பேசாதிரு மனமே! – (தொகுப்பு -1970)

1. பேசாதிரு மனமே!

Oic1

இரத்தத்தின் இரத்தங்களும்

இரசவாத நடனமிட

கச்சைகள் கட்டிடுவர்

கலங்காதிரு மனமே !

 

காவிக்குப் பல்லிளித்து

கருத்துக்கு முகம் சுளிக்கும்

பாவிகள் சாதகத்தை

படியாதிரு மனமே !

 

உள்ளத்தில் சிறுமைகளை

உரமிட்டு வளர்த்தவர்கள்

கள்ளத்தால் கதையளப்பர்

கலங்காதிரு மனமே !

 

நட்பென்று வந்திடுவர்

நலங்கெட பொய்யுரைப்பர்

விலங்கினும் கீழினங்கள்

விலைபோகாதிரு மனமே !

 

பிட்டுக்கு மண்சுமந்து

பிரம்படி பட்ட ஈசன்

கட்டைக்கும் நாள் குறிப்பர்

கலங்காதிரு மனமே !

 

எதிர்வீட்டுத் தமிழனை

எட்டி உதைத்து விட்டுப்

பிறவித் தமிழுக்கென்பர்

பேசாதிரு மனமே!

3

 

 

2 உணர்ந்ததினால் கேட்கின்றேன்!

4

வானொப்ப கொள்கை தந்த காந்தி மண்ணில்

வாரிசுகள் இனபேதம் காணலுற்றார்

தேனொப்ப இலக்கியங்கள் மலர்ந்த நாட்டில்

தினந்தோறும் உயிர்ப்பலிகள் செய்திகேட்டேன் !

 

சித்தர்களும் ஞானிகளும் வாழ்ந்த நாட்டில்

சிறுமைகளும் பொய்மைகளும் முழங்கக்காண

வித்தகர்கள் வேடிக்கை பார்க்கலுற்றார் நேர்ந்த

விதியென்று சேர்ந்திங்கு ஒப்பாரி வைப்பார்!

 

உலக்கத்தில் உயிர்களுறும் இடையூரெல்லாம்

விலகவே குரல்கொடுத்த வேந்தர் நாட்டில்

கலகமதைத் தழுவியிங்கே வாழுகின்றார்

கைவண்ணம் காட்டுகின்றார் பிறர் உயிர்பறிக்க !

 

கூழில்லை சோறில்லை குரல்கொடுத்து

கூப்பாடு போட்டுமிங்கும் மாற்றமில்லை

குப்பனுக்கும் சுப்பனுக்கும் மதமாவேண்டும்

கூன் நிமிர்ந்து எழுந்துநிற்க மூச்சு வேண்டும் !

 

3

 

3.காதல்கள்

erotic-art-drawings-15f-gordon-punt

எப்போதும் எனக்குள்ளே

ஏதேனும் ஒரு காதல்

தப்பாமல் பிறப்பதினால்

தயங்காமல் எழுதுகிறேன்

 

பருவத்தின் சாரலிலே

பரிதவித்த நாட்கள் முதல்

சருமத்தின் தேமலென

சருகான காதல்கள்

 

பார்த்த சினிமாவும்

படித்தறிந்த சஞ்சிகையும்

போதித்த தெல்லாமே

பொய்க்கதை காதல்கள்

 

பள்ளிநட்களிலே

பக்கத்தில் பெண்ணிருந்தால்

படபடத்து உடல்வேர்த்து

பயமுறுத்தும் காதல்கள்

 

கல்லூரி நுழைந்தவுடன்

காலரைத் தூக்கிவிட்டு

கன்னியரைச் சுற்றிவந்து

கனாக் கண்ட காதல்கள்

 

கிராமத்துக் குளக்கரையில்

கிளைதாழ்ந்த வேப்ப மரம்

தணியாத மொழிக்காதல்

தமிழ்க் காதல் பிறந்தஇடம்

 

அஞ்சுகிற வஞ்சிமுகம்

அடிவானத் தொலைத் திரையில்

அந்திவரை காந்திருந்து

அடிமையென நின்றதுண்டு

 

மாலையிட்ட தேதிமுதல்

மனையாளைக் காதலித்து

வாழ்வுற்றேன் வளம்கண்டேன்

வானொத்த காதலுக்கு

 

வாழ்க்கையைக் காதலித்தேன்

வளத்தை உணர்ந்த தினால்

தாழ்ப்பாளைப் போட்டுவிட்டேன்

தடம் புரளும் காதலுக்கு !

3

 

4.மனம்

5

 

நித்தமொரு பித்தமுடன் சித்தமதில்  சீழ் பிடித்து

கத்தும்கடல்போல் வீணில்வாழும்-வாழ்வில்

சத்தமின்றி ஒய்ந்து மெல்ல சேரும்  மனம்சோரும்

 

நத்தமென்றும் கொத்தமென்றும் நாள்முழுக்க  ஏர்பிடித்து

சுத்த சன்மார்க்க நெறிபேசும் -பொய்மை

வித்தகங்கள் மறைந்தபின்னர் நோகும் மனம் நோகும்

 

நீதி நெறி வேதமெனப் பாதிவிழிப் பார்வைகளில்

சோதியொளி முகம்முழுக்கக் காட்டும்-உள்ளே

சாதிமதச் சச்சரவில் ஊறும் மனம் ஊறும்

 

ஆதியென்றும் அந்தமென்றும் வீதிகளில் சேதமின்றி

பாதியுடல் தந்தவனைப் பாடும் – வீட்டில்

நாதியின்றி வாழ்பவளைச் சாடும் மனம் சாடும்

 

செறிகின்ற ஞானத்தில் சிறக்கின்ற கூர்மதியை

அறிகின்ற ஆற்றலின்றி வாழும் – பிறர்

எறிகின்ற சொற்களிலே வாடும் மனம் வாடும்

 

அறிவின்றி ஒலமிட்டு குறியின்றி கோலமிட்டு

சொறிகின்ற இச்சைகளில்வீழும்-விதித்த

நெறியென்று வெறும்கதைகள் பேசும் மனம் பேசும் !

3

5.ஆத்தோரமாயிருக்கும்

காத்தாடித் தோப்புக்குள்ளே!

6

ஆத்தோரமாயிருக்கும்

காத்தாடித் தோப்புக்குள்ளே

ஆத்தா நீ சின்னப்பொண்ணு கண்ணிவச்ச

அதைப் பார்த்தா இந்தமச்சான்

சொக்கிப்போனன்!

 

சேத்தோரமாயிருக்கும்

சிறுநண்டு குறுகுறுப்பை

சித்தாடசின்னபொண்ணு கண்ணுக்குள்ள நீ

சிலுசிலுன்னு பாத்துவைக்க

வேத்துப்போனன்!

 

நாட்டாமை கருப்பஞ்சோல

நடுச்சாம இரவுவேள

சீட்டாட்டம் முடிச்சுப்புட்டுக் காத்திருந்தேன்

காத்திருந்து காத்திருந்து

களைச்சுப் போனன்!

 

வேட்டவலம் சந்தையிலே

வேட்டியமடிச்சுக்கட்டி

காட்டாறா வலம்வந்து நோட்டமிட்டன் மனச

கருப்பஞ்சக்கை ஆக்கிப்போட்டு

மறைஞ்சுப்போன !

7

6.உறங்கியபோது உயர்ந்தேஇருந்தேன் !

8.jpg

எழுந்தேன் இரவைப் பிரிந்து

என்னுடன் எழுந்தன

விந்தைக்குணங்கள் ஆயிரமாயிரம் !

 

பெருமை, பேதம்,போகம், மோகம்,

குரோதம், நெடுநீர், கொடிய பேராசை,

அச்சம், சோம்பல், ஆணவம்,கிலேசம்,

அழுகை, சிரிப்பு, ஆயிரம் நாடகம்

தந்திரம், சூது, பிறர்பழி தூற்றல்

எந்தன் குடும்பம், எந்தன் சுற்றம்,

வந்தன இவையே வரிசை வரிசையாய்

 

நட்பு, பாசம், காதல், கருணை

நயம்படபேசும் வாதத் திறமை

தூய நெஞ்சால் உலகைப்போற்றும்

மேயகுணங்களோ அவற்றில் சிலதுளி

 

உறக்கம் விழிப்பு உரசிப்பார்த்தேன்

உறங்கியபோது உயர்ந்தே இருந்தேன்

கூச்சல் குழப்பம் கொஞ்சமுமில்லை

கொல்லும் மானுட நஞ்சுகளில்லை !

 

3

7. செங்கழுத்து சிவக்கஒரு…..

11.jpg

நடைமட்டும் இருந்ததங்கே பயணமில்லை

நயணங்கள் இருந்ததங்கே இமைகளில்லை

உடைமட்டும் இருந்ததங்கே தோற்றமில்லை

உள்ளங்கள் இருந்துமங்கே காதலில்லை

 

குரல் மட்டும் இருந்ததங்கே ஓசையில்லை.

குமுத மலர் இருந்ததங்கே நிலவு இல்லை

பரல் மட்டும் இருந்ததங்கே சிலம்பு இல்லை

பண்மீட்ட யாழிருந்தும் விரல்களில்லை

 

மயில் மட்டும் இருந்ததங்கே மேகமில்லை

மழைச்சாரல் இருந்ததங்கே பயிர்களில்லை

குயில்மட்டும் இருந்ததங்கே பாடலில்ல

கொடுப்பதற்கு மனமிருந்தும் கொள்வாரில்லை

 

சிலைமட்டும் இருந்ததங்கே கோயிலில்லை

சிருங்காரம் இருந்ததங்கே ரசிகனில்லை

கலைமட்டும் இருந்ததங்கே கண்களில்லை

கனியொத்த இதழிருந்தும் சுவைப்பாரில்லை

 

மைதிலியின் வில்லிருந்தும் ராமனில்லை

மயக்குமொழி பேச ஒரு கண்ணனில்லை

சீர்கொடுத்து மணமுடிக்க குபேரனில்லை

செங்கழுத்து சிவக்கவொரு மாலையில்லை !

3

 

  1. சுதந்திர இந்தியா

10

இருட்டைத் துடைக்க

எழுந்த தாம் மின்மினி

எங்கள் பட்ஜெட்டின் கனவுமதுவே

 

பரட்டைத் தலைக்கும்

குறட்டைப் பிறவிக்கும்

பாரதம் தெரியாது அதன் பல்லவி புரியாது !

 

சினிமா அரசியல்

சிறுமீன் பிடிக்க

வாழ்நாளெல்ல்லாம் வலைகள் வீசுவர் !

 

வாழ்க ஒழிக

கோஷம் போட

வார்த்தெடுத்த மனித சாதிகள் !

 

உள்ளம் முழுதும்

சிலந்திவலைகள்

உழைக்காமல் இரையை ஊர்ந்து தேடிட !

 

பணத்துடன் கூடிய

பாவைகளென்றால்

காதல்கூட கவனமாய் வளர்ந்திடும் !

 

கோட்சேக்குக் கூட

குலைக்கத்தெரிந்தால்

கொடுத்திருப்போம் பொதுமன்னிப்பு !

 

காந்தியம் இங்கே

கனவாகியதால்

கோட்ஸேயிசம் குரல்கொடுக்கிறது !

 

சாமிக்கு சாதியில்லை

சமூக நீதிக்குச் சாதியுண்டு

சமயத்தின் தூண்டில்முள்ளில்

சாகின்ற புழுக்கள் அதிகம்

 

வளரும் நாடு

பெயரில்மட்டுமே

வளர்வதென்னவோ அரசியல் பினாமிகள்

 

எங்கும் சுதந்திரம்

எங்கள் மண்ணில்

என்ற உண்மையை அறிவேன் அறிவேன்

 

இயற்கை உபாதையை

எங்கும் போக்கிட

இந்தச் சுதந்திரம் எங்கு கிடைத்திடும் ?

 

சுற்றுப்புறமும் சுற்றுலாவும்

எச்சில் துப்பி மேடையேறினால்

எங்கே வளர்ந்திடும்

எங்கள் பாரதம் !

 

3

 

 

9 . எல்லா சொகமும் இழக்கலாச்சு!

12

பரிசம் போட்ட மச்சானாலே

பட்டண வாழ்க்கை நேர்ந்ததால

கரிசல் காட்ட மறக்கலாச்சு

காணி நெலத்த தொறக்கலாச்சு

 

மாடும் கண்ணும் வரவேளை

மஞ்சத் தண்ணி சுத்தரவேளை

நாடறஞ்ச எசப்பாட்டை

நான் படிச்சு நாளுமாச்சு

 

புழுதிமண்ணை வாரிவந்து

பொடவைத் துணியை துவச்சுக்கட்டி

பத்ரக் கோட்டையன் கூத்தப்பாத்து

பரிதவிச்ச சொகமும் போச்சு

 

அய்யனாரு குதிரைப்பக்கம்

அரசமர நிழலொதுங்கி

ஆடுபுலி ஆட்டமின்னு

ஆர்ப்பரிச்ச பவுசுபோச்சு

 

கம்மங்களியத் தின்னுப்போட்டு

கம்மாவில அந்திவரை

பொம்மனாட்டி ஒழைச்சிருந்த

பொறவி சுகம் போயிறுச்சி

 

ஆடிமாச செடலண்ணிக்கு

அஞ்சாறு பொட்டைகளாக

கொள்ளவுட்ட மாம்பழத்தை

கொண்டுவந்த காலம்போச்சு

 

தமிழ் படிச்ச எம்மாமன்

தாலிகட்ட வேணாமினு

இங்கிலீசைப் புடிச்சதால

எல்லா சுகமும் இழக்கலாச்சு !

3

 

 

  1. உண்மைத் துடிக்கிறது

13

கண்களில் தொடங்கிய காதலின் யாத்திரை

கட்டிலில் முடிகிறது- இன்று

காதலும் கட்டிலும் வேறுபட்டதால்

கண்கள் சிவக்கின்றன

 

நெஞ்சினில் தொடங்கிய நினைவுகள் யாத்திரை

கனவினில் முடிகிறது -இன்று

நினைவும் கனவும் வேறுபட்டதால்

நெஞ்சு துடிக்கிறது

 

தனிமையில் தொடங்கிய ராகத்தின் யாத்திரை

தாளத்தில் முடிகிறது – இன்று

தாளமும் ராகமும் வேறுபட்டதால்

தனிமைச் சுடுகிறது

 

உள்ளத்தில் தொடங்கிய உண்மையின் யாத்திரை

உதட்டினில் முடிகிறது -இன்று

உள்ளமும் உதடும் வேறுபட்ட தால்

உண்மைத் துடிக்கிறது !

 

pic1