அழுவதும் சுகமே – தொகுப்பு (1980)

 

  1. தியானத்தைத் தேடி ….

thiyanam

உலகின் பிடியை  உதறிச் செல்வது

தியானமென்று தெளிந்திட வேண்டாம்!

இயற்கை ஏட்டின் எல்லா பக்கமும்

உள்ளம் வருடும் உருத்திராட்சமே !

 

ஈரக்காற்று இதயம் சீண்ட

கடற்கரை மணலில்

கால்களைப் புதையுங்கள் !

 

ஆடைகட்டிய பாலென ஒளிரும்

அழகு நிலாவை

மேகக் கரைசலில்

மெதுவாய்த் தேடுங்கள் !

 

புல்லின் நுணிகளில்

தபசுகள் செய்யும்

மெல்லிய பனியின்

எல்லையைத் தொடுங்கள் !

 

மழைக்குப் பின்னே

மரத்தடி ஒதுங்கி

வீசும் காற்றில்

விசிறும் துளிகளில்

உள்ளம் சிரிப்பதை

உணர்ந்து பாருங்கள் !

 

நீரின்பரப்பினை

நெருங்கிய கிளையின்

இருக்கையிலமர்ந்து

நீரைக் கால்களால்

நீவிப் பாருங்கள் !

tree-river-3

உலகின் பிடியை

உதறிச் செல்வது

தியானமென்று

தெளிந்திட வேண்டாம்!

 

மானிட வாழ்வின்

மகத்துவம் எல்லாம்

வேதம் ஓதிடும்

போதிமரங்களே !

 

கனவும் நனவும்

விடிவும் முடிவும்

விழிப்பும் உறக்கமும்

சிரிப்பும் அழுகையும்

பார்க்கும் பார்வையும்

வேர்க்கும் உறவும்

ஆர்த்திடும் சுகமும்

நீர்த்திடும் சோகமும்

தியான பாதையின்

தெளிந்த சுவடுகள் !

Traces de pieds

2. உறவு வேண்டும்…..

baby-birds_5

வானத்து சல்லடையில் மேகமாவை

வைத்தழுத்த சேமியாபோல் சாரலிட்டு

வாணலெனும் பூமிதனில் குதித்தே ஓடி

வட்டமிட்டுப் பின்னொளியும் காட்சிகண்டு

போனகதை வந்த கதை பேசும் நாவின்

பொய்கழுவ ஓர்துளியை வாங்கிக்கொண்டு

ஆனமட்டும் குடைபிடிக்கும் மரத்தை நாடி

அடியொற்றி நின்றிருந்தேன் அப்போதங்கே

 

கானமென குரல்கொடுத்து குஞ்சுரெண்டு

கருணைமனு போட்ட தொரு கூடிருந்தே!

ஏனழுதாய் ஏனழுதாய் என்றவாறு

எங்கிருந்தோ வந்த தொரு  தாய்ப்பறவை

தேனமுதாய்த் தித்திக்க க் குக்கூவென்று

தேடுகின்ற பிஞ்சலகின் தேவைபோக்கும்

ஏனழுதேன் நானறியேன் இவ்வுலகம்

ஏற்றமுற தாயுள்ளம் வேண்டும் ! வேண்டும் !!

 

ஊனமுற்ற மக்களினம் எழுந்து நிற்க

உறவாடித் தோள்கொடுக்கும் உள்ளம் வேண்டும்!

நாணமுற்று எலும்புகளில் உயிர்மறைத்து

நடமாடும் மனிதருக்கு உறவு வேண்டும்!

வீணருக்குக் குடைபிடித்து வாழ்விழக்கும்

விதியற்ற மனிதருக்கு உறவு வேண்டும்

பூணற்ற வாழ்வுதனில் நாளும் வாழும்

போக்கற்ற உயிர்களுக்கு உறவு வேண்டும் !

index


3. ஒன்றோடு மற்றொன்று….

 

poster-altes-ehepaar-geht-gemeinsam-auf-langer-baumallee-spazieren-312478

நீரோடு கோபித்து வேரென்ன செய்யும்

நெருப்போடு கோபித்து திரியென்ன செய்யும்

சீரோடு கோபித்து புகழென்ன செய்யும்

செருப்போடு கோபித்து காலென்ன செய்யும்!

 

உயிரோடு கோபித்து  உடலென்ன செய்யும்

உயர்வோடு கோபித்து உழைப்பென்ன செய்யும்

உணவோடு கோபித்து வயிறென்ன செய்யும்

உறவோடு கோபித்து அன்பென்ன செய்யும்!

 

மணத்தோடு கோபித்து மலரென்ன செய்யும்

மடியோடு கோபிய்த்து பாலென்ன செய்யும்

மனதோடு கோபித்து நிலவென்ன செய்யும்

மழையோடு கோபித்து நிலமென்ன செய்யும்!

 

எழுத்தோடு கோபித்து ஏடென்ன செய்யும்

எண்ணோடு கோபித்து கணக்கென்ன செய்யும்

விழுதோடு கோபித்து  ஆலென்ன செய்யும்

விண்ணோடு கோபித்து முகிலென்ன செய்யும்!

 

வில்லோடு கோபித்து அம்பென்ன செய்யும்

சொல்லோடு கோபித்து மொழியென்ன செய்யும்

கல்லோடு கோபித்து உளியென்ன செய்யும்

கண்ணோடு கோபித்து ஒளியென்ன செய்யும்

 

கன்றோடொரு பசுபோலவே நின்றானது வாழ்க்கை

நன்றோவென நின்றோதலால்   நன்றாகுமோ வாழ்க்கை

ஒன்றோடு மற்றொன்று உறவாவது வாழ்க்கை

என்றாகிய இறைத்தீர்ப்பில் மறை ஆவது வாழ்க்கை !

images


 

4. எத்தனை முகங்கள்… எத்தனை முகங்கள்….

eththanai mukangkal

நேற்றைய கனவில் நீங்கா முகமும்

நெடுநாளாக தேடும் முகமும்

சோற்றுவாழ்வில் சுகப்படும் முகமும்

சொந்தம் வேண்டாம் சொல்லிடும் முகமும்

 

ஏக்கக் கேணியில் இறங்கிய முகமும்

ஏப்பம் கண்களில் நிறுத்திய முகமும்

எல்லாம் எனக்கே என்றிடும் முகமும்

எல்லாம் தனக்குள் பேசிடும் முகமும்

 

கூடும் முகமும் குலவும் முகமும்

குறைகளை நிறைவாய்க் காட்டும் முகமும்

வாடும் முகமும் வணங்கும் முகமும்

வாழ்வுக்காக ஏங்கும் முகமும்

 

இன்றைக்கொன்று நாளைக்கொன்று

எந்த முகத்தைச் சொந்தம் இழக்கும்

முகத்தினைத் தேடி மொய்க்கும் கண்களை

உதறும்போதுது உள்ளம் சிலிர்க்கும்

மனதின் நிறத்தை முகத்தில் தெளிக்கும்

மந்திரத் தூரிகை மகிமையில் சிரிக்கும்…

 

எத்தனை முகங்கள் எத்தனை முகங்கள்…

mukangal


 

5 .  பிழைக்கத் தெரிய  வேணும் கிளியே !

pizaikka

பட்டு நூல்களைத் தொட்டு, உணர்வு

இட்டுக் கற்பனைக் கோர்த்து

ஒட்டும் வண்ணத்துப்பூச்சி, அழகு

இட்டு படைத்தவன் அங்கே !

‘இட்டச் சேலைகள் காட்டி, எங்கள்

இதயம் பூத்திட வைத்தீர், எனப்

பட்டமும் பெருமையும் பெற்று,  நல்ல

துட்டு சேர்ப்பவர் இங்கே !

 

வாட்டும் நெருப்பில் வெந்து, நல்ல

வாய்க்கினிய கறிகள் செய்து, சுகம்

ஊட்டும்  சுவைபல சேர்த்து, நள

விருந்து சமைப்பவன் அங்கே !

கோட்டும் சூட்டுமாய் வந்து, நன்கு

கேட்டு வாங்கி மிக உண்டு, ஏப்பம்

மீட்டும் இடைவெளியிற் சற்றே, விருந்து

வீட்டை புகழ்பவர் இங்கே !

 

பாட்டு தந்தவன் ஒருவன், வண்ணப்

படம் பிடிப்பவன் ஒருவன், மெருகு

ஊட்டும் திரைக்கதைக்கொருவன், எனக்

கூட்டு முயற்சிகள் அங்கே !

சாட்டை சொடுக்கும் அழகும், நடிகன்

சண்டை போடும் அழகும், கண்டு

கூட்டம் புரளுது இங்கே, அவனைக்

கும்பிட உருளுது இங்கே !

 

தஞ்சை பெரிய கோயில், அழகு

தாஜ் மகால் ஒத்த சான்றும், எழ

நெஞ்சைப் பிளந்தவர் கோடி, அவர்

நினைவில் நிற்பதில்லை கிளியே !

உழைக்க மட்டும் தெரிந்தால்-உன்னை

ஒதுக்கி மிதித்துப் பிறர் உயர்வார்

பிழைக்கத் தெரியவேணும் கிளியே நன்கு

பேசத் தெரிய வேணும் கிளியே !

3


6. இன்றாவது மழை வருமா…?

 

mazai varuma

கழுவெளி கரிசல்  கத்தரி வெயிலில்

புழுதிபடிந்து அழுது வடிந்திடப்

பழுத்தக் கோரையில் முகத்தைச் சொரியும்

வரிசை உடைந்த ஆடுமாடுகள்

கொழுத்தக் கழுகு பணைமர உச்சியில்

எச்சில் ஊற  இரையைத் தேடிடக்

கழுத்தை வளைத்துச் சுடலையன் மட்டும்

வானைப் பார்த்தான்

இன்றாவது மழைவருமா ?

 

குளத்திலிருந்த கொஞ்ச நீரும்

குழம்பிக்போகத் தவளைகள் மிதந்திடும்

இளைத்திருந்த மாடுகள் சேற்றில்

இறங்கி நடந்திட மூச்சு முட்டிடும்

களத்து நெல்லைப் பொறுக்கும் குருவிகள்

கானல் நீரை வீணில் தேடிடும்

களைத்துப்போன சுடலையன் மட்டும்

வானைப் பார்த்தான்

இன்றாவது மழை வருமா ?

 

வெள்ளைவானில் வேண்டா வெறுப்பில்

வந்து போகும்  இரண்டொரு மேகம்

வீசும் காற்றில் தயங்கித் தயங்கி

மார்கழி மாத விடியல் வாசனை

சுள்ளிப்பொறுக்கும் பெண்டுகள் கூடச்

சுவரெறி பந்தாய் வீடு திரும்பிட

சுருங்கியக் கண்களால் சுடலையன் மட்டும்

வானைப் பார்த்தான்

இன்றாவது மழை வருமா ?

3


7 . சாதி ஒன்றொழிய…..

sathi

 

‘ஏண்டி கனகா ! என்ன செய்யற ?’

‘ஏங்க்கா ?’

‘சாதி ஊர்வலமாம் !

சன்னாசிப்பையன்

ஆள்பிடிக்கிறான்

சங்கடப் படாம

ஐம்பது ரூவா ‘

 

‘எல்லாம் சரிக்கா

எப்படி நான்

இந்த ஒடம்போட !’

 

‘ சும்மா கிட,

எண்ணிக்கைக்காக

என்னோட வா!

வாயும் வயிறுமா

காயற கூத்தை

பேயும் அறியும் !’

 

‘நீயும் நானும்

வேற சாதிக்கா !’

 

களை எடுக்கிறோம்

நாத்து நடுகிறோம்

கஞ்சி குடிக்கிறோம்

அஞ்சி வாழறோம்

கட்டினவனுக்கு முந்தானை

விரிக்கிறோம் !

காலமெ எழுந்து கொல்லையில்

ஒதுங்கறோம் !

எங்கே நமக்குள்

சாதி வந்தது ?

 

போடி போடி போக்கத்தவளே

தேடும் பொழைப்புக்குச் சாதி ஏதடி ?

3


8.சின்னப்பிள்ளை…..

chinnapillaivajpayee

 

அன்னக்கிளியின்

அக்காள் வடிவில்

சின்னப் பிள்ளை நீ

செய்தியில் வந்தாய்

என்னை மயக்கிய

மதுரை சொக்கியே

இம்புட்டு உசரம்

எப்படிப்போனாய் ?

 

வெற்றிலைப் பாக்கும்

விரலில் சுண்ணாம்பும்

புகையிலைக் காம்பில்

புரளும் வார்த்தையும்

முற்றும் துறந்து

முளைத்தது எப்படி ?

 

குட்டை அட்டை

குணத்தவரிடையே

பெட்டை நீயும்

பிறந்தது எப்படி ?

 

கூலி எறும்புகள்

குறைகளைப்போக்க

ஆலைக் கரும்பாய்

ஆனது எப்படி ?

 

இலுப்பைப் பூக்களைச்

சர்க்கரை என்று

எண்ணிடும் ஊரில்

வந்திடு தாயி !

காதில் பாம்படம்

கண்டாங்கியென்று

கள்ளிக்காட்டைக்

காக்கும் மாரியோ ?

 

இந்திய நாடே

காலில் விழுந்திட

எத்தனை தவமோ ?

3


9.ஆக்கினைக்குத் தண்டனிடும்….

 

Akkinai

 

அவன்:

 

சித்திரைவெக்கையில நித்திரையை நான் தொலைக்க

சிறுக்கியே, கருக்கலிலச் சீண்டிடக் குளிர்ந்தவளே

 

வைகாசி மாசத்துல வன்னிப்பட்டு சந்தையில

கைகாசு நானிட்ட கைமுறுக்கில் சிவந்தவளே

 

ஆனிப் பொழுதொருநாள் அந்தி சாயும் நேரத்துல

நாணி முகம்புதைத்து சாடைப்புரிந்தவளே

 

ஆடிச் செடலுக்கென ஆசைபட்டு வாங்கிவந்த

அரக்கு சீலையில முறுக்கி நடந்தவளே

 

ஆவணியும் புரட்டாசியும் தாவணியில் பாட்டெழுத

அச்சார இச்சொன்று அடியுதட்டில் தந்தவளே

 

ஐப்பசியும் கார்த்திகையும் எம்பசிய கூட்டிவைக்க

அருக்காணி தோப்போரம் நீ இட்டவிருந்தெங்கே?

 

மார்கழியும் தையும் மனசெல்லாம் கரும்பாக்கி

மார்தட்டி சுகம்பிழிந்து மயன் தந்த வாழ்வெங்கே?

 

மாசியும் பங்குனியும் மனசுக்குள் மத்தாப்ப

வீசிக்குதித்த வேளையெல்லாம் போனதெங்கே?

 

அவள்:

 

மாச வருசமெல்லாம் மாமாங்கமாயிருக்கு

வேசம் அறிந்ததில்ல வேறுபட்டு நின்றதில்ல

 

சாதி, மதமின்னு சந்தியில நிக்காம

நீதிக்கு உழைச்சிருந்தா நெஞ்சினிலே ஈரம் வரும்

 

காசுபணமிருந்தா காரியங்கள் சித்திபெறும்

ஆசை பாசமெல்லாம் ஆக்கினைக்குத் தண்டனிடும்

3


 

10.ஐயனூரு கள்ளுக்கு….

d465753b23c0b1435a654b26b1add0cc

வருசம் பூராவும்

வாழ்க்கை வறண்டாலும்

புருஷனும் பொஞ்சாதியும்

கருமம் மறப்பதில்லை

 

கடைசிப் பொண்ணுக்கு

காதுகுத்தல் வச்சாச்சு

கடாவெட்டி சோறுபோடக்

கடுதாசிப் போட்டாச்சு

 

வட்டிப்பணத்துக்கு

வாங்கிவந்த கடாவும்

வடக்குவெளிகொல்லைக்கு

வச்சிருந்த வெத நெல்லும்

வந்திருந்த சாதிசனம்

வாய்மணக்கும் சோறாச்சு

 

மொய்யில வந்த பணம்

மொடைக்கு உதவுமுன்னு

தையல் மரிக்கொழுந்து

தவிட்டில் வச்ச பணம்

ஐயனூரு கள்ளுக்கு

அவ மாமன் சேர்த்தாச்சு

 

3


 

11.நம்புவதும்… அஞ்சுவதும்…

9

நஞ்சிருக்கும் நெஞ்சினிலும்

நலமிருக்கும் நம்புகிறேன்

கொஞ்சலிடும் உறவினிலும்

நஞ்சிருக்கும் அஞ்சுகிறேன் !

 

வஞ்சகரின்  வலைவிரிப்பில்

வாழ்க்கை உண்டு நம்புகிறேன்

தஞ்சமிடும் மனிதர்களின்

தாழ்வுகண்டு அஞ்சுகிறேன் !

 

உயிர்க்கொல்லி விடத்தினிலும்

உயிர்பிழைக்கும் நம்புகிறேன்

உயிர்காக்கும் மருந்தினிலும்

உயிரிழக்கும் அஞ்சுகிறேன் !

 

எறும்பிருக்கும் புற்றினிலும்

இரையிருக்கும் நம்புகிறேன்

கரும்பிருக்கும் தோட்டத்திலும்

கள்வருண்டு அஞ்சுகிறேன் !

 

பருந்திருக்கும் கூட்டினிலும்

உறவிருக்கும் நம்புகிறேன்

விருந்திருக்கும் வீட்டினிலும்

பகையிருக்கும் அஞ்சுகிறேன் !

 

பரத்தையர்கள் வாழ்வினிலும்

பண்பிருக்கும் நம்புகிறேன்

பத்தினிகள் நாடகத்தில்

வன்பிருக்கும் அஞ்சுகிறேன் !

 

கொம்பிருக்கும் விலங்கிடத்தும்

குணமிருக்கும் உண்மையடி

நம்புவதும் அஞ்சுவதும்

நாம் வகுத்த எல்லையடி!

3


 

12. எப்படி… எப்படி…

 

feb71cd79d030b7d2251649e912969e2--poem-penne

 

ஏரிக்கரை

இறைந்திட்ட பணைமரங்கள்

பணைமரங்களிடை

பதுங்கி எழுவது

உறங்கப் போகுமுன்

ஒளிவிடும் சூரியன்

என்றிருந்தேன்.

 

நிலவாய் நீ

சில

நட்சத்திரங்களுடன்

 

வேட்டியை இழுத்துச்

சட்டையைச் சரிசெய்து

சிற்சில  சேட்டைகள்

செய்தேன் பெண்ணே!

 

நீ…. என்

பசித்த விழிகளைப்

பார்த்து ஒதுங்க

ஏக்கத்துடன்

ஏரியின் நீரில்

கடைசியாய் ஒருமுறை

கல்லை எறிந்தேன்.

 

‘ களுக்‘ என்றது

தண்ணீரல்ல

பெண் நீ(ர் ) என்றதால்

நெஞ்சம்  நனைந்தது.

 

மிச்சம்வையுங்கள்

சொன்னவள் நீ`

நானோ

எச்சில் விழுங்கினேன்.

 

காதல் நஞ்சினால்

என்

கண்கள்சோர

பச்சிலை விழியால்

பதமாய் முறித்தாய்.

how-to-draw-eye-final-min

 

ஊரில் திருவிழா

உலாவரும் அம்மன்

ஆராதனைக்காக

அடைந்திடும் உன்

வாசலை .

நாயனக்காரர்

நலம்தானா, வாசிக்க

நடிகர் திலகமாய்

நான் !

 

ஒவ்வொரு நிமிடமும்

யுகமாய்க் கழியும்

உறக்கம் பதுக்கி

உறவில் பதுங்கி

இரவை விலக்கி

எழுந்து வருவாய்!

 

ஒவ்வொரு அடியிலும்

உனக்குள் அச்சம் !

காரணம் அறிவேன்

நீ

கால்களைப் பதிப்பது

என்

கண்களில் அல்லவா?

 

ஒட்டுத் திண்ணையில்

ஒதுங்கிய தூணில்

எட்டாய் வளைந்து

என்னைத் தேடுவாய் !

வளைக்கரம் கொண்டு

வார்த்தையாடுவாய் !

how-to-draw-eye-final-min

 

வாடிய பயிராய்

வருவேன் உன்னிடம்

பார்த்தும் பாராமல்

ஆலம் விழுதில்,

ஆடிடும்  ஊஞ்சலில்

தாழம் பூவைத்

தலையில் சூடிய

கரிய பின்னலைக்

கைகளில் ஏந்தி

கோலமிடுவாய்

கொஞ்சும் கால்களால்!

உள்ளம் சுரக்கும்

உணர்வுக் காதலில்

மெள்ள வருவேன்

உள்ளம் தொடுவேன்

என்

உஷ்ண மூச்சை

உணர்ந்தோ என்னவோ

நீ

ஓடிமறைவாய்!

how-to-draw-eye-final-min

அன்று

உடைந்த மதகில்

உன்றன் நினைவில்

ஊர்வலம் முடித்து

உட்கார்ந்திருந்தேன்

மெல்லியவாசம்

மெதுவாய் என்னிடம்

வளைக்கரமிரண்டு

வளைத்திட முயல

உன்னையறிந்து

ஊமையாயிருந்தேன்

how-to-draw-eye-final-min

எனக்குள் ஒருபொறி

என்ன நேர்ந்தது.?

வந்தேன்  நின்றேன்

உன்

வாசலில் கூட்டம்

இறந்தாயாம் நீ

எப்படி? எப்படி?

 

7


13. கண்விழித்து உறங்கிடுவேன்!

 

kanvizithu

 

கண்சொடுக்க நான் கலைந்தேன்

கனி இதழில் ஊண் மறந்தேன்

நுனி மூக்கு மூலிகையில்

நோய் தீர்க்கும் வகை அறிந்தேன் !

 

அதிகாலை கண்விழிப்பில்

ஆடையவள் திருத்திமெள்ளக்

குதிபோட்டு வந்திடுவாள்

துதிபாட நான் வருவேன் !

 

உச்சிவெயில் சூரியனாய்

உறவாடி அவள் முகத்தில்

எச்சிலிடும் வியர்வையிலே

இறங்கியல்லோ குளித்திடுவேன் !

 

மழைத் தூறல் நீர்முத்தாய்

மலர் முகத்திலே  இறங்கி

கழைகூத்து ஆடிடுவேன்

கைத்தட்டல் பெற்றிடுவேன் !

 

எதிர்வீட்டு மழலையிடம்

இரவலுடல் பெற்றிடுவேன்

அதிகாரமாய் அவள் மடியில்

அரசாட்சி செய்திடுவேன் !

 

மருதாணி இலைகளிடை

மாலைவரைக் காத்திடுவேன்

கைபட்டுச் சிவந்திடுவேன்

கறையாக உவந்திடுவேன் !

 

காற்சுவட்டில் பாய்விரித்து

கார்கூந்தல் தலை அணைத்து

கனிமார்பு தாலாட்டில்

கண்விழித்து உறங்கிடுவேன் !

3

14.மழையின் கால்கள்…….

photo-of-rain3

 

தடதடவென

மத்தள இடிகள்

தம்புராச் சுருதியில்

தனிச் சுழற்காற்று

வான ராணியின்

வாயசைவிலே

சலசலவென

சங்கீத மழை

நீர்க் கோடுகளாய்

நிலத்தில் இறங்கும் !

 

இலையும் கிளையும்

துளிகளை வாங்க

இன்பச் சுகத்தின்

இறுதியில் வேர்த்து

நின்று மூச்சிடும்

மரத்தின் காலகள் !

 

குக்கூவென்றும்

அக்கோவென்றும்

குளறும் மொழியில்

குளிரும் மழையில்

கூடத்துடித்திடும்

கொஞ்சும் கால்கள் !

 

தாழங்குடையில்

தலையை வாங்கி

வீழும் துளிகளை

விரலால் வழித்து

உழவுமாட்டுடன்

ஓடும் கால்கள் !

 

மழையில் நனைந்த

மகிழ்வுடன் கன்று

தாய்ப்பசு மடியில்

தலையைத் துவட்டத்

தாய்மை சுகத்தில்

தவித்திடும் கால்கள்!

 

சவுக்கு மரங்கள்

சாய்ந்திட அந்தச்

சத்தம் கேட்டுப்

பெண் முயல் விலக

அச்சம் தவிர்க்கும்

ஆண்மையின் கால்கள்!

 

களையை முடித்து

மழையில் நனைந்து

முந்திக்குடையில்

முகத்தை மறைத்துக்

கனத்த மார்புடன்

பிணக்கும் கால்கள்!

 

கொட்டும் மழையில்

கூச்சிலட்டோடி

மூக்குச் சளியை

முழங்கை வாங்க

ஆட்டம் போடும்

அறியாக் கால்கள் !

 

மழையின் கால்களில்

மகத்துவம் தேட

ஒழுகும் துளிகளின்

ஊடே புகுந்தேன்

காலடி மழையில்

கரைந்து ஒளிந்து

தாளடி இயற்கை

தருமம் அறிந்தேன் !

புல்வெளி

 


 

15.அழுவதும் சுகமே

 

azuvathum.jpg

அழுவதில் சுகமாம்

கவிஞன் சொன்னான்

விழும்போதெல்லாம்

பழகிப் பார்க்கிறேன்

பிறந்தபோது

பேய்க்குரலிட்டு அழுததாக

அத்தை ஒருத்தி

அடிக்கடி சொல்வாள்!

 

அழுதபிள்ளைதான்

பால்குடிக்கும் – என்ற

அட்சரம் தெரிந்து

பீச்சிய பாலின்

வீச்சம் சுவைத்து

வீங்கிய மார்பில்

தூங்கி அழுதவன்!

 

அம்மா அருகே

தூங்கும் வயதில்

பாதி ராத்திரியில்

பாயை நனைத்து

மீதி ராத்திரி

அழுது ஓய்ந்தவன்!

 

பள்ளியில் வீட்டில்

கொல்லையில்

கொடுக்காபுளி

மரத்தின் அடியில்

கொடுக்கல் வாங்கல்

பிரச்சினைக்காகத்

தோற்றவன் –  நான்

துவண்டு அழுவேன்!

 

வளர்ந்தபிறகு

வாய்விட்டு அழுவது

மண்ணில் குமரர்க்கு

மரியாதை இல்லையாம்

கண்ணைத் துடைத்துக்

கலங்கியிருக்கிறேன்

உள்ளத்துக்குள்ளே

உடைந்து இருக்கிறேன்!

 

கண்ணைக் கசக்கி

என்னுள் புதைந்து

பின்னும் வார்த்தையில்

பேசிடும் மனைவியின்

அழுகைக்குள்ளே

தொழுகை நடத்துவேன்!

 

அழுவதன் இலக்கணம்

அறிந்தவர் அழுதால்

பழுதில்லாமல் பரிவுகள் நீளும்!

 

அழுதபின் நெஞ்சில்

வழிகள் திறப்பதும்

குபுக்கென அங்கே

குறைகள் சரிவதும்

உடைந்து உதிரும்

கண்ணீர் மருந்தில்

சோகக் காய்ச்சல்

சொஸ்தமாவதும்

அடடா

சுகமே சுகமே

அழுவதும் சுகமே!

azuvathum