1. ஞாபகங்கள்
வாழ்வியல் கவித்துவத்தில்
குயிற்பாட்டாய் ஞாபகங்கள்
இளவேனிற்காலத்து
இலைநீர் முத்தென
காற்றில் கலந்து
மனதை விசிறிடும் !
பசித்தவாழ்க்கையின்
பழையமுது !
நினைவுப்பதிப்பில்
பிழை திருத்தப்படாமல்
பிரசுரமாவதில்
வருத்தமென்றில்லை
சுட்டதும் சுடாததும்
ஞாபகத்திற்குமுண்டு
சுட்டது அந்தரங்கமானது
சுடாதது அவைக்களிப்பது !
ஒரு மழைநாளில்
எனக்காக அம்மா
இரவெல்லாம் அலைந்து
நாய்க்குட்டி நண்பனைத்
தேடித் துவட்டி
திண்ணையில் விட்டதாய்
ஞாபகம்…
இப்போதும் எனக்குள்
நாய்க்குட்டிகள் உண்டு,
அம்மா…. ?
2.மானுட மரம்
மண்ணைப் பற்றிடும்
மார்க்கமல்ல மானுடம் !
கருத்தரித்த காரியம் முதலாய் உடற்
கட்டை எரிக்கும் நாளதுவரை
புலம்பெயருதல் உயிரின் மார்க்கம் !
கற்றல் கேட்டல் அறிதல் புரிதல்
நடத்தல் ஓடுதல் நீந்துதல் பறத்தல்
புலம்பெயர்ந்திட
உயிர் சுமக்கும் வாழ்வியல் ஊர்திகள் !
வேர்விட்டு நீருறிஞ்சி
தன்னை உயிர்க்கும்
தாவர மரமல்ல,
கண்ணீர்விட்டு கசிந்துருகி
தன்னை உணரும்
மானுட மரம் !
இந்த மரத்தில் இளைப்பாறுபவை
பறவைகள் மட்டுமல்ல
இலைகளும் கிளைகளுங்கூட !
இலையுதிர் காலத்தைக் கண்டோ -இல்லை
வெட்டும் கோடரியைக் கண்டோ
மரங்களுக்குப் பயமிருப்பதில்லை
மானுடத்திற்குண்டு பயம்
மற்றும்
அதன் மரணம் குறித்தும் !
3. படைக்கப்பட்டவன்
கனவுகள் வழியும் உன்
கண்களில்
காத்திருப்புகள் ஒருபோதும்
சோர்வதில்லை !
நெஞ்சக் குமிட்டியில்
சிவந்திடும் உணர்வை
உதட்டினில் ஈரம் கெடாமல்
உலரவைக்கும் பக்குவம்
உனக்கு மட்டுமே !
விரல் நுனியில்
வெற்றியைத் தொட்டு
வேதாளத்தை முருங்கையில் மீட்ட
விக்கிரமன் வாளும்
இலக்கைமட்டுமே எட்டத் தெரிந்த
இராமன் கை பாணமும், உன்
உடன் பிறந்தவை !
உடன் பறப்பவை
ஓய்வுக்குக் கிளைதேடும்போது
உட்கார நீதேடுவதோ
ஈசன் குடுமி !
நாளைய ஜனனத்திற்காக
இன்று மரணிக்கும் நீ
விதைக்கப்பட்டவன் அல்ல
படைக்கப்பட்டவன் !
4.அழகைக் காத்துவிட்டு…
துக்கம்
அழுகையைப் பிரசவிக்கும்
இழப்பின் வலியா ?
அழு..அழு.. !
தூக்கம்
இறப்பிற்கான
இலவச ஒத்திகையா ?
தூங்கு.. தூங்கு.. !
மரம் செடி கொடி
கிளை, இலை மொட்டு வரிசையில்
நீயும் நானும் மலரென்றாய் !
நானொதுங்கி
நிலவென்று சொல்லவில்லை
கனவுகளுடன்
நட்சந்திரங்களென்றேன் !
மலரோ நட்சத்திரமோ
உதிருவதுதான் வாழ்க்கை
என்றான பிறகு
முடிந்தவரை
அழகைக் காத்துவிட்டு…..
5 பிரம்படி எனக்கு !
பிறந்து பாலுண்ட மொழி
தவழ்ந்து மண்ணுண்ட நாடு
தோலின் நிறத்தில் நிறம்
தோன்றியபோதே மதம்
இப்படி
பேதத்திற்கு
உயிர் சுமந்த
பெற்றோர் தேர்வு உட்பட
என்குற்றம்
எதுவுமில்லை,
பிரம்படி எனக்கு !
6.துணை!
என்ன பெரியவரே
எப்படி இருக்கீங்க ?
« சம்சாரம் போயிட்டாங்கிறதைத் தவிர
ஒரு குறையுமில்லே !
பெரியவனுக்கு அமெரிக்காவிலும்
சின்னவனுக்கு ஆஸ்திரேலியாவிலும்
உத்தியோகம்,
மகளிருப்பது மஸ்கட் ! »
நீங்க ?
« ஆடு மாடு
சில கோழிகளோட
சொந்த கிராமத்துல
இருக்கேன். »
___________________________________________________________________________________
7.சன்னல் பூச்சி
ஒதுக்கிய திரையில்
ஒதுங்கா உடல்
உலைக் கள இரும்பென !
பார்வைப் பல்லிக்கு
இரைப்பட’வேண்டி ‘
பட பட க்கும் கண்கள்,
மார்பெழுந்தடங்கி
மௌனம் பேசும் !
விழியும் இதழும்
வெளிப்படுத்தும்
‘விரக க்’ கூக்குரல்
வீதியில் என்னை மட்டுமே
சேர்ந்திடும் !
காம முத்தாய்ப்பாகக்
கையிறுக்கத்தில்
சன்னல் கம்பிகள்
கடக்கும்போதெல்லாம்
சன்னல் பூச்சியின்
சங்கடம் புரிந்த
இந்திரன் எனக்குள் !
8. கருணைக்கொலை
பார்வைப் பல்லக்கை
சுமந்த கண்களின்
வியர்வைத் தடத்தினில்
சுவாச தீர்த்த த்தில்
உயிர்நீராடியபின்
சொட்டும் கனவுகளில்
மௌன அஞ்சலில்
பேசும் வார்த்தையில்
மனத்தை விரித்ததில்
‘கருணைக்கொலை’க்கென
விண்ணப்பித்துவிட்டு
காத்திருக்கிறேன்.
என்றேனும் ஒரு நாள்
எனக்கென ஒரு பூசாரி
வருவான்
மாலையும் அரிவாளுமாய் !
9. இயல்பாய் மறதி!
அன்பிற்குரியவரின்
அடையாள நாள்களும்
கிம்பளம் அற்ற
அலுவல் பணிகளும்
இரவல் பொருட்களின்
உரியவர் பெயரும்
அரசியல் பிழைப்போர்
நேற்றைய பேச்சும்
உடுக்கை இழந்தவன்
கையென உதவிய
உள்ளமும்
இடுகாட்டைக்
கடக்கும் பொழுதெல்லாம்
இறப்பும்
சிற்சில சமயம்
இலையில்
உட்காருவதற்கு முன்
கை நனைக்கவும்
இயல்பாய் மறதி
எனக்கும் உங்களுக்கும் !
ஆனால்
எதிரிக்கு வரலாமா ?
10. இருட்டு சுவர்க்கத்திற்காக
பார்வை தொலைத்த
உயிர்களின் பகல்
இடுகாட்டுக்கப்புறம்
இங்கேதான்
சமன் செய்யப்படுகிறது
சனநாயகம் !
மேகக் காட்டில்
ஒளிந்து நழுவும்
நிலவுப்பெண்ணின்
திருட்டு நாடகம்
இருட்டிய பிறகே
வெளிச்சத்திற்கு வந்திடும் !
மெய் உறவுகள்
நடமாட்டத்திற்காக
கால பிரம்மன்
கையொப்பமிட்ட
பொய் ஊரடங்கு !
உயிர்கள்
தொழிற்சாலையின்
உற்பத்தி நேரம் !
முரணாக
சுவர்க் கோழியின் ‘ர்‘ உம்
சுணங்கும் நாயின் ‘ம்’ உம்
சுரம் சேர்க்க க்
கடைவாய் ஒழுக
விக்கல் பாடும்
« அடுத்த அமாவாசைக்குத்
தங்காது » என
போன அமவாசைக்கு
ஆரூடம் குறித்தும்
போகாத உயிர்
இருட்டு சுவர்க்கத்திற்காக !
11. அதிர்ஷ்டம் வேண்டி
தெருப்பிள்ளையாருக்கு
நூறு தேங்காய்
திரிசூலம் கற்பகாம்பாளுக்கு
பாவாடைச் சாற்றல்
ஆபீஸ் பியூன் அந்தோனி
சொன்னாரென்று
வேளாங்கன்னி மாதாவிடம்
வேண்டுதல்!
நண்பர் நஜ்முதீனுக்காக
நாகூர் ஆண்டவருக்குச்
சந்தணக் குடமென
அதிர்ஷ்டம் வேண்டி
அத்தனையும் செய்தார்கள்,
கூடவே
உழைப்பிற்காக
ஒரு துளை வியர்வைச்
சிந்தியிருக்கலாம் !
12. மலரும் மனமும்
மகிழ்ச்சியும் துக்கமும்
மனம் மட்டுமே அறிந்த தெளிவு
மன திற்குமட்டுமல்ல
எவரிடமிருந்து எது?
அல்லது
எதனிடமிருந்து எது?
என்பதில்
எதிரபிப்ராயம் மலருக்கும்
உண்டு.
வலியில் சுகமும்
சுகத்தில் வலியும்
உள்ளுரையுவமம்
மலரின் மெல்லிதழ்களில்
காற்பதித்துத் தேனுறிஞ்சும்
வண்டுகளால்
மலருக்கு நேர்வது
வலியா? சுகமா?
அது மலர் மட்டுமே அறிந்த உண்மை.
மானுட விரல்கள்
அறிந்ததெல்லாம்
மலரை அதன் உறவிடமிருந்து
பிரிப்பது மட்டுமே
என்றேனும் ஒருநாள்
மலரின் முனகலுக்கு
மானுடம் பதில் சொல்ல வேண்டும்
நமது
மனதிற்கும் கூட!
13. அமைதியை அறிந்ததில்லை கேட்டதுண்டு….
அமைதியை அறிந்ததில்லை
கேட்டதுண்டு
நம்பிக்கையும் உறவும், நட்பும் நெருக்கமும்
சந்தேகம், பகை, எதிரி, இடைவெளியென
வேற்றுமைப் பெயர்களானதில்
அமைதியை அறிந்ததில்லை
கேட்டதுண்டு
இந்தியா – பாகிஸ்தான்
இஸ்ரேல் – பாலஸ்தீன்
ஈரான் – ஈராக்
குர்திஸ்தான் – கோசோவா
ஆப்கானிஸ்தான் இலங்கையென
தொடரும் பட்டியலில்
நாடுகள் எதுவாயினும்
படுகள உயிர்கள்
அமைதியை அறிந்ததில்லை
கேட்டதுண்டு
புயலுக்குப் பின்னே ‘அமைதி’
போருக்குப் பின்னே ‘அமைதி’
படித்ததுண்டு அறிந்ததில்லை.
கொலைவாட்கள் தீட்டப்படும்
கோப விநாடிகளில்
இரு பீரங்கி முழக்கங்களின்
இடையிலான பிரசவ நிமிடங்களில்
இரு போர்களுக்கு
இடையிலான சூன்ய நாட்களில்
அமைதியைப் பார்த்ததுண்டு
அறிந்ததில்லை.
இடிபாடுகளுக்கிடையே சிக்குண்ட
எமதில்லங்களில்
குழிபெயர்ந்த கொல்லைப்புறங்களில்
டாங்கிகள் தடம் பதித்த வீதிகளில்
சமாதியுண்ட சந்தைகளில்
அமைதியைப் பார்த்ததுண்டு
அறிந்ததில்லை.
எங்கள் விடியலுக்காக
காகங்கள் கரைவதில்லை
சேவல்கள் கூவிடாது
எங்கள் தோப்புகளோடு
எரியுண்டது அழகியல் மட்டுமல்ல
வண்டுகள் மொய்த்த
சோலைகளெங்கும்
ஈக்கள் மொய்க்கும் மனிதம்
அலகு சிவந்து காத்திருக்கும்
கழுகுகள் அவற்றின் வம்சாவளிகள்!
மயானத்தில் உயிர்கள்
காத்திருப்பது
‘அமைதி’ வேண்டியல்ல
கல்லறைகளுக்காக !
14.கனவிடைத் தோயும் நாணல் வீடுகள்
சருகுகளான ‘நினைவுகளில்’:
பச்சையம் இழக்கா முதல் வீடு.
தோட்டக்கால் மண்ணில் ‘க(¡)ல்’ அறுத்து
மூச்சுக்காற்றில் முகம் தேய
செங்கற் சூளைக்கு மரங்கள் தேட
காய்த்துக்குலுங்கிய புளியமரமும்
களையெடுத்த பனைமரங்களும் சாம்பலானது.
சுபுமுகூர்த்தத்தில் சூளைபிரிக்கவும் மனைகோலவும்
சுத்த வாக்கிய தம்பிரான் மொழி.
உள்ளூரில் கிணறுகள் கட்டிப்
பழகியிருந்த சின்னச்சாமி வகையறாக்கள்
உதவிக்கு வந்த ஒரிருமாதங்களில் தெருவைப்பார்த்த
முதல் வீடு -அப்பாவீடு.
அடுப்படியில் அம்மாவின் குரல்
தெருத் திண்ணையில் அப்பாவின் குரல்,
‘உச்சு’கொட்டும் அவர் சகாக்களின் குரல்
இடப்புற இருட்டறை இடைக்கிடைத்
துப்பும் ‘பாட்டி’யின் குரல்
பின்னிரவு பூனையின் குரல்
முன்னே கிரீச்சிடும் எலியின் குரல்
தூண்களான தோட்டத்துமரங்களில்
தொட்டால் உதிரும் புள்ளினக்குரல்கள்.
அம்மா: கோ(டி)ட்ட பால், மோர் கணக்கு
அடுக்களை முதுகு,
மஞ்சள்குங்குமம் தின்று செரிக்காத நடுவீடு,
முருங்கைக்கீரை சாம்பார் மணம்.
காலம்: கட்டிய சிலந்தி குளவிக் கூடுகள்
பலியுண்ட மூட்டை பூச்சிகள்
உடலொட்டிக்கிடக்கும் உதிராதச் சிவப்பு
சிந்திய மஞ்சள் சளியின் முதிராத கறுப்பு.
அக்கா: தலைச்சன்பிள்ளைக்காக
தூலத்திலிட்ட கூறைப்புடவை தூளி,
மூத்திரவாடை, முலைப்பால் கவிச்சை.
அப்பா அம்மா நிழல் விளையாட்டைக் கண்ட
விளிம்பு இரவின் விழிப்பு,
இருபாலரையும் அருவருத்த இரண்டாம் நாள்.
காரணம் சிலிர்க்க கனவுற்ற வீடு
நிழலும் ‘நானு’மாய் பறந்து மாய்ந்து
இறக்கைகள் குறைத்து பூமிக்கு வீங்கி
ராஜஸ்தான் மார்பிள்,பிரெஞ்சு விண்டோஸ்,
கார் நிறுத்த போர்டிகோ, குளிரூட்டிய அறை,
அட்டாச்டு பாத்ரூம்…மனைவி பிள்ளைகள் சூழ
மனையில் உட்கார்ந்து கிரகப்பிரவேசம்.
மறுநாள் தெருக்கதவில் ‘வாடகைக்கு விடப்படும்’
பிறந்தமண் புது வீடு!
கால மக்மாவில் கரையும் ஆயுள்
காதோரம் நரைக்கும் அக்கரைப்பச்சைகள்
நிகழ்காலத்தில் தளும்பும் கடந்த காலத்தின் கானல் நீர்
கால் இடற படிகள் ஏறவும்,
கை நடுங்கத் தீ மூட்டவும் –
பால்காய்ச்சவும் அலையும் ‘இருப்பு’.
நாணல் வீடுகள் கனவிடைத் தோயும்
15. மீண்டும் மீளும் அந்தத் தெரு.
என்னுள் இருக்கும் அந்தத் தெரு
சோம்பல் முறித்த அதிகாலைக்கு
தேத்தண்ணி விநியோகிக்கும்
காசாம்பின் கைப்பட்ட இட்டலியை
சூட்டில் வருந்தும் தாமரை இலையிலிட்டு
மீன் குழம்பை அபிஷேகிக்கும் !
குமரிகள் கைபட்ட
கூடுதல் சந்தோஷத்தை
ஒற்றைக் கைப்பம்பில் குரலெடுத்துப் பாடும்
அவர்கள் இடுப்பை எச்சலிட்டு
குடங்களிற் பருவமாய்த் தளும்பும்
ரிக்க்ஷா மணியின் இருமலுக்குப் பயந்த
திண்ணைக் குழந்தையாய்
திடுக்கிட்டு அழும்!
“சாமியேய் ஐய்யப்பா!”
விளித்த காற்றாய்
வீட்டு முற்றம்வரை வந்து விழும் !
பாற்கார ரங்கனின் கைப்பிடியில்
குவளையா? குளம்படியா?
குழப்பாமாய் மிஞ்சும் !
நாசி எழுப்பி,
வெல்லப்பாகில் பிறப்பெடுக்கும்
வேம்புலி நாய்க்கர் பொரியுண்டை
மெல்லப் பேசும் இனியவை நாற்பது!
வாழ்க்கைப் பயணத்தின்
வழிச்செலவுக்குதவுமென
சிக்கனமாய்ச் சேர்த்த
சில்லறை காலைகள்
சந்தோஷத் திரியில்
பண்டிகை நாட்களில்
வெடித்துத் சிதறும்
சிவகாசி சிறுவர்களாய்!
சூல்கொண்ட மனவுண்டியல்
உடைக்கப்படாமல்
எண்ணப்படும் நாள்களில்
மீண்டும் மீளும் அந்தத் தெரு….