கவிதைகள்

1. ஞாபக அம்மா ‘(1990)

வாழ்வியல் கவித்துவத்தில்
குயிற்பாட்டாய் ஞாபகங்கள்

இளவேனிற்காலத்து
இலைநீர் முத்தென
காற்றில் கலந்து
மனதை விசிறிடும்
பசிக்கும் வாழ்க்கையில்
பழைய அமுது

நினைவு பதிப்பில்
பிழைதிருத்தப்படாமல்
பிரசுரமாவதில்
வருத்தமென்றில்லை

சுட்டதும் சுடாததும்
ஞாபகத்தில் உண்டு
சுட்டது அந்தரங்கமானது
சுடாதது அ(வ்)வைக்களிப்பது

ஒரு மழைநாளில்
எனக்காக அம்மா
இரவிரவாய் அலைந்து
நாய்குட்டி தோழனை
தேடித் துவட்டி
திண்ணையில் விட்டதாய்
ஞாபகம்

இப்போதும் எனக்குள்
நாய்குட்டிகள் உண்டு
அம்மா?

_________________________

2. எல்லையைத் தொடுங்கள்!

மழைக்குப்பின்னே
மரத்தடி ஒதுங்கி
வீசும் காற்றில்
விசிறும் துளிகளில்
உள்ளம் சிரிப்பதை
உணர்ந்து பாருங்கள்!

நீரின் பரப்பினை
நெருங்கிய கிளைகளின்
இருக்கையில் அமர்ந்து
நீரைக்கால்களால்
நீவிப்பாருங்கள்!

உலகின் பிடியினை
உதறி செல்வது
தியானமென்று
தெளிந்திட வேண்டாம்

மானிட வாழ்வின்
மகத்துவ மெல்லாம்
வேதமோதிடும்
போதிமரங்களே!
______________________________________________

3. மலரும் மனமும்

மகிழ்ச்சியும் துக்கமும்
மனம் மட்டுமே அறிந்த தெளிவு

எவரிடமிருந்து எது?
அல்லது
எதனிடமிருந்து எது?
என்பதில்
எதிரபிப்ராயம் மனதிற்கும்
உண்டு.

வலியில் சுகமும்
சுகத்தில் வலியும்
உள்ளுரையுவமம்

மலரின் மெல்லிதழ்களில்
காற்பதித்துத் தேனுறிஞ்சும்
வண்டுகளால்
மலருக்கு நேர்வது
வலியா? சுகமா?
அது மலர் மட்டுமே அறிந்த உண்மை.

மானுட விரல்கள்
அறிந்ததெல்லாம்
மலரை அதன் உறவிடமிருந்து
பிரிப்பது மட்டுமே

என்றேனும் ஒருநாள்
மலரின் முனகலுக்கு
மானுடம் பதில் சொல்ல வேண்டும்
நமது
மனதிற்கும் கூட!
___________________________________________________

4. அமைதியை அறிந்ததில்லை கேட்டதுண்டு

அமைதியை அறிந்ததில்லை
கேட்டதுண்டு

நம்பிக்கையும் உறவும், நட்பும் நெருக்கமும்
சந்தேகம், பகை, எதிரி, இடைவெளியென
வேற்றுமைப் பெயர்களானதில்
அமைதியை அறிந்ததில்லை
கேட்டதுண்டு

இந்தியா – பாகிஸ்தான்
இஸ்ரேல் – பாலஸ்தீன்
ஈரான் – ஈராக்
குர்திஸ்தான் – கோசோவா
ஆப்கானிஸ்தான் இலங்கையென
தொடரும் பட்டியலில்
நாடுகள் எதுவாயினும்
படுகள உயிர்கள்
அமைதியை அறிந்ததில்லை
கேட்டதுண்டு

புயலுக்குப் பின்னே ‘அமைதி’
போருக்குப் பின்னே ‘அமைதி’
படித்ததுண்டு அறிந்ததில்லை.

கொலைவாட்கள் தீட்டப்படும்
கோப விநாடிகளில்
இரு பீரங்கி முழக்கங்களின்
இடையிலான பிரசவ நிமிடங்களில்
இரு போர்களுக்கு
இடையிலான சூன்ய நாட்களில்
அமைதியைப் பார்த்ததுண்டு
அறிந்ததில்லை.

இடிபாடுகளுக்கிடையே சிக்குண்ட
எமதில்லங்களில்
குழிபெயர்ந்த கொல்லைப்புறங்களில்
டாங்கிகள் தடம் பதித்த வீதிகளில்
சமாதியுண்ட சந்தைகளில்
அமைதியைப் பார்த்ததுண்டு
அறிந்ததில்லை.

எங்கள் விடியலுக்காக
காகங்கள் கரைவதில்லை
சேவல்கள் கூவிடாது

எங்கள் தோப்புகளோடு
எரியுண்டது அழகியல் மட்டுமல்ல

வண்டுகள் மொய்த்த
சோலைகளெங்கும்
ஈக்கள் மொய்க்கும் மனிதம்
அலகு சிவந்து காத்திருக்கும்
கழுகுகள் அவற்றின் வம்சாவளிகள்!

மயானத்தில்  உயிர்கள்
காத்திருப்பது
‘அமைதி’ வேண்டியல்ல
கல்லறைகளுக்காக
___________________________________________________

5. மீண்டும் மீளும் அந்தத் தெரு.

என்னுள் இருக்கும் அந்தத் தெரு
சோம்பல் முறித்த அதிகாலைக்கு
தேத்தண்ணி விநியோகிக்கும்

காசாம்பின் கைப்பட்ட இட்டலியை
சூட்டில் வருந்தும் தாமரை இலையிலிட்டு
மீன் குழம்பை அபிஷேகிக்கும்

குமரிகள் கைபட்ட
கூடுதல் சந்தோஷத்தை
ஒற்றைக் கைப்பம்பில் குரலெடுத்துப் பாடும்
அவர்கள் இடுப்பை எச்சலிட்டு
குடங்களிற் பருவமாய்த் தளும்பும்

ரிக்ஷா மணியின் இருமலுக்குப் பயந்த
திண்ணைக் குழந்தையாய்
திடுக்கிட்டு அழும்

“சாமியேய் ஐய்யப்பா!”
விளித்த காற்றாய்
வீட்டு முற்றம்வரை வந்து விழும்

பாற்கார ரங்கனின் கைப்பிடியில்
குவளையா? குளம்படியா?
குழப்பாமாய் மிஞ்சும்

நாசி எழுப்பி,
வெல்லப்பாகில் பிறப்பெடுக்கும்
வேம்புலி நாய்க்கர் பொரியுண்டை
மெல்லப் பேசும் இனியவை நாற்பது

வாழ்க்கைப் பயணத்தின்
வழிச்செலவுக்குதவுமென
சிக்கனமாய்ச் சேர்த்த
சில்லறை காலைகள்
சந்தோஷத் திரியில்
பண்டிகை நாட்களில்
வெடித்துத் சிதறும்
சிவகாசி சிறுவர்களாய்

சூல்கொண்ட மனவுண்டியல்
உடைக்கப்படாமல்
எண்ணப்படும் நாள்களில்
மீண்டும் மீளும் அந்தத் தெரு….
__________________________________

6. கனவிடைத் தோயும் நாணல் வீடுகள்

சருகுகளான ‘நினைவுகளில்’:
பச்சையம் இழக்கா முதல் வீடு.
தோட்டக்கால் மண்ணில் ‘க(¡)ல்’ அறுத்து
மூச்சுக்காற்றில் முகம் தேய
செங்கற் சூளைக்கு மரங்கள் தேட
காய்த்துக்குலுங்கிய புளியமரமும்
களையெடுத்த பனைமரங்களும் சாம்பலானது.
சுபுமுகூர்த்தத்தில் சூளைபிரிக்கவும் மனைகோலவும்
சுத்த வாக்கிய தம்பிரான் மொழி.
உள்ளூரில் கிணறுகள் கட்டிப்
பழகியிருந்த சின்னச்சாமி வகையறாக்கள்
உதவிக்கு வந்த ஒரிருமாதங்களில் தெருவைப்பார்த்த
முதல் வீடு -அப்பாவீடு.
அடுப்படியில் அம்மாவின் குரல்
தெருத் திண்ணையில் அப்பாவின் குரல், ‘உச்சு’கொட்டும் அவர் சகாக்களின் குரல்
இடப்புற இருட்டறை இடைக்கிடைத் துப்பும் ‘பாட்டி’யின் குரல்
பின்னிரவு பூனையின் குரல் முன்னே கிரீச்சிடும் எலியின் குரல்
தூண்களான தோட்டத்துமரங்களில் தொட்டால் உதிரும் புள்ளினக்குரல்கள்.
அம்மா: கோ(டி)ட்ட பால், மோர் கணக்கு அடுக்களை முதுகு,
மஞ்சள்குங்குமம் தின்று செரிக்காத நடுவீடு,
முருங்கைகீரை சாம்பார் மணம்.
காலம்: கட்டிய சிலந்தி குளவிக் கூடுகள் பலியுண்ட மூட்டை பூச்சிகள்
உடலொட்டிக்கிடக்கும் உதிராதச் சிவப்பு
சிந்திய மஞ்சள் சளியின் முதிராத கறுப்பு.
அக்கா: தலைச்சன்பிள்ளைக்காக தூலத்திலிட்ட கூறைப்புடவை தூளி,
மூத்திரவாடை, முலைப்பால் கவிச்சை.
அப்பா அம்மா நிழல் விளையாட்டைக் கண்ட
விளிம்பு இரவின் விழிப்பு,
இருபாலரையும் அருவருத்த இரண்டாம் நாள்.
காரணம் சிலிர்க்க கனவுற்ற வீடு

நிழலும் ‘நானு’மாய் பறந்து மாய்ந்து
இறக்கைகள் குறைத்து பூமிக்கு வீங்கி
ராஜஸ்தான் மார்பிள்,பிரெஞ்சு விண்டோஸ்,
கார் நிறுத்த போர்டிகோ, குளிரூட்டிய அறை,
அட்டாச்டு பாத்ரூம்…மனைவி பிள்ளைகள் சூழ
மனையில் உட்கார்ந்து கிரகப்பிரவேசம்.
மறுநாள் தெருக்கதவில் ‘வாடகைக்கு விடப்படும்’
பிறந்தமண் புது வீடு

கால மக்மாவில் கரியும் ஆயுள்
காதோரம் நரைக்கும் அக்கரைப்பச்சைகள்
நிகழ்காலத்தில் தளும்பும் கடந்த காலத்தின் கானல் நீர்
கால் இடற படிகள் ஏறவும்,
கை நடுங்கத் தீ மூட்டவும் –
பால்காய்ச்சவும் அலையும் ‘இருப்பு’.
நாணல் வீடுகள் கனவிடைத் தோயும்

_________________________________________________

7. அழுவது சுகம் (1987)

அழுவதும் சுகமாம்
கவிஞன் சொன்னான்
விழும்போதெல்லாம்
பழகிபார்க்கிறேன்

பிறந்தபோது
பேய்க்குரலிட்டு அழுததாக
அத்தை ஒருத்தி
அடிக்கடி சொல்வாள்

அழுத பிள்ளைதான்
பால்குடிக்கும்-என்ற
அட்சரம் தெரிந்து
பீச்சிய பாலின்
வீச்சம் சுவைத்து
வீங்கிய மார்பில்
தூங்கி அழுதவன்!

அம்மா அருகே
தூங்கும் வயதில்
பாதி ராத்திரியில்
பாயை நனைத்து
மீதி ராத்திரி
அழுது ஓய்ந்தவன்

பள்ளியில் வீட்டில்
கொல்லையில்,
கொடுக்காப்புளி மரத்தினடியில்
கொடுக்கல் வாங்கல்
பிரச்சினைக்காக
தோற்றவன் நான்
துவண்டு அழுவேன்!

வளர்ந்த பிறகு
வாய்விட்டு அழுவது
மண்ணில் குமரர்க்கு
மரியாதை இல்லையாம்
கண்ணைத் துடைத்துக்
கலங்கியிருக்கிறேன்
உள்ளத்துக்குள்ளே
உடைந்து இருக்கிறேன்!

கண்ணைக் கசக்கி
என்னுள் புதைந்து
பின்னும் வார்த்தையில்
பேசிடும் மனைவியின்
அழுகைக்குள்ளே
தொழுகை நடத்துவேன்

அழுவதன் இலக்கணம்
அறிந்தவர் அழுதால்
பழுதில்லாமல் பரிவுகள் நீளும்

அழுதபின் நெஞ்சில்
வழிகள் திறப்பதும்
குபுக்கெனவங்கே
குறைகள் சரிவதும்
உடைந்து உதிரும்
கண்ணீர் மருந்தில்
சோகக் காய்ச்சல்
சொஸ்தமாவதும்

அடடா சுகமே!
அழுவதால் சுகமே!
__________

8. மழையின் கால்களில்

இலையும் கிளையும் துளிகளை வாங்க
இன்பச் சுகத்தின் இறுதியில் வேர்த்து,
நின்று மூச்சிடும் மரத்தின் கால்கள்!

குகூவென்றும் அக்கோவென்றும்
குளறும் மொழியில் குளிரும் மழையில்
கூடத் துடித்திடும் கொஞ்சும் கால்கள்!

தாழங்குடையில் தலையை வாங்கி,
வீழும் துளிகளை விரலால் வழித்து
உழவு மாட்டுடன் ஓடுங்கால்கள்!

மழையின் நனைந்த மகிழ்வுடன் கன்று
தாய்ப்பசு மடியில் தலையைத் துவட்டத்
தாய்மை சுகத்தில் தவித்திடும் கால்கள்!

சவுக்கு மரங்கள் சாய்ந்திட- அந்த
சத்தங்கேட்டு பெண்முயல் விலக
அச்சம் தவிர்க்கும் ஆண்மையின் கால்கள்!

களையை முடித்து மழையின் நனைந்து
முத்திக்குடையில் முகத்தை மறைத்துக்
கனத்த மார்புடன் பிணக்குங் கால்கள்!

கொட்டும் மழையில் கூச்சலிட்டோடி
மூக்குச் சளியை முழங்கைவாங்க
ஆட்டம்போடும் அறியாக் கால்கள்!

மழையின் கால்களில் மகத்துவம்தேட
ஒழுகும் துளிகளின் ஊடே புகுந்தேன்
காலடி மழையில் கரைந்து ஒளிந்து
தாளடி இயற்கை தருமம் அறிந்தேன்!

————————————

9. இன்றாவது மழை வருமா (1992)

கழுவெளி கரிசல் கத்தரி வெயிலில்
புழுதி படிந்து அழுது வடிந்திட
பழுத்த கோரையில் முகத்தைச் சொறியும்
வரிசை உடைந்த ஆடுமாடுகள்!

கொழுத்த கழுகு பனைமர உச்சியில்
எச்சில் ஊற இரையைத் தேடிட
கழுத்தை வளைத்து சுடலையன் மட்டும்
வானைப் பார்த்தான்
இன்றாவது மழை வருமா!

குளத்திலிருந்த கொஞ்ச நீரும்
குழம்பிப்போக தவளைகள் மிதந்திடும்
இளைத்திருந்த மாடுகள் சேற்றில்
இறங்கி நடந்திட மூச்சு முட்டிடும்!

களத்து நெல்லை பொறுக்கும் குருவிகள்
கானல் நீரை வீணில் தேடிடும்!
களைத்து போன சுடலையன் மட்டும்
வானைப் பார்த்தான்
இன்றாவது மழை வருமா?

வெள்ளை வானின் வேண்டா வெறுப்பில்
வந்துபோகும் இரண்டொருமேகம்
வீசும் காற்றில் தயங்கி தயங்கி
மார்கழி மாத விடியல் வாசனை

சுள்ளி பொறுக்கும் பெண்டுகள் கூட
சுவரெறி பந்தாய் வீடு திரும்பிடச்
சுருங்கிய கண்களால் சுடலையன் மட்டும்
வானைப் பார்த்தான்,
இன்றாவது மழைவருமா?

—————————–

10. காதல்கள்(1980)

எப்போதும் எனக்குள்ளே
ஏதேனும் ஒரு காதல்
தப்பாமல் பிறப்பதினால்
தயங்காமல் எழுதுகிறேன்!

பருவத்தின் சாரலிலே
பரிதவித்த நாட்கள் முதல்
சருமத்தில் தேமலென
சருகான காதல்கள்!

பார்த்த சினிமாவும்
படித்தறிந்த சஞ்சிகையும்
போதித்ததெல்லாமே
பொய்க்கதை காதல்கள்!

பள்ளி நாட்களிலே
பக்கத்தில் பெண்ணிருந்தால்
படபடத்து உடல் வேர்த்து
பயமுறுத்தும் காதல்கள்!

கல்லூரி நுழைந்தவுடன்
காலரை தூக்கிவிட்டு
கன்னியரை சுற்றிவந்து
கனாக்கண்ட காதல்கள்

மார்கழி பனிப்பூவில்
மாருரசும் குளிர்காற்றில்
வரப்புகளில் வலம்வந்த
வாடாத காதல்கள்!

கிராமத்து குளக்கரையில்
கிளைதாழ்ந்த வேப்ப மரம்
தணியாத மொழிக்காதல்
தமிழ்க்காதல் பிறந்த இடம்
மழைச்சாரல் முற்றத்தில்
மணக்கின்ற காபியுடன்
கம்பன்தமிழ் சுவைத்ததுண்டு
காதலித்து வேர்த்ததுண்டு!

அஞ்சுகின்ற வஞ்சிமுகம்
அடிவான தொலைதிரையில்
அந்திவரை காத்திருந்து
அடிமையென நின்றதுண்டு!

மாலையிட்ட தேதிமுதல்
மனையாளை காதலித்து
வாழ்வுற்றேன் வளங்கண்டேன்
வானொத்த காதலுக்கு!

வாழ்க்கையைக் காதலித்தேன்
வளத்தை உணர்ந்ததினால்
தாழ்ப்பாளைப் போட்டுவிட்டேன்
தடம்புரளும் காதலுக்கு!

———————————

11. மனம்(1982)

நித்தமொரு பித்தமுடன்
சித்தமதில் சீழ்பிடித்து
கத்தும் கடல்போல் வீணில் வாழும்- வாழ்வில்
சத்தமின்றி ஓய்ந்துமெல்ல சேரும்- மனம் சோரும்!

நத்தமென்றும் கொத்தமென்றும்
நாள் முழுக்க ஏர்பிடித்து
சுத்த சன்மார்க்க நெறிபேசும்- பொய்மை
வித்தகங்கள் மறைத்து நோகும் – மனம் நோகும்

நீதி நெறி வேதமென
பாதிவிழி பார்வைகளில்
சோதியொளி முகம் முழுக்கக் காட்டும் -உள்ளே
சாதி மத சச்சரவில் ஊறும்- மனமூறும்

ஆதியெண்ரும் அந்தமென்றும்
வீதிகளில் சேதமின்றி
பாதியுடல் தந்தவனைப் பாடும்- வீட்டில்
நாதியின்றி வாழ்பவளைச் சாடும்- மனம் சாடும்

செறிகின்ற ஞானத்தில்
சிறக்கின்ற கூர்மதியை
அறிகின்ற ஆற்றலின்றி வாழும்- பிறர்
எறிகின்ற சொற்களிலே வாடும்_ மனம் வாடும்

அறிவின்றி ஓலமிட்டு
குறியின்றி கோலமிட்டு
சொறிகின்ற இச்சைகளில் வீழும்- விதித்த
நெறியென்று வெறும் கதைகள் பேசும் -மனம் பேசும்!

—————————–

12. பேசாதிருமனமே(1980)

இரத்தத்தின் இரத்தங்களும்
இரசவாத நடனமிட
கச்சைகள் கட்டிடுவர்
கலங்காதிரு மனமே

காவிக்குப் பல்லிளித்து
கருத்துக்கு முகங்சுளிக்கும்
பாவிகள் சாதகத்தை
படியாதிரு மனமே

உள்ளத்தில் சிறுமைகளை
உரமிட்டு வளர்த்தவர்கள்
கள்ளத்தால் கதையளப்பர்
கலங்காதிரு மனமே

நட்பென்று வந்திடுவர்
நலங்கெட பொய்யுரைப்பர்
விலங்கினும் கீழினங்கள்
விலைபோகாதிரு மனமே

பிட்டுக்கு மண்சுமந்து
பிரம்படி பட்ட ஈசன்
கட்டைக்கும் நாள்குறிப்பர்
கலங்காதிருமனமே

எதிர்வீட்டுத் தமிழனை
எட்டியுதைத்துவிட்டுப்
பிறவித் தமிழுக்கென்பர்
பேசாதிருமனமே!

———————————

 


Advertisements
பின்னூட்டங்கள்
  1. Nayagar சொல்கிறார்:

    நினைப்பது விதைப்பது நிலைப்பது கவிதை என செந்துறை முத்து சொல்வார்.
    கவிதைகள் என்றுமே இனிமை தான். தொடர வாழ்த்துக்கள்.
    பாராட்டுக்கள்

  2. "ஜோதி" (ஜெயபால்) சொல்கிறார்:

    மார்த்தா ஹரியின் விமர்சனம் நாவலை உடனே படிக்கத்தூண்டுகிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s