை சுருக்கிக் புரிந்து கொள்கிறேன்.

கதையில் நித்திலாவிற்கு பிறந்த குழந்தை யாருடையது என்பதை ஆசிரியர் மர்மமாக விட்டுச் செல்கிறார். அது மேத்யூஸ் அல்லது வாகிசனுடைய குழந்தையாக இருக்கவே வாய்ப்பு நாவலில் வாகீசன் எந்த இடத்திலும் தனக்கொரு குழந்தை இருப்பதோ அதைப்பற்றிய நினைவுகளோ அவன் மனதில் இல்லை. குழந்தை மேத்யூசுனுடையதாக இருந்தால் அதனை அவளது அக்கா அனுமதித்தாலா அல்லது அவளும் நித்திலாவை தன் கணவன் மணம் முடிக்க உதவிசெய்தாளா?

நாவலில் நித்திலாவின் அக்கா மாமா இருவருக்கும் சம்பாசனைகள் முழுவதும் நித்திலா வீட்டில் இருக்கும்போது தான் நடை பெறுகிறது அது ஏன் அவளை தனது கணவனை திருமணம் செய்து வைக்க அவளின் அக்காவும் மேத்யூசும் சேர்ந்து செய்யும் நாடகமாக இருக்கக் கூடது? அப்படியென்றால் அவளின் அக்கா கதாபாத்திரத்தின் குணம் அங்கு மாறுகிறது. அந்நிய மண்ணில் குழந்தையில்லாமள் இருப்பவள் தனக்கு மாற்றாக வேறொருத்தி வருவதை விரும்பாமல் தன் நலன் கருதி அவர்கள் இருவருக்குமான உறவை அக்கா அனுமதிதிருக்கலாம்

குழந்தை வாகிசனுடையதாக இருந்தால். நாவல் இறுதி பகுதியில் அத்ரியான ஒரு நாயாக மாறி வாகிசனை இம்சிக்கிறாள். இதற்கு காரணம் நித்திலவோடு உறவு கொண்டுவிட்டு. குழந்தையும் கொடுத்துவிட்டு அவளை திருணம் செய்யாமல் போன குற்ற உணர்ச்சி அவனை நாய் உருவத்தில் இம்சிக்கிறதா என்பது ஆசிரியர் வாசகனின் ஊகத்துக்கு விட்டு விடுகிறார்

மேலும் கதையில் ஒரு நாய்குட்டி ஒன்று தொடர்ந்து வருகிறது. முதலில் அத்ரியானா நாய்குட்டியாக மாறுவது. பாலா எழுதும் சிறுகதையில் அண்டை வீட்டுப் பெண் வளர்க்கும் நாய்குட்டி. சாமியை விடாமல் பின் தொடர்ந்து வரும் நாய்குட்டி . இருதியில் அத்ரியானாவுக்கும் வாகீசனுக்கும் நடக்கும் நாய்கள் பற்றிய சம்பாசனைகள் என நாய்கள் ஒரு குறியீடாக நாவல் முழுவதும் வந்தவண்ணம்முள்ளன.

காப்கா தனது படைப்புக்களில் தொடர்ந்து ஒரு உயிரினத்தை அல்லது கதாபத்திரத்தை குறியீடாகச் சொல்லி அதனை மையாமாக உருவகப்படுத்தி கதைசொல்வதை பார்க்கலாம் (கரபான் பூச்சி – உருமாறம். பார் ஊஞ்சல் விளையாட்டுக் கலைஞன், பட்டினிக் கலைஞன் சிறுக்தைகள்) ஆசிரியரும் அவ்வாறு நாய்குட்டியியை ஒரு குறியீடாக உருவகித்திருக்காலம். தனி மனிதனினை துரத்தும் அகச்சிக்கலின் உருவகம் அந்த நாய் குட்டி என்று நான் புரிந்த்துகொண்டிருக்கிறேன் .

கே.ஜே.அசோக்குமார் இதனை இடம்பெயர்ந்தவர்களின் இன்னல்களை பேசும் நாவல் என்றார். அந்த கருத்தில் எனக்கு உடன்பாடு ஏற்படவில்லை. இன்றைய உலகமயமாக்ச் சூழலில் இடம் பெயர்வு என்பது அவசியாமானதாகவும் எளிதானதாகவும் இருக்கிறது. மேலும் அவர்கள் பிழைக்க வழியில்லாமல் புலம் பெயரவில்லை தன் மேலான தேவை வசதி வாய்ப்புகளுக்காவே இடம் பெயர்கின்றனர். (நித்திலா தவிர)

இந்நாவல் வாசிப்பனுபவம் மற்ற நவல்களிலிருந்து வேறுபடுவது நாவலின் வாசிப்பு முறை ஒரு முக்கிய காரணம். எதார்த்தவாத இயல்புவாத நாவல்களை பத்தியாகவோ ஒவ்வொரு அத்யாயமாகவோ கூட நிறுத்தி வாசிக்க முடியும் ஆனால் பின் நவினத்துவ நாவல்கள் பெரும்பாலும் ஒரே மூச்சில் படிக்க வேண்டியவை. நேரமின்மையால் அத்யாயம் அத்யாயமாக படித்தபோது நாவலில் தேய்வழக்குகள், தேவையில்லாத விவரிப்புகள் இருப்பது போல் தோன்றியது, ஆனால் நவலின் பின் பகுதியை ஒரே மூச்சில் படித்த போது நாவலின் வாசிப்பு முறை பிடிபட்டது. இதற்கு முன் ZERO DEGREE ஜே ஜே சிலகுறிப்புகள், ஒளிர் நிழல் போன்ற நாவல்களை வாசித்த போது இது போன்ற வாசிப்பு குழப்பம் அடைந்திருக்கிறேன்.

——————————————————————————